ஆடைகளால் மீட்கலாம் இயற்கையை!

By பிருந்தா சீனிவாசன்

உலகில் பல நூறு ரகங்கள், பல்லாயிரம் வண்ணங்கள். விதவிதமான ஆடைகள் நாம் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கின்றன. இப்படி நம் உடலை அழகுபடுத்தும் ஆடைகள், மற்றொருபுறம் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக இருப்பது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

என்றைக்குப் பழமையை ஒதுக்கிவிட்டுப் புதுப்புது தொழில்நுட்பங்களில் இறங்கினோமோ, அன்றே இந்தப் பூமிப்பந்துக்கு தீங்கிழைக்க ஆரம்பித்துவிட்டோம். இயற்கை வழிமுறைகள் வேகமற்றவை என்றாலும், மிகவும் பாதுகாப்பானவை. செயற்கை நடைமுறைகள் சில நொடிகளில் நடந்து முடிந்துவிடுகின்றன. ஆனால், அவை ஏற்படுத்தும் விளைவுகளும் விபரீதங்களும் அதிகம். ஆடை தயாரிப்பிலும், இதுதான் நடைபெற்று வருகிறது.

செயற்கை இழை உற்பத்தியிலும் செயற்கை சாயத் தயாரிப்பிலும் பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த ரசாயனங்களால் நீரும் நிலமும் மாசுபடுகின்றன. ஆனால், நம் முன்னோர்கள் நமக்குத் தந்து சென்ற இயற்கை இழைகளிலும் சாயங்களிலும் ரசாயனத்தின் சேர்க்கை, துளிகூட இல்லை. மண்ணுக்கும் மனிதனுக்கும் நல்லதே செய்யும் இயற்கையின் கொடைகளை, ஆடை தயாரிப்புத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இயற்கை இழை

நமக்கு எல்லாவற்றையும் தரும் இயற்கையைக் காக்கும் நோக்கில், இயற்கை இழைகள், இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி இன்றும் சிலர் ஆடை தயாரித்து வருகிறார்கள். இந்த ஆடைகளில் செயற்கையின் தடம் கொஞ்சமும் இல்லை. எல்லாமே கைவினைத் திறன் மிகுந்த கைத்தறி ஆடைகள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இயற்கை இழைகளைப் பயன்படுத்திக் கடந்த 14 ஆண்டுகளாக ஆடைகளை நெய்து வரும் சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த சேகர். அனகாபுத்தூர் இயற்கை நல நெசவாளர்கள் கைவினைப் பொருட்கள் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான இவர், புதுப்புது இயற்கை இழைகளைக் கண்டறியும் பரிசோதனைகளில் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். மரவள்ளிக்கிழங்கு தாவரத்தின் காய்களில் இருந்து கிடைக்கும் பஞ்சு மூலம் நூல் நூற்று, ஆடை தயாரித்திருப்பது இந்தக் குழுமத்தின் சமீபத்திய சாதனை. அனகாபுத்தூரில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இந்தக் குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

"இயற்கை நம் அன்னை. அதை அழித்துவிட்டால் நமது சந்ததிகள் எப்படி உயிர்வாழ முடியும்? இதை நன்கு உணர்ந்தே இயற்கை இழை ஆடைகளைத் தயாரித்து வருகிறோம்" என்று சொல்லும் சேகர், பாரம்பரிய நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு வாரப் பத்திரிக்கையில் படித்த செய்திதான் இயற்கை இழைகளின் மீது ஈடுபாடு கொள்ளத் தூண்டியது என்கிறார்.

"ஒரு முறை பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது ராமாயண நிகழ்வைப் பற்றி சொல்லியிருந்தாங்க. சீதையை ராவணன் அசோகவனத்தில் வைத்திருந்தபோது, அவருக்கு மாற்று உடை தேவைப்பட்டதாம். அப்போது வாழை நாரில் இழையெடுத்து ஆடை நெய்ததாக, அதில் சொல்லப்பட்டிருந்தது. எந்தத் தொழில்நுட்ப வசதியும் இல்லாத, அந்தக் காலத்திலேயே இயற்கை இழைகளில் ஆடைகள் தயாரித்திருக்கும்போது, நம்மால் ஏன் முடியாது என்று யோசித்தேன். தொடர்ந்து அது பற்றித் தகவல்களைத் தேடினேன். என் முயற்சிகள் வெற்றிபெற்றது, உற்சாகத்தை இரட்டிப்பாக்கியது" என்று சொல்லும் சேகர், ஆரம்பத்தில் சணல், வாழை நார் போன்றவற்றில் இருந்து ஆடைகளைத் தயாரித்திருக்கிறார்.

விதவிதமான இழைகள்

கல்லூரி மாணவர்களின் புராஜெக்ட்களுக்கு உதவியபோது, உருவானதுதான் மரவள்ளிக்கிழங்கு காயில் இருந்து எடுக்கப்பட்ட இழை. மேலும் கற்றாழை, மூங்கில், அன்னாசி இலை ஆகியவற்றின் இழைகளில் இருந்தும் ஆடைகள் தயாரிக்கிறார்கள்.

“தீமை பயப்பதாகக் கருதப்படும் வேலிகாத்தான் அல்லது வேலிக்கருவையில் இருந்து நார் எடுக்கப் போகிறோம்” அது பிளாஸ்டிக்கை விட உறுதியானது. அதிலிருந்த அடுத்த ஆடைத் தயாரிப்பை வெளியிட இருக்கிறார்கள்.

பத்திரிகை செய்தி ஒரு புதிய பாதையைத் தந்தது போல, காயப்போட்டிருந்த வெள்ளை நூலில் நாவற்பழம் விழுந்தபோது ஏற்பட்ட கறை, இயற்கைச் சாயங்கள் பற்றிய தேடலை உருவாக்கியிருக்கிறது.

"வெள்ளை நூலில் பட்ட நாவற்பழ நிறம் தண்ணீரில் கழுவியும்கூடப் போகவில்லை. அப்போதுதான் இயற்கையின் அற்புதம் எங்களுக்குப் புரிந்தது. நான் பத்தாவது வரைதான் படித்திருக்கிறேன். சாய உற்பத்தி பற்றி தெரிந்தவர்களிடமும் புத்தகங்கள் வாயிலாகவும் கற்றுக்கொண்டேன். கடலூர் காதி கிராமச் சொசைட்டியில் இயற்கைச் சாயம் குறித்த பயிற்சி பெற்றிருந்த லைலா, சாயத் தயாரிப்புக்கு வழிகாட்டுகிறார். வேப்பிலை, பூவரசம்பட்டை, வெல்லம், அடுப்புக்கரி, கடுக்காய் இவற்றை வைத்துப் புதுப்புது நிறங்களை உருவாக்குகிறோம். இப்படித் தயாராகும் ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் தீங்கு விளை விக்காதவை" என்கிறார் சேகர்.

இவர்களுக்கு இணையதளம் இருக்கிறது: www.ananafit.com. அதைப் பார்த்துவிட்டு வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கிறார்களாம்.

வெறும் ஐந்து தறிகளை வைத்துக்கொண்டு இத்தனை பரிசோதனையையும் வெற்றியாக்கி இருக்கிறார்கள். ஆனால் தங்களுடைய தொழிலை விரிவாக்கவோ, வாடிக்கையாளர்களை அணுகவோ, புதுப்புது முயற்சிகளில் இறங்கவோ போதுமான இடவசதி இல்லை என்பது இவர்களுடைய வருத்தம்.

"அரசாங்கம் தயாராக இருந்தாலும், உதவிகள் எங்களை வந்தடையப் பல தடைகள் இருக்கின்றன. இந்தத் தொழிலை நம்பித்தான் பல நூறு குடும்பங்கள் இங்கே வாழ்கின்றன. மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்" என்று தங்கள் தேவையை முன்வைக்கிறார் லைலா.

இயற்கையின் சுவாசத்தைச் சீர்படுத்தும் பணியில் இருக்கும் இவர்களுக்கு நம்மாலும் நிச்சயம் உதவ முடியும். செயற்கை இழைகளைத் தவிர்த்து, நம் பாரம்பரிய ஆடைகளை அணிவதும் அதில் ஒன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்