குழந்தைகள் திறனை எப்படியெல்லாம் வளர்க்கலாம்?

By கோபால்

குழந்தைகளுக்கு அனைத்து திறன்களும் இருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு ஊக்குவித்து, மேம்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களுடைய எதிர்காலத்தை வளமாக்க உதவ முடியும். சிறு வயதிலேயே திறன்களைச் சரியாக அடையாளம் கண்டு, அவற்றை முழுமையாக வளர்த்துக்கொண்டவர்கள் பொறுப்புமிக்க ஆளுமைகளாக வளர்ந்து சமூகத்துக்குப் பங்களிப்பார்கள். துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க 2014-இல் தொடங்கப்பட்ட ‘மஞ்சள் பை’ அறக்கட்டளை தற்போது இந்தப் பணியைக் கையில் எடுத்துள்ளது.

திறன்களுக்கான செயல்பாடுகள்

துணிப்பைகளைத் தயாரிப்பதற்காகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் களுக்குத் தையல் பயிற்சி அளித்துவருகிறது மஞ்சள் பை அறக்கட்டளை. 250-க்கும் மேற்பட்ட பெண்கள், துணிப்பை தைப்பதன் மூலம் வாழ்வாதாரத்தைப் பெற்றுள்ளார்கள். துணிப்பை தைக்க வரும் பெண்களின் குழந்தைகள் மாலை நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்க உதவும் வகையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டடன. அவர்களுக்கு வாழ்க்கை நடைமுறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதன் நீட்சியாகக் குழந்தைகளின் திறன்களை அடையாளம் கண்டு மேம்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் வகையில் ‘திறன்கள் வசப்பட களம் அமைப்போம்’ என்னும் திட்டத்தையும் இந்த அறக்கட்டளை தொடங்கியுள்ளது.

இத்திட்டம் எப்படிச் செயல்படுகிறது? “பொதுவாகத் திறன்கள் என்றால் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைத் திறன்களையோ விளையாடுதல் போன்ற உடலியல் திறன்களையோதான் என்று புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், நன்கு பேசுவது, இயற்கையை உற்று நோக்குவது, தன் வேலைகளைத் தானே செய்து கொள்வது போன்றவையும் திறன்கள்தாம். அவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லி மேம்படுத்திக்கொள்ள வைக்கும் வழிகள் இல்லை. அதனால்தான் ‘திறன்கள் வசப்பட களம் அமைப்போம்’ என்கிற திட்டத்தைத் தொடங்கினோம்” என்கிறார் மஞ்சள் பை அறக்கட்டளையின் கல்விச் செயல்பாடுகள் பிரிவின் திட்ட இயக்குநர் உஷா.

மாணவனுடன் உஷா

திறன்கள் பற்றியும் அவர் விளக்கம் அளிக்கிறார். “அமெரிக்காவைச் சேர்ந்த வளர்ச்சிசார் உளவியலாளர் ஹோவர்ட் கார்ட்னர் தன்னுடைய ‘ஃப்ரேம் ஆஃப் மைண்ட்’ என்னும் புத்தகத்தில் ‘பன்முக அறிவுத் திறன்’ என்னும் கோட்பாட்டை முன்மொழிந்துள்ளார். பன்முக அறிவுத் திறன் என்பது இடம் சார்ந்த காட்சித் திறன், மொழியியல் திறன், உடல் இயக்கத் திறன், கணித/தர்க்கத் திறன், இசைத் திறன், இயற்கையோடு ஒன்றியிருக்கும் திறன், பிறருடன் கலந்து பழகும் திறன், தன்னைத்தான் அறியும் திறன் ஆகிய எட்டுத் திறன்களை உள்ளடக்கியது. இந்த எட்டுத் திறன்களும் எல்லோரிடமும் இருக்கும். ஒன்றிரண்டு திறன்கள் மட்டும் பிரதானமாக இருக்கும்.

ஒவ்வொரு குழந்தையிடமும் எந்தெந்த திறன்கள் பிரதானமாக இருக்கின்றன என்பதை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்துக்கொள்ளவும் வெளிப்படுத்தவும் உதவுவதும் மற்ற திறன்களையும் முடிந்த வரை வளர்த்துக்கொள்ள ஊக்குவிப்பதும்தான் ‘திறன்கள் வசப்பட களம் அமைப்போம்’ திட்டத்தின் நோக்கம். இதற்காக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கான செயல்பாடுகளை (Activities) எடுத்துக்கொண்டு அவற்றை இந்த எட்டுத் திறன்களுடன் பொருத்தினோம். குழந்தைகளிடம் இருக்கும் திறன்களை அடையாளம் காண ஏற்ற வகையில் ஒவ்வொரு திறனுக்கும் 15 செயல்பாடுகள் என்னும் கணக்கில் மொத்தமாக 120 செயல்பாடுகளைத் தொகுத்தோம். எட்டுத் திறன்களுக்கு அவற்றுக்கான செயல்பாடுகளை வைத்துத் தனித் தனி கையேடுகளைத் தயாரித்துள்ளோம். இந்தக் கையேடுகளில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளைக் குழந்தைகளைச் செய்ய வைத்துத் திறன்களை அடையாளம் காண்பதற்கும் மேம்படுத்திக்கொள்ள பயிற்சி அளிப்பதற்கும் வழிகாட்டும் ‘பயிற்றுவிப்பாளர் செயல்பாட்டு வழிமுறை’ கையேட்டையும் தனியாக வெளியிட்டுள்ளோம்” என்கிறார் உஷா.

பயிற்சியின் அடுத்த கட்டங்கள்

இந்தக் கையேடுகளைக் கொண்டு 22 வாரங்களுக்கு இங்கே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளுக்குப் பிறகு குழந்தைகளின் திறன்களைக் கண்டறிந்து அவர்கள் எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்தலாம் என்றும் வழிகாட்டுகிறார்கள். அடுத்த கட்டமாக அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் இயங்கும் நிபுணர்களையும் சந்திக்க வைக்கிறார்கள். மூன்றாம் கட்டமாக அந்தத் துறைகள் சார்ந்த களங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

“இந்த பயிற்சியைப் பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் இருக்கும் 6 முதல் 8ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு நடத்துகிறோம். இந்தப் பருவத்தில்தான் குழந்தைகளுக்குப் புதிதாகக் கற்பதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்தப் பருவத்தில் நாம் அவர்களுக்குக் களத்தை அமைத்துக் கொடுப்பதன்மூலம் அவர்கள் என்னவாக ஆக விரும்புகிறார்களோ அப்படி ஆவதற்கான ஒரு தூண்டுகோலாய் இருக்க முடியும். இவர்கள் 10ஆம் வகுப்புக்கு வரும்போது தமது திறன் என்ன என்பது குறித்த முழுப் புரிதலுடன் அடுத்து என்ன செய்ய வேண்டும், வருங்காலத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்ய முடியும்” என்கிறார் உஷா.

பிறரும் பயன்படுத்தலாம்

இந்தக் கையேடுகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க பிறருக்கும் இவை வழங்கப்படுகின்றன. “இதுவரை 120 ஆசிரியர்கள், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்கள் 30 பேருக்கு இந்தக் கையேடுகளைக் கொடுத்திடுக்கிறோம். பெற்றோர்களும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கையேடுகளில் உள்ள பயிற்சிகள் அனைத்தும் நிறைய குழந்தைகளை வைத்துக் குழுவாக மேற்கொள்ளப்பட வேண்டியவை. எனவே, தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள பிற குழந்தைகளை ஈடுபடுத்தி பயிற்சி அளிக்கிறோம் என்று கூறுபவர்களுக்கு மட்டும் உரிய சோதனைகளுக்குப் பிறகு கொடுத்துள்ளோம்” என்கிறார் உஷா.

குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க, தகவல்களை அறிய விரும்புவோர் education@theyellowbag.org என்கிற மின்னஞ்சலில் அணுகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்