தலையில் மண்ணைப் போட்டுக்கொள்ளும் மனிதகுலம்

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா வந்த லண்டனைச் சேர்ந்த காலின் மான்வெல் என்பவர் கடந்த 19-ம் தேதி யானை தாக்கி இறந்தார். வருத்தமான விஷயம் இது. ஆனால், இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்.

இங்கு இரண்டு பிரச்சினைகள். ஒன்று ஊருக்குள் வரும் யானைகள். அடுத்து, காட்டுக்குள் சுற்றுலா செல்லும் மனிதர்கள். இரு பிரச்சினைகளுக்கும் காரணம் மனிதத் தவறே. `யானைகள் சாலையைக் கடந்து சென்றன’ என்கிற செய்திகள் அடிக்கடி நம்மை கடந்து செல்கின்றன. உண்மையில், யானைகள் ஒருபோதும் சாலையைக் கடப்பதில்லை. சாலைகளே வனங்களை பிளந்து செல்கின்றன.

ஒரு எறும்பைக் கொண்டு யானையின் வலசை நிலைப்பாட்டை விளக்க முடியும். எறும்பு வரிசைக்கு முன்னால் விரலால் அழுந்தத் தேய்த்தால் அதை சமீபிக்கும் எறும்புகள் முன்னும் பின்னும் அலைமோதும். குழப்பமுற்றுச் சிதறி ஒழுங்கற்றுப் பரவும். பின் நம்மை கடிக்கும். அப்படித்தான் யானையும். அதன் வாழ்விடங்களையும் வலசைப் பாதைகளையும் நாம் ஆக்கிரமித்துவிட்டோம். அதனால்தான் அத்தனைப் பாதிப்பும். உண்மையில் எந்தப் பிராணியும் நம்மைத் தேடி வந்து கடிப்பது இல்லை. நாம்தான் தேடிப்போய் கடியும் உதையும் வாங்குகிறோம்.

இதுபற்றி யானைகள் ஆராய்ச்சியாளர் அறிவழகன் கூறுகையில், ‘‘முதுமலை காப்பகத்தில் வனத்துறை மூலம் வேனில் அழைத்துச் செல்லப்படுவது மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா. ஆனால், பொக்காபுரம் பகுதியில் உள்ள ஏராளமான ரிசார்ட்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளை உள்ளூர்வாசிகள் சட்டவிரோதமாக அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் ஜீப்பில் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள். சிலர் வரம்பு மீறி காட்டுக்குள் டிரக்கிங் செல்கிறார்கள். அப்படிதான் காலின் மேன்வெல் யானை தாக்கி இறந்திருக்கிறார். வனங்களுக்குள் யாருமே செல்லக்கூடாது. அப்படியே சென்றாலும் செவித்திறன் கூர்மை அவசியம். கிளை உடைப்பு, சாண வாசனை, காது ஆட்டும் சத்தம், ‘டுர்டுர்’ சப்தம் கேட்டால் உடனே அங்கிருந்து விலகிவிட வேண்டும். வாகனத்தில் செல்லும்போது யானை கூட்டமாக தென்பட்டால் பாதையில் இருந்து விலகிச் செல்லும்வரை அமைதி காக்க வேண்டும்” என்றார்.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், ‘‘இணைப்பு பாதைகளின் (காரிடார்) ஆக்கிரமிப்புதான் யானை தொடர்பான அத்தனைப் பிரச்சினைகளுக்கும் முக்கியக் காரணம். யானைகளின் வாழ்வாதாரமான இரு பெரும் வனங்களை இணைக்கும் குறுகிய வனப்பகுதியே இணைப்புப் பாதை. இங்கு பெரும்பாலான இணைப்புப் பாதைகளை கிராமங்கள், ரிசார்ட்கள், ஆசிரமங்கள், கோயில்கள், சாலைகள், ரயில் பாதைகள் ஆக்கிரமித்துள்ளன. யானைகள் ஊருக்குள் வர இதுவே காரணம். யானைகளுக்கு ஒரே வனப்பகுதியில் ஆண்டு முழுவதும் உணவு, தண்ணீர் கிடைக்காது என்பதால் அவை நாள் ஒன்றுக்கு சுமார் 30 கி.மீ. வீதம் வலசை செல்லும். சில இடங்களில் இவை ஒரு குடும்பமாக (3 - 7 யானைகள் ) இடம் பெயர்பவை. சில இடங்களில் ஒரு குழுவாக ( 2 - 4 குடும்பங்கள்) சேர்ந்து இடம் பெயரும். பின்னர் உணவு, தண்ணீர் தாராளமாக கிடைக்கின்ற முதுமலை, கபினி, சிறுமுகை, தெங்குமரஹடா போன்ற பகுதிகளில் மந்தையாக சேர்ந்து சந்தித்துக்கொள்ளும். இந்த கூட்டங்களை மனிதன் தொந்தரவு செய்யும்பட்சத்தில், அதுவும் அந்தக் கூட்டத்தில் குட்டிகள் இருந்தால் மட்டுமே தங்களைத் தற்காத்துகொள்வதற்காக யானைகள் தாக்கும்” என்றார்.

தற்போது ஆனைமலையில் வலாஞ்சர் கருவி மூலம் வினோதமான ஒலி அலைகளை எழுப்பி யானைகளை ஊருக்குள் வராமல் செய்யும் தொழில்நுட்பத்தை வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வெளிப்படும் ஒலி அலைகள் யானைகள் வெளிப்படுத்தும் அல்ட்ராசானிக் ஒலி அலைகளை அச்சுறுத்தி அவற்றை ஊருக்குள் வராமல் செய்கின்றன. வால்பாறை, ஆனைமலைப் பகுதிகளில் யானைகள் வருகையை அறிவிக்கும் அலாரங்களையும் வனத்துறை பொருத்தியுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் யானைகள் கடக்கும்போது அவை தானாக ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கிறது. இதுபோன்ற வசதிகளை அனைத்து வன கிராமங்களிலும் அமைத்தால் யானை - மனித மோதலை கட்டுப்படுத்தலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

18 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்