விவசாயிகள் தற்கொலையைக் கட்டிப்போடும் கருங்கண்ணி!

By எஸ்.எஸ்.லெனின்

மிழகத்தில் பருத்தி சாகுபடியில் முதன்மையான இடம் வகிக்கும் மாவட்டம் என்ற பெருமை பெரம்பலூருக்கு உண்டு. ஆனால் இங்கு, மரபணு மாற்றப்பட்ட பருத்தியே அதிகம் பயிரிடப்பட்டு வந்தது. அவற்றை விளைவிப்பதால் அதிகரிக்கும் செலவுகளாலும், பூச்சிக்கொல்லித் தெளிப்பால் நேரிட்ட விவசாயிகளின் மரணங்களாலும் நாட்டுப் பருத்தியான கருங்கண்ணி ரகத்தை நோக்கி விவசாயிகள் திரும்பியிருக்கின்றனர்.

பூச்சிவிரட்டிக்கும் பூச்சிக்கொல்லிக்கும் இடையிலான வேறுபாட்டை உரத்துச் சொன்னவர் நம்மாழ்வார். அதைச் சரியாக உள்வாங்காததன் விளைவு, ரகம் ரகமாய்ப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து, மண்ணை மலடாக்கியதுடன் நீர், காற்று என நமது சூழலையும் கெடுத்துவருகிறோம். பூச்சிக்கொல்லி அதிகம் தேவைப்படும் பயிர்களில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி ரகம் முதலிடத்தில் வருகிறது. அதிக விளைச்சல் காணும் ஆசையில் விதை, பூச்சிக்கொல்லிக்கான விரயச் செலவுகளில் விவசாயிகள் நட்டம் அடைந்தார்கள்.

03CHVAN_RameshKaruppiah.JPG ரமேஷ் கருப்பையா கண் திறந்த கண்காட்சி

இந்நிலையில் சூழலியல் விழிப்புணர்வு அமைப்புகளும் இயற்கை உழவர்களும் நாட்டுப் பருத்தியை இந்த மாவட்டத்தில் முன்னெடுத்தார்கள். அதன் காரணமாக, தற்போது 40 ஏக்கரில் கருங்கண்ணி பருத்தி வெற்றிகரமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளில் படித்த புதிய தலைமுறை இளைஞர்களும் அடங்குவார்கள். வடக்கு மாதேவி கிராமத்தைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி அசோக் அவர்களில் ஒருவர்.

“படிப்பு முடித்து நல்ல சம்பளத்தில் சென்னையில் பணிபுரிந்த எனக்கு, திருச்சியில் நடைபெற்ற விதைக் கண்காட்சி ஒன்று கண் திறந்து விட்டது. கிராமத்தில் இருக்கும் 10 ஏக்கர் பூர்விக நிலத்தில் 1 ஏக்கருக்கு கருங்கண்ணிப் பருத்தி பயிரிட்டேன். எனக்கு விவரம் போதாது எனப் பெற்றோர் தனியாக 1 ஏக்கரில் பி.டி. பருத்தி பயிரிட்டிருந்தனர்.

எரு இட்டது, களை பறிப்பு தவிர வேறு மெனக்கெடலோ செலவுகளோ நான் செய்யவில்லை. இருந்தபோதும் முதல் சுற்று பருத்தியெடுப்பில் கருங்கண்ணிக்கே கூடுதல் விலை கிடைத்தது. மழை பெய்தது பாதகமென்றாலும் பி.டி.யுடன் ஒப்பிடும்போது கருங்கண்ணி, கையைக் கடிக்கவில்லை. அடுத்த போகத்தில் இன்னும் அதிகமான பரப்பில் நாட்டு ரகத்தைப் பயிரிட இருக்கிறேன்” என்றார்.

விதைக்குக் கையேந்தத் தேவையில்லை

பசும்பலூர் விவசாயியான சிவஞானம், “450 கிராம் பி.டி. ரகப் பருத்தி விதைகளுக்கு 750 ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆனால், ஒரு கிலோ நாட்டு ரகத்துக்கு வெறும் 100 ரூபாய்தான் செலவு. எனவே, நாட்டு ரகப் பருத்தி வாங்க இனி யாரிடமும் கடன் கேட்டுக் கையேந்தத் தேவையில்லை. இதுவே பி.டி. ரகமென்றால் ஒவ்வொரு முறையும் விதைக்குத் தனியாகக் காசை அழ வேண்டும்.

கருங்கண்ணி விதைகளைச் சாணிப் பாலில் ஊறவைத்துச் சுத்தம் செய்ததும், 3 X 3 இடைவெளியில் இரண்டிரண்டாக விதைத்தேன். ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், புண்ணாக்குக் கரைசல், ஆடுதின்னா இலைதழைகள், வேப்பங்கொட்டையில் தயாரித்த பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தியதுடன் 2 முறை களையெடுத்தேன்.

4 மாதத்தில், செடிக்கு 60 வரை காய் கண்டது. இன்னும் அதிகமாய்க் காய்க்க வேண்டியதை மழை கெடுத்தது. அரை ஏக்கரில் 7 குவிண்டால் எதிர்பார்த்தேன், 3 குவிண்டால்தான் கிடைத்தது. ஆனபோதும் செலவு குறைவு என்பதால், சுமாரான லாபத்தைப் பெற்றிருக்கிறேன்” என்றார்.

பெருகும் நம்பிக்கை

நாட்டுப் பருத்தி ஆராய்ச்சியாளரும், தமிழகத்தில் கருங்கண்ணி விவசாயிகளை ஒருங்கிணைப்பவருமான சுவாமிநாதன் கூறும்போது, “நாடு சுதந்திரம் அடைந்தபோது நம் மண்ணில் 97 சதவீதம் நாட்டுப் பருத்தி ரகங்களே இருந்தன. தற்போது அந்த இடத்தை இறக்குமதியான வீரிய ஒட்டு ரகங்களும், பின்னர் மரபணு மாற்ற விதைகளுமாக ஆக்கிரமித்ததில் 3 சதவீதப் பரப்பில் மட்டுமே நாட்டுப் பருத்தி தப்பிப் பிழைத்திருக்கிறது.

நமது பாரம்பரியத்தில் சுமார் 50 நாட்டு ரகங்கள் அறியப்பட்டாலும், இன்று எஞ்சி இருப்பவை 4 மட்டுமே. அதில் கருங்கண்ணி விதைகளைப் பெருக்கி விவசாயிகள் கையில் பரவலாக ஒப்படைத்துள்ளோம். பெரம்பலூரில் கணிசமாகவும் அரியலூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரளவுக்கும் நாட்டுப் பருத்தி சார்ந்த விழிப்புணர்வை விவசாயிகள் பெற்றுள்ளனர்.

பெரம்பலூரில் இயற்கை விவசாயிகள் குழுவாக இயங்குவதுடன், பரிசோதனை முறையில் அரை அல்லது ஒரு ஏக்கருக்குப் பயிரிட்டு அதிலிருந்து கிடைத்த பாடங்களின் அடிப்படையில் சாகுபடிப் பரப்பை விரிவுசெய்தும் வருகிறார்கள். விதைத் திருவிழாக்கள், பாரம்பரிய உழவர்களுக்கான ஒன்றுகூடல்கள் ஆகியவற்றுடன் சமூக ஊடகங்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வரும் ஆண்டுகளில் சாகுபடிப் பரப்பு மேலும் அதிகரிக்கும் என்பதுடன், அதிகமான இளம் விவசாயிகள் நாட்டுப் பருத்தியில் இறங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.

சவால்கள் பொருட்டில்லை

ஆனபோதும் நாட்டுப் பருத்தி கடக்க வேண்டிய சவால்கள் நிறைய இருக்கின்றன. இதுகுறித்து, பூச்சிக்கொல்லி ஆபத்துகள் சார்ந்து தொடக்கத்தில் இருந்தே இப்பகுதி விவசாயிகளிடம் விழிப்புணர்வூட்டி வரும் சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா கூறும்போது, “அதிக விளைச்சல், பூச்சிக்கொல்லி தேவையில்லை, அதிக லாபம் என்ற கவர்ச்சி வாக்குறுதிகளுடன் வந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் ஏற்கெனவே முன்வைத்த உத்தரவாதங்களில் படுதோல்வி அடைந்திருக்கின்றன.

அவற்றின் தவறுக்கு சுமார் இரண்டரை லட்சம் விவசாயிகளை இழந்திருக்கிறோம். பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்தும் பகுதிகளில் மனநலப் பிரச்சினைகளும் பெண்களின் கருத்தரிப்பு, மாதவிடாய் தொடர்பான பாதிப்புகளும் ஏற்படுவதையும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஆனால், நமது நாட்டு ரகங்கள், பருவநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் இயல்பைக் கொண்டிருப்பதுடன், விதை உரிமையை விவசாயிகள் வசமே தருகின்றன. இதனால் பொருளாதாரச் சிக்கலிலிருந்து விவசாயிகள் மீளவும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, நாட்டு ரகங்களை இன்னும் அதிக அளவில் மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும். இதற்கு, இந்தியா நெடுக அழிவின் விளிம்பில் இருக்கும் நாட்டுப் பருத்தி ரகங்களை மீட்டு அவற்றில் போதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். கூடவே மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் படிப்படியாகக் கைவிட வேண்டும்.

03chnvk_swaminathan.jpg சுவாமிநாதன்right

மருத்துவப் பயன்பாடு, குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்களுக்கான நாப்கின்கள் என சுகாதார அடிப்படையில் நாட்டுப் பருத்திக்குத் தனிச் சந்தை காத்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய இந்தியப் பருத்தியில் தயாரான மஸ்லின் துணி ரகங்களைப் பெரிய அளவில் மீட்டுருவாக்கம் செய்வதும் உலகளாவிய சந்தை வாய்ப்பைத் தரும்.

நாட்டு ரகங்கள் குட்டை இழையைத் தருகின்றன என்ற குற்றச்சாட்டின் தோற்றுவாய், மில் இயந்திரங்கள் நீண்ட இழையை மட்டும் கையாளுவதாக இருப்பதுதான் காரணம். நாட்டுப் பருத்தியின் உற்பத்தி அதிகரித்து அதற்கென இயந்திரங்கள் உருவாகும்போது இந்தப் பிரச்சினை காணாமல் போகும். நாட்டுப் பருத்தி மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்பு, கிராமங்களில் தற்சார்பு விவசாயம் போன்றவை பெருகவும் வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

விவசாயிகளின் கண்ணீர் துடைக்கட்டும் இந்தக் கருங்கண்ணி!

விவசாயி தொடர்புக்கு: சுவாமிநாதன் - 8884242965

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

இந்தியா

24 mins ago

சினிமா

19 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்