நெடுஞ்செழியன் என்ற எரிநட்சத்திரம்!

By நவீன்

மிழகத்தில் சுற்றுச்சூழல் சார்ந்து அறிவியக்க நடவடிக்கைகளையும், களத்தில் இறங்கி மேற்கொள்கிற செயல்பாடுகளையும் இன்று பலர், பல அமைப்புகளின் பெயர்களில் முன்னெடுக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் முன்னத்தி ஏராக இருந்தவர் ‘பூவுலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன்.

அவரது 12-வது நினைவு நாள் கடந்த வாரம் 28-ம் தேதி சென்னையில் அனுசரிக்கப்பட்டது. அப்போது, அவரின் நினைவாக ‘பூவுலகின் நண்பர்கள்’ (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) பதிப்பித்த 9 நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், அந்த அமைப்பின் தொடக்கக் காலத்திலிருந்து அவருடன் பயணித்த நண்பர்கள் பலரும், நெடுஞ்செழியனுடனான தங்களின் பயணத்தைப் பற்றியும், அவர் மேற்கொண்ட பணிகள் பற்றியும் நினைவுகூர்ந்தனர்.

அறிவியக்க செயல்பாடு

நெடுஞ்செழியனின் நண்பரும், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாகார்ஜுனன் பேசும்போது, “நான் பெங்களூருவில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் நெடுஞ்செழியனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது போபால் விஷவாயு விபத்து நடந்து எட்டு மாதங்கள் கடந்திருந்தன. அது தொடர்பாக தமிழில் என்ன புத்தகம் வந்திருக்கிறது என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், ‘தமிழில் அப்படியொரு புத்தகம் இன்னும் வரவில்லை. ஏனென்றால், இங்கு அறிவியக்கத் தளத்தில் பெரிய இடைவெளி உள்ளது. உங்களைப் போன்ற ஆட்கள்தான் அதை நிரப்ப வேண்டும்’ என்றார். நாங்கள் இருவரும் இணைந்தது அந்தப் புள்ளியில்தான்! தான் வாழ்ந்த காலம் முழுவதும், ஒரு எரிநட்சத்திரம்போல வாழ்ந்தவர் நெடுஞ்செழியன்” என்றவர், ‘சூழலியல்’ என்கிற வார்த்தைப் பயன்பாடே, நெடுஞ்செழியனால்தான் பிரபலமானது என்றார்.

‘பூவுலகின் நண்பர்கள்’ புதுச்சேரி பிரிவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சீனு தமிழ்மணி அதைக் கூடுதலாக விளக்கினார், “சுற்றுச்சூழல் தொடர்பாகக் கலைச்சொற்களை உருவாக்குவதில் நெடுஞ்செழியன் மிக ஆர்வமாகச் செயல்பட்டார். இன்றைக்கு பிளாஸ்டிக் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாகப் பலரும் ‘ஞெகிழி’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அந்தச் சொல்லைப் பிரபலமாக்கியதில் நெடுஞ்செழியனுக்கு பெரும் பங்குண்டு” என்றார்.

முன்னோடிகளின் முன்னோடி

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் பேசும்போது, “1978-ம் ஆண்டிலிருந்து மண்புழு, மண்புழு உரம் ஆகியவை சார்ந்து நான் பணியாற்றி வருகிறேன். அப்போது மண்புழுக்கள் குறித்து ஆங்கிலத்தில் மட்டுமே புத்தகங்கள் இருந்தன. அதுவும் வெளிநாட்டில் உள்ள மண்புழுக்களைப் பற்றியதாக மட்டுமே இருந்தன. நான் இந்தியாவில் உள்ள மண்புழுக்கள் பற்றி முதன்முதலாக ஒரு புத்தகம் எழுதினேன்.

அதுவும் ஆங்கிலத்தில்தான் இருந்தது. அதை கிளாட் ஆல்வாரஸ் எளிமைப்படுத்தி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை நெடுஞ்செழியன்தான் முதன்முதலில் தமிழில் கொண்டுவந்தார். அதற்குப் பிறகுதான், மண்புழுக்களைப் பற்றி தமிழர்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டது” என்றார்.

இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன் பேசும்போது, “யாரிடம் என்ன திறமை இருக்கிறது, அதை எப்படிப் பயன்படுத்தவது என்பதைச் சரியாகக் கண்டறியும் ஆற்றல் நெடுஞ்செழியனுக்கு இருந்தது. என்னை அப்படித்தான் மொழிபெயர்ப்புத் துறைக்குள் கொண்டுவந்தார்.

அன்றைக்கு நாங்கள் மொழிபெயர்த்த புத்தகங்கள் எல்லாம் மூலப் புத்தகங்களின் முழுமையான மொழிபெயர்ப்பாக இருக்காது. உதாரணத்துக்கு, ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’யின் ஆங்கிலப் புத்தகத்திலுள்ள சில பகுதிகள் தமிழில் இருக்காது.

காரணம், அவை ஜப்பான் மண்ணுக்கு மட்டுமே ஏற்ற தொழில்நுட்பங்களாக இருந்தன. அது தமிழ்நாட்டுக்குத் தேவையில்லாதது என்று சொல்லி நெடுஞ்செழியன் விலக்கிவிடுவார். அதேபோல ‘அக்ரிகல்சுரல் டெஸ்டாமெண்ட்’ என்ற புத்தகத்தை மொழிபெயர்க்கவே வேண்டாம் என்று சொன்னார். ஏன் என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்: ‘அது ஆரியப் பார்வையில் எழுதப்பட்ட புத்தகம்” என்றார் பாமயன்.

இவ்வாறாகக் கழிந்தது நெடுஞ்செழியனின் நினைவு நாள் மாலைப் பொழுது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்