கடலம்மா பேசுறங் கண்ணு 22: கடலுக்குள் ஒரு பட்டணம்

By வறீதையா கான்ஸ்தந்தின்

முன்னிருட்டு சூழ்கையில் கடலுக்குள் ஒரு பட்டணத்தைக் காட்சிப்படுத்தும் தூண்டில் மீன்பிடிப் படகுகளின் வாயுவிளக்குகள். கடற்பரப்பின் மேற்கே தாலாட்டில் மின்னுவதும் மறைவதுமாகக் கடலுக்குள் ஒரு வானத்தைக் காட்டும், மேற்கே தொலைதூரத்தில் பரவி மறையும் கலங்கரை விளக்கின் ஒளிவீச்சு. கிழக்கே அலைவாய்க் கரையில் தாக்கத் தயாராக இருக்கும் பீரங்கிகள்போல் சீராக அணிவகுத்து நிற்கும் கட்டுமரங்கள்.

நாடோடிகளின் கூடாரங்களை நினைவுபடுத்தும் பன்னாயங்களின் வரிசை. அதன் பின்னணியில் நெய்தல் குடிகளின் கம்பீர அடையாளமாய்க் கோயிலின் ஒற்றைக் கோபுரம். பகல் வெயிலின் வெதுவெதுப்பைத் தேக்கிவைத்திருக்கும் திறந்த மணல்வெளியில், பால் நிலவொளியில் மணல் கூப்பித் தலைவைத்து நான் வெற்றுடம்பாகக் கவலையின்றி உறங்குகையில் இரவுக் காவலனாய்ப் பேசி இரைச்சலிடும் கடல்.

அமுதசுரபி

வானையும் மலைமுகட்டையும் கானகத்தையும் சமவெளியையும் தழுவி மீளும் கடல். யுகங்களை விழுங்கி நிற்கும் கடல். யுத்தங்களுக்கு மவுன சாட்சியாய் நின்ற கடல். சாம்ராஜ்யங்களை அரண் செய்த கடல். லட்சோப லட்சம் மனிதர்களின் குருதிப்புனலைச் சீரணித்த உப்புக் கடல். வாசனைத் திரவியங்களுக்கும் விலைபடு முத்து நவரத்தினங்களுக்கும் அற்பாயுசு மனிதர்கள் நாடுகளை நோக்கிப் பாய்விரித்துப் பயணித்தப் பரந்த கடல்.

தொன்றுதொட்டு உயிரின் தொட்டிலாய் நின்ற கடல். வளங்களின் சுரபியாய் நிறைந்த கடல். உலகின் தட்பத்தையும் வெப்பத்தையும் தீர்மானிக்கும் சக்தி உறையும் கடல். இயற்கையின் சடுதி மாற்றங்கள் தரும் உளைச்சல்களால் சில பொழுதுகளில் சற்றே நிலைகுலைந்தாலும், மறுகணமே அடங்கித் தாய்போல் பரிந்துபடும் கடல்.

கடல் எனக்கு அலுக்கவில்லை. திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒரு சேதி சொல்கிறது: ‘ஒவ்வொரு கணமும் புதிது, அதில் முற்றாய் வாழ்ந்துவிடு’ என்று.

நிலைகொள்ளா நீர்த்திரள்

கடலை நினைத்தவுடன் சட்டென்று உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம், ஒய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு… பிரம்மாண்டம் என்பதன் குறியீடாகக் கடலைச் சொல்கிறோம். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கடலைப் பரவை என்கின்றன. பரவை என்றால் பரந்துபட்ட என்று பொருள்.

கடல், பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்புநீர். கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. பூமியின் 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 X 106 கன மீட்டர்கள். பொது மொழியில் சொன்னால் 3740 கோடி கோடி கனமீட்டர்கள். நிலத்தைப் பொறுத்தவரை அதன் பரப்பில் மட்டும்தான் உயிர்கள் உலவ முடியும். கடலோ முப்பரிமாண ஊடகம். உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாகத் திகழ்கிறது கடல்.

கடல் என்பது நீர் என்னும் திரவம். இயல்பில் வெப்பசக்தி மாற்றங்களைப் பொறுத்துத் திட நிலைக்கும் ஆவி நிலைக்கும் மாறிக்கொள்கிற திரவம். தன்னளவில் நிறமற்ற இந்தத் திரவம்தான் உயிரின் ஆதாரம். வேறெந்தப் பொருளையும் போன்று நீருக்கும் பிரத்யேகமான இயற்பியல், வேதியியல் பண்புகள் உண்டு. நீரானது உயிரினங்களின் அக ஊடகமாகவும் புற ஊடகமாகவும் இயங்குவதற்கு இந்தப் பண்புகள்தாம் காரணமாக இருக்கின்றன. அடிப்படையில் கடலின் பண்பு என்பது அது கொண்டிருக்கும் நீர்த்திரளின் பண்புதான்.

கடல் உயிரின் தொட்டில். ஆதியில் உயிர், கடலில் தோன்றியதாகப் பரிணாமவியல் சொல்கிறது. நீரின்றி அமையாது உலகு. நீர் அமைந்து படுவதனால் மட்டுமே உலகில் உயிர்கள் தோன்றி வாழ்கின்றன. நீர் உயிரின் அமுதம். உயிரின் உள்ளார்ந்த இயங்கு ஊடகமும் நீர்தான். மனித உடலில் ஏறத்தாழ 75 விழுக்காடு நீர். உலகின் இயக்கமும் அதன் விளைவான நீரின் இயக்கமுமே உயிர் இயக்கத்தின் ஆதார சுருதி. உயிர்களின் அன்றாடச் செயல்பாடுகள் என்பவை வளர்சிதை மாற்றம் சார்ந்தவை. உயிர்களின் இயக்கம் என்பது கரிம மூலக் கூறுகளின் கூட்டல் கழித்தல் கணக்கீடுகள்தாம்.

(அடுத்த வாரம்: வெப்பத்தை உள்வாங்கும் கடல்)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்