தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 26: காற்றுக்கு வேலி தேவையா?

By பாமயன்

கப்பலுக்கு நங்கூரம் இடலாம், ஆனால் காற்றுக்குக் கடிவாளம் போட முடியாது. பண்ணை வடிவாக்கத்தில் வெயிலைப் போலவே, காற்றின் பங்கு மிகவும் உறுதியானது. சூழலை மாற்றியமைப்பதில் காற்றின் வேகம் தீர்மானகரமான வேலையைச் செய்கிறது. அதேநேரம், காற்றை ஓரளவுக்கு மேல் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. வெப்பத்தையும் வெளிச்சத்தையும் காற்றால் கட்டுப்படுத்த முடியும். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு வெப்பத்தைக் கடத்த முடியும். பயிர்களில் மகரந்தச் சேர்க்கையைப் பாதிப்பதில் காற்று முக்கியப் பங்கு வகிக்கிறது.

வேகம் பாதிக்கும்

மணிக்கு எட்டு கிலோ மீட்டர் வேகத்துக்குள் காற்று வீசும்போது பெரிய சிக்கல்கள் வருவதில்லை, அதை மீறிக் காற்றின் வேகம் அதிகரிக்கும்போது பல சிக்கல்கள் தோன்றுகின்றன. மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்போது பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளின் எடையும் குறையும். காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டரைத் தாண்டும்போது முற்றிலுமாகப் பயிர் சேதமடையும். வர்தா புயல் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ என்ற அளவில் இருந்தது. அதனால்தான் அவ்வளவு சேதம் ஏற்பட்டது.

காற்றின் வேகத்தால் மண்ணில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. வேகமான காற்றால் மண்ணின் மேலடுக்கில் உள்ள வளமான மட்கு அடித்துச் செல்லப்படும். இதற்கு ‘காற்று அரிமானம்’ என்று பெயர். மண்ணின் மேற்புறத்திலிருக்கும் ஈரப்பதத்தைக் காயவைக்கும் திறனும் காற்றுக்கு உண்டு.

வறண்ட வானிலை காணப்படும் பகுதியில் வீசும் காற்று, பயிர்களின் உருவ அமைப்பிலும் பல மாற்றங்களைக் கொண்டுவரக்கூடியது. குறிப்பாகப் பயிர்கள், மரங்கள் குட்டையாக ஆகிவிடும் ஆபத்து உள்ளது.

விதைப்பதும் அறுப்பதும்

தொழில்மய வளர்ச்சிக்குப் பின்னர் காற்றில் பல்வேறு ரசாயனங்கள் பவனி வரத் தொடங்கிவிட்டன. கந்தகம், நைட்ரஜன் துகள்கள் போன்றவையும், கதிரியக்கம் உள்ள இடங்களில் அணுக்கழிவு போன்றவற்றைத் தாங்கி வரும் காற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

காற்று வீசும் திசையைப் பொறுத்தும் மழை, விளைச்சல் போன்ற கூறுகள் அமைகின்றன. நம்மைப் போன்ற தெற்குலக மக்களுக்கு வடகிழக்குப் பருவக் காற்றும், தென்மேற்குப் பருவக் காற்றும் வீசுகின்றன. இதேபோல வடக்குலக மக்களுக்கு வடமேற்குப் பருவக் காற்றும், தென்கிழக்குப் பருவக் காற்றும் வீசுகின்றன. இதனால் பருவநிலைச் செயல்பாடுகள் மாறி அமைகின்றன. குறிப்பாக விதை விதைப்பது, அறுவடை செய்வது போன்றவை இந்தக் காற்றின் தன்மையைப் பொருத்தே அமைகின்றன.

தீதும் நன்றும்

கடற்கரை ஓரங்களில் வீசும் காற்று உப்பைச் சுமந்து வந்து இலைகளின் மீது தெளிக்கும், இலைகளில் உள்ள ஈரப்பதத்தை அகற்றும். பெரும் தீமை செய்யும் பூச்சிகள், வெட்டுக்கிளிகளைக்கூட அவை சுமந்துகொண்டு வந்துவிடும். இப்படிக் குறிப்பிட்ட வகை பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால், காற்று இல்லாமல் வேளாண்மை இல்லை. சில இடங்களில் நுண்ணுயிர்களின் வித்துகளைக்கூடச் சுமந்து சென்று, மற்ற இடங்களில் பரப்பும் வேலையைக் காற்று செய்கிறது.

மேகங்களைச் சுமந்து வந்து மழை கொடுக்கச் செய்வதும் காற்றுதான். அதனால் தமிழில் மழைக்கும், வேகமான காற்றுக்கும் புயல் என்று பெயர். காற்றின் வேகம் சீராக இருக்கும் இடங்களில் பெரிய சிக்கல் ஏதும் வருவதில்லை. ஆனால் கணவாய்கள் உள்ள பகுதிகளில் காற்றின் வேகத்தை முடிந்த அளவு கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோலக் காற்றடிக்கும் காலமான சித்திரை முதல் ஆடிவரையிலான காலத்தில் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும்.

காற்றுத் தடுப்பு

காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் காற்றுத் தடுப்புகளை உருவாக்க வேண்டும். மரங்கள், கட்டுமானங்கள் போன்ற முறைகளில் நமது பண்ணைக்குள் காற்று பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு விரைவாக வளர்ந்து பசுமை பரப்பும் மரங்கள் தேவை. சிங்கப்பூர் செர்ரி, ஜமைக்கா செர்ரி என்று அழைக்கப்படும் மரம் மிகவும் விரைவாக வளரும் தன்மை கொண்டது. இதன் தாவரவியல் பெயர் முண்டின்ஜியா கலபுரா (Muntingia calabura).

(அடுத்த வாரம்: காற்றுத் தடுப்பு மரங்கள், கட்டுமானங்கள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்