நல்ல வருமானம் தரும் நாட்டுக் கோழி வளர்ப்பு

By டி.செல்வகுமார்

ஆண்டு முழுவதும் வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது நாட்டுக்கோழி வளர்ப்பு. அரசு மானியத்தில் தொழில் தொடங்கி முட்டை, கோழி விற்பதுடன், குஞ்சுகளைப் பொரித்தும் லாபம் ஈட்டலாம்.

முதுகலைப் பட்டம் முடித்து சென்னையில் வேலை பார்த்த தம்பதி, நகரில் வருமானம் கட்டுப்படியாகாததால் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினர். விவசாயம் செய்கிறார் கணவர். நாட்டுக்கோழி வளர்ப்பில் 5 ஆண்டுகளாகக் கோலோச்சுகிறார் அவரது மனைவி வி.சுபா (41).

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். கணினி அறிவியலில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். கூட்டுறவு மேலாண்மையில் முதுகலைப் படிப்பு முடித்த இவரது கணவரும் சென்னையில் பணியாற்றினார். இருவர் சம்பாதித்தும் செலவைச் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில், பிரசவத்துக்காக சொந்தக் கிராமத்துக்குச் சென்றார் சுபா. அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

அதன் பிறகு, கணவன், மனைவி இருவருக்கும் ஒரு யோசனை வந்தது. இருவர் சம்பாதித்தாலும் சென்னையில் வீட்டு வாடகைக்கே பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது. இருவருக்கே இவ்வளவு செலவு என்றால், இரட்டைக் குழந்தைகளுடன் சென்னையில் வசிப்பது சிரமம். அதனால் குழந்தைகளுடன் சொந்தக் கிராமத்தில் வசிப்பதென்று முடிவெடுத்தனர். அதன்படி, கிராமத்தில் குடியேறிய இருவரும் விவசாயத்தில் பெரியவர்களுக்கு உதவியாக இருந்தனர்.

அப்போதுதான் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு விஞ்ஞானரீதியில் பயிற்சியும் நிதியுதவியும் அளிப்பது சுபாவின் கவனத்துக்கு வந்தது. உடனே அதற்காக விண்ணப்பித்தார். பயிற்சிக்குத் தேர்வும் செய்யப்பட்டார். திருச்சியிலும், கோவையிலும் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்குப் பிறகு கோழிக் குஞ்சுகளை பருந்துகளிடமிருந்து காப்பாற்றி வளர்ப்பதற்காக அவரது இடத்தில் 16 அடி நீளம், 25 அடி அகலத்தில் ஷெட் (ரூ.56 ஆயிரம் செலவில்) அமைத்துக் கொடுத்து, முதல்கட்டமாக 250 கோழிக் குஞ்சுகளை வழங்கினர்.

“கோழிக்குஞ்சு வளர்ப்பில் அனுபவம் இல்லாததால் 200-ஐ மட்டுமே காப்பாற்ற முடிந்தது. கோழிகளைத் தாக்கும் வெள்ளக்கழிசல், அம்மை உள்ளிட்ட நோய்த் தாக்குதல்களையும் சளித் தொந்தரவையும் முன்பே அறிந்து உரிய நேரத்தில் குஞ்சுகளுக்குத் தடுப்பூசி போட்டோம். அதனால் இரண்டாவது கட்டமாகக் கொடுத்த 250 குஞ்சுகளில், 240-ஐக் கோழிகளாக வளர்த்துவிட்டோம். மூன்றாவது கட்டமாக கொடுத்த 250 குஞ்சுகளில் 250-ஐயும் கோழிகளாக வளர்த்து மகிழ்ச்சியில் திளைத்தோம்” என்கிறார் சுபா.

சுபாவின் 1 ஏக்கர் பரப்பிலான தோட்டத்தில் நாட்டுக் கோழிகள் இயற்கையான சூழலில் இரை தேடிக் கொள்ளும் வாய்ப்பையும் அவர் ஏற்படுத்தித் தந்துள்ளார். அதிக எண்ணிக்கையில் கோழிகள் இருப்பதால் அந்த 1 ஏக்கர் பரப்புக்குள் இரை தேடும் வாய்ப்பு குறைவு. அதனால் சோளம், கம்பு ஆகிய தானியங்களைக் கலந்து இரையாகக் கொடுக்கிறார். இதனால் 3 மாதங்களில் ஒவ்வொரு கோழியின் எடையும் 1 கிலோ எடையளவைத் தாண்டி வளரும். ஒரு கிலோ கோழியை ரூ.250க்கு விற்கிறார். ஒரு கோழி ஆண்டுக்கு 180 முதல் 200 முட்டைகள் வரை இடுகிறது.

கோழிக்குஞ்சுக்கான ஷெட், கோழிக்குஞ்சுகள் உள்ளிட்டவற்றுக்கு அரசு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளது. இதில் பாதித்தொகை மானியம். மீதித்தொகையை சுபா செலுத்தியுள்ளார். இவ்வாறு நாட்டுக் கோழி வளர்ப்புத் தொழிலை வெற்றிகரமாகச் செய்ததால் சுபாவுக்கு அடுத்த வாய்ப்பும் கிடைத்தது.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி விரிவாக்கக் கல்வித் துறைத் தலைவர்

பெரு.மதியழகன் வழிகாட்டுதலின்பேரில், கோழி இறைச்சியைச் சுகாதாரமான முறையில் விற்பது, குஞ்சு பொரித்து விற்பது போன்ற பயிற்சிகளையும் சுபாவுக்குக் கிடைத்துள்ளது. குஞ்சு பொரிப்பது குறித்து தனிப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும், நபார்டு வங்கியும் 100 சதவீத மானியத்தில் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளது. அதில் குஞ்சு பொரிப்பான், பேட்டரி பேக்கப் உள்ளிட்டவற்றை வீட்டில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

அதில், 480 முட்டைகள் வரை வைத்துக் குஞ்சு பொரிக்க முடியும். சுபா, தன் கோழிப் பண்ணையிலுள்ள முட்டைகளை இந்தக் குஞ்சு பொரிப்பானைப் பயன்படுத்திப் பொரிக்கிறார். வெளியிலிருந்து கொண்டுவருபவர்களின் முட்டைகளையும் பொரித்துத் தருகிறார். அதற்கு முட்டைக்கு ரூ.10 பெற்றுக் கொள்கிறார். இதுவும் ஒரு வருமானம் ஆகிறது. திருச்சி கண்காட்சியில் ஸ்டால் போட்டு நாட்டுக் கோழி சூப், சில்லி சிக்கன், சிக்கன் பக்கோடா போன்றவற்றை விற்று ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கவும் செய்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக அரசின் புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளி ஒவ்வொருவருக்கும் ஒரு மாத கோழிக்குஞ்சு 250 வழங்கும் ஆர்டர் கிடைத்தது. 6 மாதங்களில் 8 ஆயிரம் குஞ்சுகள் பொரித்து இத்திட்டப் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளார் சுபா..

நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் கொடுப்பதால் நிறைவான வாழ்க்கை கிடைத்திருப்பதாகக் கூறி மகிழ்கிறார். கிராமத்தில் இருந்து சென்னை போன்ற நகரை நோக்கிச் செல்லும் பெண்கள் மத்தியில், சென்னையில் இருந்து சொந்தக் கிராமத்திற்குத் திரும்பி நாட்டுக்கோழிகள் வளர்த்துக் கணிசமாகப் பணம் சம்பாதித்துப் பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் சுபா.

சுபா, தொடர்புக்கு: 8667865049

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

சினிமா

3 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்