ரசாயன குப்பைத் தொட்டியாகும் மனித உடல்

By தேவிகாபுரம் சிவா

"ஒரு மிகப்பெரிய தங்குதடையற்ற வேதிச் சோதனைகளுக்கு உட்பட்ட கினியா பன்றிகளாக நாம் இருக்கிறோம். இதன் நாசகரமான பின்விளைவுகளுக்கு, நமக்குக் கிடைத்துள்ள பிணியும் சாக்காடும்தான் அளவுகோல்கள்" என்று வேதிப்பொருள் மாசுபாட்டின் தீவிரம் குறித்து எச்சரிக்கிறார் சூழலியல் நிபுணர் டாக்டர் ரிக் ஸ்கைத்.

நம் ஒவ்வொருவர் ரத்தத்திலும் இன்றைக்குச் சுமார் 300 தொழிலக வேதிப்பொருட்கள் கலந்துள்ளன என்கிறது ஒரு ஆய்வறிக்கை. நமது உடல்கள் வேதி தொழிற்சாலைகளின் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் என நாம் சார்ந்துள்ள அனைத்தும் நமக்குள் வேதிப்பொருட்களை மறைமுகமாகச் செலுத்தி வருகின்றன. சந்தைப் பொருளாதாரமும் நுகர்வு கலாச்சாரமும் இதைத் தீவிரப்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் மாசடைந்த மனிதர்களாக்கி வருகின்றன.

பிறக்கும் குழந்தைகளையும் கருவில் வளரும் குழந்தைகளையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை. பிறக்கும் குழந்தையின் உடலில் 200க்கும் அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டனில் இருந்து செயல்படும் சுற்றுச்சூழல் பணிக் குழு என்ற அமைப்பின் 2005ஆம் ஆண்டின் அறிக்கை, செயற்கை வேதி பொருட்களால் தாக்கப்படுவது கருவறையிலேயே தொடங்கிவிடுகிறது என்கிறது. இக்குழு 2004 ஆகஸ்ட், செப்டம்பரில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. பிறந்த 10 குழந்தைகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்துச் சோதித்தபோது ஒவ்வொரு குழந்தையின் ரத்தத்திலும் 200 தொழிலக வேதிப்பொருட்களும் மாசுபடுத்திகளும் இருப்பது தெரியவந்தது.

குழந்தைகளின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட, பிறகு அதிலிருந்து ரத்தத்தை எடுத்து ஆய்வு செய்தபோது அதில் அடங்கியிருந்த வேதிப்பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்யப்பட்ட தொழிலக வேதிப்பொருட்கள், ஒட்டாத டெஃப்லான் வகை வேதிப்பொருட்கள், துரித உணவை அடைக்கும் பெட்டி உற்பத்தி, ஆடை உற்பத்தி போன்ற தொழில்களில் எண்ணெய்ப் பிசுக்கை நீக்கும் பெர்ஃப்ளோரோ வேதிப்பொருட்கள் போன்றவை தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்தன. அந்த வகையில் 413 செயற்கை வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வேதிப்பொருட்களில் பெரும்பான்மையானவை புற்றுநோயையும் மூளை நரம்புமண்டலப் பிரச்சினைகளையும் வளர்ச்சிக் குறைபாடுகளையும் உருவாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன.

சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடையும் உண்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. மனிதக் குலம் இன்றைக்கு உருவாக்கி வைத்துள்ள மாசடைந்த சுற்றுச்சூழல், பிறந்து முதல் சுவாசத்தைக்கூடத் தொடங்காத சிசுவின் உடலை அபாயகரமான வேதிப்பொருட்களின் குப்பைக் கூடையாக்கி இருப்பது அறம்சார்ந்த அறிவியல், வளர்ச்சி காணாமல் போய்விட்டதைக் காட்டுகிறது.

- தேவிகாபுரம் சிவா, சுற்றுச்சூழல் ஆர்வலர், தொடர்புக்கு: devikapuramsiva@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

16 mins ago

சினிமா

29 mins ago

விளையாட்டு

35 mins ago

சினிமா

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

47 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்