மறக்க முடியாத ஜூலை 20 -அமித் ஜெத்வா என்றொரு சிங்கம்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

அமித் ஜெத்வாவைத் தெரியுமா உங்களுக்கு? சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைப் போராளி. குஜராத் வனத்துறையினரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் எனில் ‘சிங்கம்’. 2010-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி இந்தியச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களால் மறக்க இயலாத நாள். அன்றைய தினம்தான் அந்தச் சிங்கம் அகமதாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டது.

தொடர்பு அம்பலம்

கிர் காடுகள் அருகே கெம்பா பகுதியில் செயல்பட்ட ‘கிர் நேச்சர் யூத் கிளப்’ அமைப்பின் தலைவரான அமித் ஜெத்வா, கிர் காடுகளில் நடந்த சட்ட விரோதச் செயல்பாடுகளைக் கடந்த 20 ஆண்டுகளாக அம்பலப்படுத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கிர் காடுகளில் அநேக அத்துமீறல்கள் நடந்தன. குறிப்பாக, அழிவின் விளிம்பில் இருக்கும் ஆசியச் சிங்கங்கள் வேட்டையாடப்பட்டன. சிங்கங்களைக் காக்கத் தொடர் போராட்டங்களை நடத்தினார் அமித் ஜெத்வா.

2007-ம் ஆண்டில் கிர் காட்டில் சில சிங்கங்கள் மர்மமான முறையின் காணாமல் போயின. ஒரு முறை பாபரியா வனத்துறை சோதனைச் சாவடியின் மிக அருகில் சிங்கம் ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டது. கடத்தல்காரர்கள் அதைத் தூக்கி செல்லும் முன்னர், களத்தில் இறங்கி அதை அம்பலப்படுத்தினார் அமித் ஜெத்வா. அப்போதுதான் கிர் காடுகளில் வனத்துறையினருக்கும், சிங்கங்களை வேட்டையாடும் மாஃபியாக்களுக்கும் இருந்த தொடர்புகள் வெளிப்பட்டன.

தண்டனை

அரிய வகை சின்காரா (Chinkara) மானை சல்மான் கான் வேட்டையாடியதை அம்பலப்படுத்தி, அவருக்குச் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்ததும் இவரே. ‘லகான்' படத்தில் சின்காரா மானைச் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிப்படுத்தியதை எதிர்த்து ஆமிர் கான் மீது வழக்கும் தொடர்ந்தார்.

தொடர்ந்து கிர் காடுகளின் சுற்றுவட்டாரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குவாரிகளை எதிர்த்துப் போராடினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இவர் அம்பலப்படுத்திய பல உண்மைகளால் கலகலத்துப்போனது குஜராத்தின் பா.ஜ.க. அரசு.

குறிப்பாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டினு சோலங்கியுடன் நேரடியாகவே மோதினார் அமித் ஜெத்வா. இவரது சட்டப் போராட்டங்களால் சோலங்கிக்கு சொந்தமானதாகக் கருதப்பட்ட குவாரிகள் இழுத்து மூடப்பட்டன.

சுட்டது யார்?

இது தொடர்பான வழக்கு அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. ஒருநாள் நீதிமன்றத்துக்கு வந்த அமித் ஜெத்வாவை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பின்னர், இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது.

சோலங்கி கைது செய்யப்பட்டார். அதன் பின்புதான் கிர் காடுகளில் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறைந்தன. இப்போது அங்கு சிங்கங்கள் வேட்டையாடப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது.

ஒருமுறை சிங்கங்களைக் காக்கும் போராட்டத்தின்போது இப்படிச் சொன்னார் அமித் ஜெத்வா: "என்றாவது ஒருநாள் இதே சிங்கங்களைப் போல நானும் சுட்டுக் கொல்லப்படுவேன் என்பதை அறிவேன். அதற்கு முன்பாக இந்தச் சிங்கங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும்". ஆம், இன்று கிர் காட்டில் நிம்மதியாக உலவுகின்றன ஆசியச் சிங்கங்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

28 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்