நீரை அரசே விற்றாலும் குற்றம்தான்!

அது 2000-ம் ஆண்டு. பொலிவிய அரசுக்கு எதிராகக் கொச்சபாம்பாவில் மக்கள் திரண்டு நின்றார்கள். பொதுச் சொத்தான தண்ணீர் என்ற இயற்கைவளம், தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருந்ததே காரணம்.

கூலி வேலை செய்யும் மக்கள், தங்கள் வருமானத்தில் சுமார் 25 சதவீதத்தைக் குடிநீரைப் பெறுவதற்காக மட்டுமே செலவழிக்க வேண்டியிருந்தது. பணமில்லாதவர்களுக்கு நீரில்லை என்று தனியார் நிறுவனங்கள் கைவிரித்தன.

இதை எதிர்த்துத்தான் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மக்களின் கொதிப்பை அது மேலும் அதிகரித்தது. அடுத்த சில ஆண்டுகளில் நீருக்கான யுத்தம் தொடங்கிய, அதே கொச்சபாம்பாவில் இருந்து பொலிவியாவின் அதிபர் உருவானார். ஆக, ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்றக் கூடிய வலிமை நாம் அருந்தும் குடிநீருக்கு இருக்கிறது.

பறிபோகும் பொதுச்சொத்து

இயற்கை வளங்களில் விலை மதிக்க முடியாதது தண்ணீர். ஆனால், இன்றைய உலகில் அதிகம் விற்பனை செய்யப்படுகிற வணிகப் பொருளும் தண்ணீர்தான்.

அனைவருக்கும் பொதுச் சொத்தான நீரை யாரோ சிலர் மட்டும் சொந்தம் கொண்டாட, மற்ற அனைவரும் பணம் செலுத்தித் தங்களுடைய தாகத்தைத் தனித்துக்கொள்ளும் நிலைமை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.

"தண்ணீரைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது பொலிவியாவில் மட்டுமே நடக்கும் பிரச்சினையல்ல. உலகில் பல நாடுகளிலும் இந்தப் பிரச்சினை உள்ளது. பொலிவியாவைப் போன்று குடிநீருக்காக அரசை எதிர்த்து மக்கள் நிற்கும் காலம் இந்தியாவிலும் விரைவில் வரலாம். இங்கும் துப்பாக்கிச் சூடுகள் நிகழலாம். அதைத் தடுப்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்!" என்கிறார் பாத் தர்மாதிகாரி.

ஐ.ஐ.டி. போராளி

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் முடித்துவிட்டு, தண்ணீர் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவருகிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு ‘மந்தான் அத்யாயன் கேந்திரா' என்ற அமைப்பை உருவாக்கித் தண்ணீரைத் தனியார்மயமாக்குதல், நர்மதை அணை விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழகத்தில் தனியார் நிறுவனம் என்று சொல்லப்பட்ட ‘புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக'த்தின் நிர்வாகத்தை நீதிமன்றத்தின் துணையுடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்ததில் இவருடைய பங்கு முக்கியமானது.

தற்போது தமிழகத்தின் கடற்கரையோரம் அமைந்துள்ள அனல் மின்நிலையங்களால் கடலோரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறித்து ஆய்வு செய்யச் சென்னை வந்தவரிடம் பேசியபோது, "மின்சாரம் தயாரிப்பதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. அவற்றில் நிலக்கரியைப் பயன்படுத்தித் தயாரிக்கும் அனல் மின்சாரம் முதலிடத்தை வகிக்கிறது.

எது அவசியம்?

‘கடலோரம் மின்நிலையங்களை அமைத்தால் தண்ணீருக்குப் பஞ்சமே இருக்காது' என்பதால்தான் அரசு கடற்கரைகளையொட்டி மின்நிலையங்களை அமைக்கிறது. ஆனால், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீர்த் தேவைக்கு என்ன செய்வது? இங்கு நம்முடைய முதன்மை அடிப்படைத் தேவை நீரா அல்லது மின்சாரமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

நெல்லூர், கிருஷ்ணப்பட்டினம், எண்ணூர், கடலூர், மேட்டூர், நெய்வேலி, செய்யூர் உள்பட கடற்கரைகளை ஒட்டி உள்ள மின்நிலையங்கள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது மின்நிலையங்களைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் எல்லாம் நிலத்தடி நீர் கடுமையாகக் குறைந்து போயிருப்பது தெரியவந்தது" என்கிறார் பாத்.

கடற்கரை களவு

வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்காகவும், அந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களுக்காகவும் கடலையொட்டிக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. தூர்வாருவதாலும் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. இப்படிச் செய்யும்போது கடல் நீர், மற்ற நீராதாரங்களில் கலக்கலாம்.

இதன் காரணமாக உப்பு நீர், உவர் நீர், நன்னீர் ஓடும் ஆறுகள், கால்வாய்கள், ஓடைகள், முகத்துவாரங்கள் போன்றவற்றின் இயல்புத் தன்மைகள் மாறுகின்றன. இந்தச் சமநிலை மாறுபாட்டால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கிருஷ்ணப்பட்டினம் போன்ற பகுதிகளில் இன்று மீன்களே இல்லை. இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது சிறு மீனவர்கள்தான்.

இந்த மின்நிலையங்களில் இருந்து அதிக வெப்பத்துடன் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இது நிலத்தடி நீருடன் கலப்பதால், நீர் எதற்குமே பயன்படாமல் போகிறது. இப்பகுதிகளில் மக்கள் காசு கொடுத்துத்தான் தண்ணீர் வாங்குகிறார்கள்.

கதிரியக்கம்

மேட்டூர் பகுதி வயல்வெளிகள் முழுக்க நிலக்கரித் துகள்களும், சாம்பலும் நிறைந்து நிலமெல்லாம் கறுத்துக் கிடப்பதைப் பார்க்கலாம். இந்த நச்சுத்தன்மை, மின்நிலையங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள கதிரியக்கம் ஆகியவற்றை அளக்க வேண்டும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளபோதும், இதுவரை அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மின்சாரம் தயாரிக்கும் ஆர்வத்தில் பாதியைக்கூட, மக்களின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் காட்டுவதில்லை.

நதிகள் இணைப்பு

"இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் நதிகள் இணைப்புக்காகப் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அது சாத்தியமா என்ற கேள்வியைவிட, அது தேவைதானா என்ற கேள்வியே முதலில் தேவை.

காரணம், ஒவ்வொரு நதிக்கும் அதற்கெனத் தனித்துவமான சூழலியல் உண்டு. உதாரணத்துக்கு, பிரம்மபுத்திரா நதி இமாலயப் பனி ஓடைகள் மூலம் உருவாகிறது. இதை வேறு நதியுடன் இணைக்கும்போது, இரண்டின் சூழலியலும் பாதிக்கப்படும். அது அப்பகுதி வாழ் மக்களுக்கு ஆபத்தாக முடியும்.

மறைமுகத் திட்டங்கள்

இதற்கிடையே தண்ணீரைத் தனியார்மயப்படுத்தவும் அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சிகள் பொலிவியாவில் மட்டுமல்ல, இந்தியாவில் டெல்லி, மும்பை, திருப்பூர் போன்ற பகுதிகளிலும் தோல்வியைத்தான் சந்தித்து வருகின்றன.

திருப்பூரில் ‘புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம்' மூலமாக மக்களுக்குத் தண்ணீர் விநியோகிக்கும் பொறுப்பு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் கழகத்துக்குத் தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது. அதன் அடிப்படையில், இந்தக் கழகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அந்நிறுவனம் அச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்படி மறைமுகத் திட்டங்களுடன்தான் பல இடங்களில் தண்ணீர் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசே குடிநீரை விற்கிறது. நீரை அரசு விற்பதும் குற்றம்தான். சுத்தமான, சுகாதாரமான நீரை இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை. அதைக் கேட்டுப் பெறுவது ஜனநாயகம் நமக்கு அளித்துள்ள உரிமை!" என்று முடிக்கிறார் ஸ்ரீபாத்.

ஸ்ரீபாத் தர்மாதிகாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்