விதைத் தாய் வென்ற கான் விருது

By ஜெய்

கடந்த மாதம் 14-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய உலகப் பிரத்திபெற்ற கான்(Cannes) திரைப்பட விழா கடந்த வாரம் 25-ம் தேதி நிறைவு பெற்றது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விழாவில் திரையிடப்பட்டன.

இவற்றுள் சில படங்கள் மட்டுமே விருதைத் தட்டிச் சென்றன. அந்தச் சிறப்புக்குரிய படங்களுள் ஒன்றுதான், ‘சீட் மதர்’ (Seed Mother). நெஸ்பிரஸோ டாலென்ட் (Nespresso Talents) என்னும் பிரிவில் இந்தப் படம் மூன்றாம் பரிசைப் பெற்று உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் இயக்குநர் அச்சுதானந்த் திவேதி.

செங்குத்துப் பரிமாண வீடியோ வழியாக மூன்று நிமிடத்தில் ஒரு விஷயத்தை, கதையைச் சொல்வதுதான் இந்த நெஸ்பிரஸோ டாலென்ட் பிரிவின் விதி. இந்தப் பிரிவு கான் விழாவில் நான்காண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளை இந்தப் போட்டிக்காக கான் திரைவிழா தேர்ந்தெடுத்து அறிவிக்கும்.

இந்த ஆண்டு ‘We Are What We Eat’ என்ற கருப்பொருள் அறிவிக்கப்பட்டது. இந்தக் கருப்பொருளில் 9/16 செங்குத்து அளவில் வீடியோ காட்சியை (vertical 9/16 video format) மூன்று நிமிடத்துக்கு உருவாக்க வேண்டும். கான் திரை விழாவில் இந்தப் பிரிவில் மட்டும் 47 நாடுகளைச் சேர்ந்த 371 படங்கள் கலந்துகொண்டன.

இவற்றில் இந்தோனேசியாவின் பாலிப் பாகுதியில் அரிசி விளைச்சலைக் குறித்த ‘சுபக்’ (Subak) என்னும் படம் முதல் பரிசையும் மெக்சிக உணவு வகையைக் குறித்த தன்னனுபவப் பகிர்வான ‘ரூஃபோ’ (Ruffo) இரண்டாம் பரிசையும் பெற்றன. ஆனால், இந்தப் பிரிவில் மூன்றாம் பரிசைப் பெற்ற ‘சீட் மதர்’தான்

அதிகக் கவனத்தை ஈர்த்தது. காரணம் அது இன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவையான விதைப் பாதுகாப்பை முன்னிறுத்தும் படம். இந்தியாவின் விதைத் தாய் ஒருவரைக் குறித்த ஆவணப் படம். அந்த விதைத் தாய், ரஹிபாய் சோமா போபரே.

யார் இந்த விதைத் தாய்?

மகாராஷ்டிரத்தின் அகமத்நகர் மாவட்டத்திலுள்ள கொம்பால்னே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹிபாய். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடன் சேர்த்து இவருடைய குடும்பத்தில் ஏழு பேர்.

இவர்களுக்குச் சொந்தமாக 7 ஏக்கர் விவசாயம் நிலம் உண்டு. இதில் 3 ஏக்கர் நிலத்தில் மழையை நம்பி விவசாயம் செய்துவந்த இவர்கள், மழை இல்லாக் காலங்களில் அக்கோலே என்ற சிறு நகரத்திலுள்ள சர்க்கரை ஆலைக்குக் கூலி வேலைக்காக இடம்பெயர்ந்துவந்தனர்.

ரஹிபாய், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். தங்களது நிலத்தையே அவர் மாற்றி அமைத்தார். ஒரு கிணற்றை வெட்டினார். 2 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய விதைகளைத் தேடிக் காய்கறிகளைப் பயிரிட்டார். இயற்கை வேளாண் முறையில் அவற்றைப் பேணினார்.

அவை நல் விளைச்சலைத் தந்தன. மகாராஷ்டிர இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்னும் நிறுவனத்தில் கிராமப் பகுதிகளுக்கான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டார் ரஹிபாய். இதன் மூலம் புறக்கடைக் கோழி வளர்ப்புத் தொழிலும் ஈடுபட்டார். அதுபோல் நான்கடுக்கு வேளாண் முறையையும் கற்றுக்கொண்டார்.

இது அவருக்கு 30 சதவீதம் கூடுதல் விளைச்சலைத் தந்தது. அவர் கூடுதலாக பீன்ஸ் வளர்த்தார். தான் கற்றுக்கொண்ட இயற்கை வேளாண் முறையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார் அவர். இதன் மூலம் அந்தப் பகுதியில் பலர் மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து பாரம்பரிய விதை விவசாயத்துக்குத் திரும்பினர்.

விதைத் தாய் ஆனது எப்படி?

விவசாயிகள் பெரும்பாலானோர் விதைகளுக்காக நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைக் கவனித்தார் ரஹிபாய். மேலும், அந்த விதைகள் மண்ணின் வளத்தைச் சிதைப்பதையும் அவர் கண்டறிந்தார். இதனால் பாரம்பரிய விதைகளைத் தேடி மகாராஷ்டிரா முழுவதும் பயணித்தார்.

இதன் மூலம் 15 விதை நெல் வகையையும் 9 துவரை விதை வகையையும் 60 காய்கறி விதை வகையையும் அவர் சேகரித்தார். இவை அல்லாது சில எண்ணெய் வித்து விதை வகையையும் சேர்த்தார். இந்த அரும் பணியில் அருகிலிருக்கும் பெண்களையும் ரஹிபாய் ஈடுபடுத்தினார்.

இதற்காக ‘கல்சுபாய் பரிசார் பியானி சம்வர்தன் சமிதி’ என்னும் அமைப்பை நிறுவினார். ரஹிபாய் ஒரு விதை வங்கியையும் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் 32 பயிர்களைச் சேர்ந்த 122 விதை வகைகளை இப்போது விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். விதைகளுக்காகப் பெரு நிறுவனங்களைச் சார்ந்திருந்த அந்தப் பகுதி விவசாயிகளுக்கு மாற்று வழி காட்டினார் ரஹிபாய்.

இதன் மூலம் கூடுதல் விளைச்சல் ஏற்படும் என அவர் அளித்த உறுதி, நிஜமானது. விதைகளைத் தேடி அவருடைய பயணம் தொடர்ந்து வருகிறது. அவரது இந்தப் பணிக்காக பல விருதுகள் ரஹிபாயைக் கவுரவித்துள்ளன. உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி இவரைத் தேர்ந்தெடுத்தது.

படத்தில் ரஹிபாய்

இந்தப் படத்தில் ரஹிபாயின் ஒரு நாள் பணிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நெற்றியில் திலகமிட்டு ரஹிபாய் தன் வேலைகளுக்குள் இறங்குகிறார். விதைகளைத் தேடிப் புறப்படுகிறார். அவர் சேகரித்த விதைகள் அண்மைக் காட்சிகளாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நெல், காய்கறி, பயறு உள்ளிட்ட பல வகை விதைகள் காண்பிக்கப்படுகின்றன. விதைகளைக் குடுவைக்குள் சேகரித்துச் சாணம் மெழுகி அடைத்துவைக்கிறார். இவரது இந்தப் பணிக்குப் பெண்கள் துணை நிற்பதையும் படம் ஆவணப்படுத்தியுள்ளது.

அவரது புறக்கடைக் கோழிகளும் மாடும் இந்தப் படத்தில் சில காட்சிகளில் வந்து போகின்றன. வறண்ட நிலமும் கிணறு ஒன்றும் வந்து போகின்றன. அது அவர் உருவாக்கிய கிணறாக இருக்கலாம். சிவப்புப் பின்னணியில் நகரும் காட்சிகளில் அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இறுதியில் தீயைச் சுற்றிப் பெண்கள் ஆடும் நடனமும் பின்னணியில் ஒலிக்கும் பழங்குடிப் பாடலும் படத்தை விசேஷமானதாக ஆக்குகின்றன.

ரஹிபாய்விதைகளுக்காகப் பெரு நிறுவனங்களைச் சார்ந்திருந்த அந்தப் பகுதி விவசாயிகளுக்கு மாற்றுவழி காட்டினார் ரஹிபாய். இதன் மூலம் கூடுதல் விளைச்சல் ஏற்படும் என அவர் அளித்த உறுதி, நிஜமானது. விதைகளைத் தேடி அவருடைய பயணம் தொடர்ந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்