கற்பகத் தரு 01: பனை எனும் மூதாய்..!

By காட்சன் சாமுவேல்

பனை மரம் தமிழர்களின் மரம் எனக் கூறுவது நமது பெருமை என்று கருதும் அதேநேரம், பனை மரத்தின் பிரம்மாண்டத்தைச் சுருக்குவதாகவும் இருக்கிறது.

சுருக்கமாக பனை நம்மை உருவாக்கியது, நம் பண்பாட்டை வளர்த்தெடுத்தது என்று சொல்லலாம். நினைப்பதைக் கொடுக்கும் கற்பக விருட்சமாக பனை தழைத்து நின்றிருக்கிறது. வெயில் என்றும் பாராமல், மழை என்றும் பாராமல் ஒற்றைக்கால் தவம் இருந்து மக்களை பேணிப் பாதுகாத்திருக்கிறது. இப்படி உறவாடிய பனை மரத்தை நம் மூதாதையர்கள் தங்கள் மரமாகச் சுவீகரித்துக்கொண்டுவிட்டார்கள் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

தாயாக வந்த மரம்

குழந்தைகள் முதல் பெரியோர்வரை ஆண்கள், பெண்கள் வேறுபாடு இன்றி பனையோடு நெருங்கி உறவாடியவர்கள் நம் மக்கள். மறத் தமிழச்சி பனை முறம் கொண்டு புலியை விரட்டியதை பண்டைய இலக்கியம் வியந்து பேசுகிறது. சிறார்கள் வாழ்க்கையில் விளையாடிக் களித்த மரங்களில், பனைபோல் மற்றொரு மரம் இருக்குமா?

பனை மரத்தை தாயாக உருவகிக்கும் வழக்கம் தென் தமிழகத்தில் உள்ளது. அந்த தாய் தெய்வத் தன்மை கொண்டவளாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறாள். கட்டுக் கடங்காத உடல் கொண்டவள், பாலூறும் கனிவு கொண்டவள், அரம் - வாள் எனப்படும் கருக்கைக் (மட்டையின் இருபுறமும் கூர்மையாக இருக்கும் பகுதி) கொண்டவள், காற்றில் பேயாட்டம் ஆடுபவள், எந்தத் துன்பத்திலும் சாய்ந்து விடாதவள், ஏதாவது ஓர் உணவை அளித்து தன் பிள்ளைகளை காப்பவள் என பனை அன்னையின் ஆதி வடிவமாகத் திகழ்கிறது. பனையேறிகள் அதை காளி என அழைக்கிறார்கள்.

கேட்டது கொடுக்கும் கற்பகம்

பனை மரத்தின் சிறப்பை அறிந்த நமது முன்னோர்கள் அதை தெய்வீக மரமாகக் கருதினார்கள். அதனால்தான் புராணங்களில் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த சிறந்த பொருட்களில் ஒன்றாக பனைமரமும் எழுந்து வந்திருக்கிறது. கேட்டதைக் கொடுக்கும் கற்பக மரம், பஞ்சம் போக்கி, காளித் தாய் என காலத்துக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் பனை பல பெயர்களைப் பெற்றிருக்கிறது.

பனை ஒரு ஒப்புமையற்ற மரம். மக்களின் வாழ்வாதாரம், உணவு, கலை, பண்பாடு, வரலாறு, பொருளியல் முழுவதும் பனை விரவிக் கிடக்கிறது. இப்படி இந்த மரம் மக்களின் வாழ்க்கையோடு இணைந்தே பயணித்து வந்திருக்கிறது.

சரி பனையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் என்னென்ன? அவை எங்கே கிடைக்கின்றன? பனை துணைப் பொருட்களை எவ்வகையில் தயாரிக்கிறார்கள்? பனை பொருட்கள் உருவான காலம், அவற்றின் மானுடத் தேவை போன்ற செய்திகள் முழுமையாக நம்மை வந்து அடையவில்லை. பனை சார்ந்த அறிவை உயர்த்திப் பிடிக்கும் சமூகமாக நாம் இன்னும் வளரவில்லை. குறைந்தபட்சமாக கடந்த அரை நூற்றாண்டில் தமிழகப் பனை சார்ந்த கவனத்தைக் குவித்தால், அடிப்படைப் புரிதலைப் பெறலாம்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

தொடர்புக்கு: malargodson@gmail.com

ருட்பணியாளர் காட்சன் சாமுவேல், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மார்த் தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த ஹென்றி மார்ட்டின் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தோடு இணைந்து பனை மரம் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்து வருகிறார். கடந்த 2016 மே 15-ம் தேதி மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா வழியாகத் தமிழகம், புதுச்சேரியைக் கடந்து தனது சொந்த ஊரான நாகர்கோவில்வரை பனை விழிப்புணர்வுக்காக இரு சக்கர வாகனப் பயணத்தை மேற்கொண்டவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்