இயற்கையின் பேழையிலிருந்து! - 17: மேரி சைமண்ட்ஸின் மதராசப்பட்டினத்து மீன்கள்

By ப.ஜெகநாதன்

தனது அக்கா எலிசபத் க்வெலிம், அவரது கணவர் ஹென்றி க்வெலிமுடன் 1801இல் இங்கிலாந்திலிருந்து மதராசப்பட்டினத்திற்கு மேரி சைமண்ட்ஸ் வந்தார். சகோதரிகள் இருவரும் இங்கு தங்கியிருந்த ஏழு ஆண்டுகளில் இங்குள்ள உயிரினங்கள், தாவரங்கள், நிலவமைப்பு ஆகியவற்றை ஓவியமாகத் தீட்டினர். இவற்றில் மீன்களும் அடங்கும். மதராசப்பட்டினத்தின் பறவைகளை ஓவியம் தீட்டிய எலிசபத் க்வெலிமின் ஒரு கடிதத்தில் அவரது தங்கை மேரி சைமண்ட்ஸும் 1802இல் சாந்தோம் கடற்கரைக்குப் பல்லக்கில் சென்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அங்கு சென்று கட்டுமரத்தில் வந்திறங்கும் மீனவர்களிடம் மீன்களை வாங்கி அவற்றை ஓவியமாகத் தீட்டியுள்ளனர். மற்றுமொரு கடிதத்தில் (1806இல் அவரது அம்மாவுக்கு எழுதியது) கோவளம் கடற்கரைக்குச் சென்று பல அழகிய வண்ண மீன்களைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கலவா மீன். ஓவியத்தின் கீழே அரபுத் தமிழில் கலவா மீன் என எழுதப்பட்டுள்ளது

19ஆம் நூற்றாண்டின் மீன்கள்: கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள 30 மீன் ஓவியங்களில் பெரும்பாலானவை மேரி சைமண்ட்ஸ் தீட்டியதுதான். மீன்களை மட்டுமன்றி அந்தப் பகுதியின் நிலவமைப்பையும், மீனவர்களையும்கூட ஓவியமாகத் தீட்டியுள்ளார். இந்த நீர்வண்ண ஓவியங்கள் ஒரு கலைப்படைப்பாக மட்டுமல்லாமல் அறிவியலுக்கும் பெரும் பங்களிப்பாக உள்ளன.

இந்த முப்பது வகை மீன்களின் ஓவியங்களை, அப்போதைய கடற்சூழலின் வரலாற்றுப் பதிவாகப் பார்க்க வேண்டும். ஓவியங்களில் இருக்கும் பல வகையான மீன்கள் இப்போது அழியும் அபாயத்தில் உள்ளவை. எடுத்துக்காட்டாக அவர்கள் பதிவுசெய்த ரம்பம் போன்ற மூக்கை உடைய திருக்கைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை வேளா மீன் (Knifetooth sawfish - Anoxypristis cuspidata) தற்போது அப்பகுதியிலிருந்து அற்றுப்போய்விட்டதாக அறியப்படுகிறது.

இவரது மீன் ஓவியங்களின் கீழே இவற்றின் தமிழ்ப் பெயரையும் பதிவுசெய்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவெனில் அவை அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளன. அதாவது அரபுத் தமிழில் (ஆங்கிலத்தில் Arwi) எழுதியுள்ளனர். எடுத்துக்காட்டாக கலவா மீனின் ஓவியத்தின் கீழ் (தற்போதைய அறிவியல் பெயர் Cephalopholis formosa) அதன் பெயரை அரபுத் தமிழில் எழுதியுள்ளதைக் காணமுடிகிறது.

வேளா மீன் ஓவியம்

மீன் இயலின் முன்னோடி: பொதுவாக நீரில் இருக்கும்போது உள்ள மீனின் நிறம், தரைக்குக் கொண்டுவந்தவுடன் மங்கிவிடும். மேரி சைமண்ட்ஸின் ஓவியங்களைப் பார்க்கும்போது மீன்கள் தரைக்குக் கொண்டு வந்தவுடனேயே அவற்றின் நிறங்களைக் கவனித்து ஓவியம் தீட்டியிருக்கிறார். இந்திய மீன்களை முறையாக வகைப்படுத்தி 1875-78இல் Fishes of India (இந்திய மீன்கள்) எனும் நூலைப் பதிப்பித்திருந்தார், பிரான்சிஸ் டே எனும் ஆங்கிலேய மருத்துவர். பின்னாள்களில் இவரே மீன் துறை ஆய்வாளராகவும் ஆகியிருக்கிறார்.

ஆனால், மேரி சைமண்ட்ஸ் அதற்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே மதராசப்பட்டினத்தின் மீன்களை ஆவணப்படுத்தி இந்திய மீன் இயலின் (Ichthyology) முன்னோடியாகத் திகழ்கிறார்.

ஹென்றி க்வெலிம்: ஆங்கிலேய மன்னரால் புதிதாக ஆரம்பிக் கப்பட்ட மதராஸ், உச்ச நீதிமன்றத்தின்(தற்போதைய மெட்ராஸ் உயர் நீதிமன்றம்) துணை நீதிபதிகளில் ஒருவராகப் பொறுப்பேற்கவே எலிசபத் க்வெலிமின் கணவர் ஹென்றி க்வெலிம் 1801இல் மதராசப்பட்டினம் வந்தடைந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் பிடியில் இந்தியாவின் பல பகுதிகள் இருந்தாலும், அவர்களிடமிருந்த நீதி வழங்கும் அதிகாரங்களை இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, ஆங்கிலேயச் சட்டங்களைப் பின்பற்றி நீதி வழங்கவே இந்த நீதிமன்றம் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்தது.

இதனால், விசாரணை நடத்தும் அதிகாரம் யாருக்கு என்பதில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. பொதுமக்கள், கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போராட புதிதாக ஏற்படுத்தப்பட்ட இந்த நீதிமன்றம் உதவியது. இது அவர்களது ஆதிக்கத்திற்குக் குந்தகம் விளைவிப்பதாக கிழக்கிந்திய கம்பெனியினர் எண்ணினர். இது போன்ற ஒரு பதற்றமான சூழலில்தான் ஹென்றி க்வெலிம் துணை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருந்தார்.

க்வெலிமின் நேர்மை: ஜூலை 1806இல் வேலூர் சிப்பாய்க் கலகத்தினைத் தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனி மதராஸில் ஒரு போலீஸ் படையை உருவாக்கியது. எவரையும் கைது செய்யவும், அவர்களை உச்சநீதிமன்றத்தின் முன் கொண்டுவரத் தேவையில்லை என்பது போன்ற அதிகாரங்களை இந்தப் படை கொண்டிருந்தது.

நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஏற்படுத்தப்பட்ட இந்தச் செயல்களைக் கொடுங்கோன்மை எனச் சொல்லி ஹென்றி கடுமையாக எதிர்த்தார். இந்நிலையில் குற்றவாளி எனக் கருதப்பட்ட ஒரு இந்தியரைக் கைது செய்ததை எதிர்த்து ஹேபியஸ் கார்பஸ் மனுவை (ஆள்கொணர்வு மனு) சமர்ப்பிப்பதற்கு அனுமதி அளித்தார்.

இது போன்ற காரணங்களால் அப்போதைய மதராஸின் கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பெண்ட்டிங் (இவர் உடன்கட்டை (சதி) ஏறுவது, நரபலி கொடுப்பது, பெண் சிசுக்கொலை ஆகியவற்றைத் தடைசெய்தவர்), மதராஸ் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சர் தாமஸ் ஸ்ட்ரேஞ்ச் ஆகியோர் ஹென்றி க்வெலிமைத் துணை நீதிபதி பதவியிலிருந்து நீக்க பிரிட்டன் அரசிடம் புகார் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 1807இல் விசாரணைக்காக நாடு திரும்புமாறு பிரிட்டன் அரசு அவருக்கு உத்தரவிட்டது. எலிசபத் க்வெலிம் 21 டிசம்பர் 1807இல் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு மேரி சைமண்ட்ஸும் ஹென்றி க்வெலிமும் மதராசப்பட்டனத்திலிருந்து இங்கிலாந்து திரும்பினர்.

அவர் புறப்படுவதற்கு முன் இந்தியர்களின் அன்புக்குப் பாத்திரமான அவருக்கு மூன்று பிரிவுபசார விழாக்கள், புகழுரைக் கூட்டங்கள் நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன. இந்தப் புகழுரைக் குறிப்புகளில் அவரது நேர்மையையும் நடுநிலைமையையும் இந்தியர்கள் எனும் பாகுபாடில்லாமல் நீதி வழங்கியதையும் பாராட்டி ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

ஹென்றி க்வெலிம் ஒரு கோபக்காரர் என்று சில குறிப்புகள் சொன்னாலும், அவரது மனைவி எலிசபத் க்வெலிமின் கடிதங்களில் நற்பண்புகள் உள்ளவராகவே அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். சாந்தோமில் அவர்கள் தங்கியிருந்த பங்களாவிலிருந்து நீதிமன்றத்திற்குப் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்து குதிரையில் சென்றதாகவும், இது அப்பகுதியில் உள்ள இயற்கையையும் உயிரினங்களையும் பார்த்து ரசிப்பவராக அவரை மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களுடன் சேர்ந்து சில வேளைகளில் ஓவியங்களைத் தீட்டவும் ஹென்றி முயன்றுள்ளார்.

எலிசபத் க்வெலிம், மேரி சைமண்ட்ஸ் சகோதரிகளின் ஓவியங்கள், கடிதங்கள், ஹென்றி க்வெலிம் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றிலிருந்து 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதராசப்பட்டினத்தின் இயற்கை வளம், வாழ்க்கை முறை, அப்போது நிலவிய அரசியல் சூழல் எனப் பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது.

இவர்களின் படைப்புகள் மூலம் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணரலாம். காலம்தாழ்த்தி அறியப்பட்ட இவர்களது படைப்புகளுக்குச் சரியான நேரத்தில் அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும், அவற்றின் முக்கியத்துவம் என்றைக்குமே குறையப்போவதில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்