காட்டுக்குள் பாடம் படிக்கும் இளைய தலைமுறை- ஓசையின்றி சாதிக்கும் ஓசை

By டி.எல்.சஞ்சீவி குமார்

காடுகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் அமைப்பான ‘ஓசை’, கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் காடுகளுக்கே அழைத்துச் சென்று காடுகள், கானுயிர்கள் பற்றியும் அவற்றை பாதுகாக்க வேண்டியது பற்றியும் பாடம் எடுத்து வருகிறது.

கோவையை மையமாகக் கொண்ட அமைப்பு ‘ஓசை’. இது கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக கானுயிர் பாதுகாப்புப் பணிகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பில் ‘ஓசை’யின் பங்கு முக்கியமானது. கோவை குற்றாலம் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் தெங்குமரஹெடா - மாயாறு பள்ளத்தாக்கு, அவலாஞ்சி உள்ளிட்ட பல பகுதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா மையங்களாக இருந்தன. அப்பகுதிகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை செய்துவந்தனர். அந்த இடங்களில் உடைந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் ஏராளமாக நிறைந்துகிடந்தன.

‘ஓசை’ அமைப்பின் தலையீடு காரணமாக மேற்கண்ட இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் உள்ளே நுழைவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சில இடங்களில் வனத்துறையின் அனுமதி பெற்று மட்டுமே உள்ளே நுழைய முடியும். இன்னும் சில சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஆட்கள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காடுகள், காட்டு உயிர்கள், நதிகள் போன்றவை பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காடுகளுக்கே அழைத்துச் சென்று பாடம் எடுத்து வருகிறார் ‘ஓசை’ அமைப்பின் தலைவர் காளிதாசன்.

நீலகிரியில் பவானி ஆறு ஓடும் வனப்பகுதியில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தவரிடம் பேசினோம். “காடு பற்றிய புரிதலை மக்களிடம் கொண்டுசேர்ப்பதே எங்களது பிரதான நோக்கம். காடு என்றால் பொழுதுபோக்குவதற்கான இடமல்ல; அதே சமயம் அது நம்மை பயமுறுத்தும் பயங்கரமான இடமும் அல்ல. காட்டையும் காட்டு உயிர்களையும் இவற்றைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பழங்குடியின மக்களையும் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டாலே காடுகள் காப்பாற்றப்படும்.

பசுமைமாறாக் காடுகள், சமவெளிக் காடுகள், இலையுதிர் காடுகள், பகுதி இலையுதிர் காடுகள், சோலைக் காடுகள், புல்வெளிக் காடுகள் (Grasslands) என காடுகளில் பல வகைகள் இருக்கின்றன. சோலைக்காடுகளும் புல்வெளிக்காடுகளும் இல்லையென்றால், நதிகள் இல்லை. புல்வெளி மற்றும் சோலைக்காடுகள் மழைக் காலங்களில் மழை நீரை தங்களது ஸ்பான்ஞ் போன்ற நிலடித்தடி வடிவமைப்பில் சேகரித்து வைத்துக்கொள்கின்றன. தென்னகத்தின் அனைத்து நதிகளும் இப்படி உருவானவைதான். சோலைக்காடுகள் அழிந்தால் மக்களுக்கு சோறு கிடையாது. இதுபோன்ற விஷயங்களை மக்களிடம் பரப்புவதற்காகவே காடுகளுக்கு மாணவர்களையும் இளைஞர்களையும் அழைத்துவந்து பாடம் எடுக்கிறோம்.

பள்ளிக் கல்வியில் குறைந்தது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலாவது காடுகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாடங்களை சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறையில் பேசி வருகிறோம். இவ்வாறு காளிதாசன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

49 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்