பதற்றம் வேண்டாமே! - உதவிக்கு வரும் மாணவ உளவியலாளர்கள்!

By வா.ரவிக்குமார்

இன்றைய இளைஞர்கள், மாணவர்களிடையே மனப் பதற்றம் அதிக தாக்கம் செலுத்திவருகிறது. தன்னுடைய வளர்ச்சிக்குத் தானே தடையாக இருப்பதாகக் கற்பிதம் செய்துகொள்வது, மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுத் தாழ்வாக நினைத்துக்கொள்வது, தனக்கு எதுவுமே வெற்றிகரமாக அமையவில்லை எனத் தவறாக நம்புவது இப்படிப் பல பிரச்சினைகள் இன்றைய இளைய சமூகத்தினரிடம் உள்ளன.

அத்துடன் வளரிளம் பருவத்தினர் தங்களுடைய பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதற்குக்கூட ஆளில்லாமல் இருக்கின்றனர். யாரிடமாவது தங்களின் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டால், அவர்களாலேயே புதிதாகப் பிரச்சினைகள் வந்துவிடுமோ என்கிற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. இப்படிப் பல்வேறு சிக்கல்களால் தங்களுக்குள்ளேயே குமைந்தபடி இருக்கும் வளரிளம் பருவத்தினர் நாளடைவில் மனப் பதற்றத்துக்கு ஆளாகின்றனர்.

இப்படிப்பட்ட மாணவர்களுக்கு உதவ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு வழியைக் கண்டறிந்திருக்கின்றனர். மாணவர்களின் பிரச்சினைகளைப் பொறுமையோடு காதுகொடுத்துக் கேட்பது, அவர்களை ஆற்றுப்படுத்தி, தெளிவு ஏற்படுத்திப் பிரச்சினைகளை எதிர்கொள்ள அவர்களை மனத்தளவில் தயார்ப்படுத்துகின்றனர். இதற்காக மாணவர்களே நிர்வகித்துவரும் இணையதளம்தான் `ஹேப்பிஇன்க்’ (happyinc.in).

இலவசத் தளம்

பெங்களூருவில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கியான் கோத்வானி, தன் தோழி நந்தினியுடன் இணைந்து இந்த வலைத்தளத்தை உருவாக்கி யிருக்கிறார்.

“வளரிளம் பருவம் பட்டாம்பூச்சிகள் மனத்தில் பறக்கும் காலம் மட்டுமல்ல, கரோனா பெருந்தொற்று இன்னமும் முழுமையாக விலகாத நிலையில், ஆசிரியர் - மாணவருக்கு இடையேயான நேரடியான வழிகாட்டுதல் குறைந்துவிட்டது. இந்த இடைவெளி மாணவர்களுக்குக் கற்றலில் மனப் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து தேர்வை ஒட்டிய சிந்தனை, அதற்காகத் தயாராவதில் எழும் சிக்கல்கள், கல்லூரிகளில் சேர்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, குடும்பத்தில் - ஒத்த வயதுள்ள நண்பர்களுடனான நட்பில் ஏற்படும் உரசல்களால் ஏற்படும் மனப்பதற்றம், குடும்ப சூழ்நிலையால் பொருளாதாரப் பாரத்தை சுமந்துகொண்டிருப்பது என பல நிலைகளிலும் வளரிளம் பருவத்தினர் மனப் பதற்றத்துக்கு ஆளாகி வருகின்றனர். இப்படி 13 வயதிலிருந்து 18 வயதுவரையுள்ள வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகளை காதுகொடுத்துக் கேட்பதற்கும் அவர்களை ஆற்றுப்படுத்துவதற்கும் முழுக்க முழுக்க இலவசமாக நடத்தப்படுவதே ஹேப்பிஇன்க்” என்கிறார் நந்தினி.

காதுகொடுப்போம்

இந்த வலைத்தளத்தில் மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் விவரங்கள், அவர்களுடைய பிரச்சினைகளின் ரகசியம் காக்கப்படும் என்பதற்கு முழு உத்தரவாதம் தரப்படுகிறது. மனப் பதற்றத்திலிருந்து விடுபட நினைக்கும் ஒரு மாணவனுடன் பேசும் மாணவ கவுன்சலர்கள் அனைவருமே நிபுணர்களிடம் முறையாகப் பயிற்சிபெற்றிருக்கிறார்கள். அதே வேளை, மாணவ கவுன்சலர்கள் தங்களைப் போன்ற சக மாணவனின் துயரத்துக்கு வடிகாலாக நேரத்தைச் செலவிடுவது, சம்பந்தப்பட்டவர்கள் அந்த இறுக்கத்திலிருந்து மனத்தளவில் மீள்வதற்கு உதவுவதுடன் நிறுத்திக்கொள்கின்றனர். தீர்வுகளை முன்மொழிவதில்லை. எந்த இடத்திலும் `தாங்கள் தொழில்முறையாக செயல்படும் நிபுணர்களுக்கு நிகரானவர்கள்’ என்று கூறிக்கொள்வதில்லை.

தங்களின் பிரச்சினைகளைக் கூறவிரும்பும் மாணவனுடன் இன்னொரு மாணவ கவுன்சலர் மெய்நிகர் வடிவில் முகம் பார்த்தும் பேசலாம் அல்லது முகம் பார்க்காமலும் பேசலாம். ஒரே கவுன்சலரிடம் அடுத்தடுத்த அமர்வுகளில் பேசுவதற்கான வசதியையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்த வலைத்தளம் தொடங்கப்பட்ட ஒரே மாதத்தில் 15 மாணவ கவுன்சலர்கள் 40 மாணவர்களுக்கு உதவியிருக்கின்றனர்.

உலகப் போட்டியில் வெற்றி

“மாணவர்களுக்கான பிரத்யேக மகிழ்ச்சி செயலியை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறோம். அதில் மாணவர்களுக்கான நம்பிக்கைக் கதைகள், போராடிய கால அனுபவம், மீண்டுவந்த காலம், எழுச்சிக்கான எழுத்து போன்றவை இடம்பெறும். மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உத்வேகம் அளிக்கும் செயலியாக அது இருக்கும்” என்கிறார் கியான்.

ஹேப்பிஇன்க் வலைத்தளத்தை மாணவர்கள் ஆலோசனைக்காக மட்டுமே அணுக வேண்டியதில்லை. கவிதை எழுதுதல், பாடல்களைப் பாடுவது, மாணவர்களுக்கான பிரத்யேகப் பாடல்களின் விருப்பப் பட்டியல் எனப் பல அம்சங்களை ஹேப்பி வலைப்பூக்களில் பதிவிடலாம்.

அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கக் கல்வி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாணவத் தொழில்முனைவோருக்கான கட்டுரைப் போட்டி, பேராசிரியர்கள் தொழில்முனைவோர்களுடனான உரையாடல் போட்டியில் உலக அளவில் 131 மாணவக் குழுக்கள் பங்கெடுத்தன. அதில் இரண்டாவது இடத்தை ஹேப்பிஇன்க் மாணவர் குழு வென்றிருக்கிறது. உறுதிகொண்ட நெஞ்சம்தானே ஆரோக்கியமான வளரிளம் பருவத்தினருக்கான அடையாளம்!

தொடர்புக்கு: https://happyinc.in/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்