விடுதலைப் போரின் வீரம்மிக்க அடையாளம்

By கோபால்

இந்திய விடுதலைப் போரின் முக்கியமான ஆளுமையும் புரட்சியாளரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போர்புரிந்த ராணுவப் படையை வழிநடத்தியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்த ஆண்டு தொடங்கியுள்ளது. தேச விடுதலைப் போருக்குத் தன்னையே ஈந்த, பெரும் தலைவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள்:

# 1897 ஜனவரி 23 அன்று இன்றைய ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக்கில் பிறந்தார்.

# ஆங்கிலேயே அரசுக்கு எதிரான தேசியவாத செயல்பாடுகளில் பங்கேற்றதற்காக கல்கத்தாவின் (இன்றைய கொல்கத்தா) மாநிலக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். அதே நகரில் இருந்த ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார். இங்கிலாந்து சென்ற அவர் ஐ.சி.எஸ். (இந்தியன் சிவில் சர்வீசஸ்) தேர்ச்சிபெற்றார். இது இன்றைய ஐ.ஏ.எஸ். தேர்ச்சிக்கு இணையானது.

# ஆனால், இந்தியாவில் ஆங்கிலேய அரசின் கொடுமைகளை எதிர்த்து அவ்வரசின்கீழ் பணியாற்ற மறுத்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கத் தயாரானார்.

# மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். காந்தியின் அறிவுரையை ஏற்று வங்கத்தில் சித்தரஞ்சன் தாஸின்கீழ் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது இளைஞர்களுக்குக் கற்பிப்பவராகவும் இதழாளராகவும் வங்கக் காங்கிரஸின் இளம் தொண்டர் படையை வழிநடத்துபவராகவும் செயல்பட்டார். கல்கத்தா நகராட்சி நிர்வாகத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தால் 1921இல் கைது செய்யப்பட்டார்.

# காந்தி மீது பெரும் மதிப்புகொண்டிருந்த போஸ், அவருடைய அகிம்சைவழிப் போராட்டத்தையும் பொருளாதாரக் கொள்கைகளையும் முழுமையாக ஏற்கவில்லை. புரட்சிகரக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் பிரிட்டிஷ் அரசு அவரை பர்மாவுக்கு (இன்றைய மியான்மர்) நாடுகடத்தியது.

# 1927இல் தாய்நாடு திரும்பியவர் வங்கக் காங்கிரஸ் கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு காங்கிரஸின் பொதுச் செயலாளராகி நேருவுடன் இணைந்து பணியாற்றினார். இருவருமே சோஷலிசக் கொள்கை, தொழில்மயமாக்கம் ஆகியவற்றை ஆதரித்தவர்கள். ஆங்கிலேய அரசுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆதரவாக இருந்ததற்காக, போஸ் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தபோதே கல்கத்தா மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# காசநோய் கண்டிருந்த நிலையில் ஐரோப்பாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். உடல் நலிவுற்றிருந்தபோதும் ஐரோப்பியத் தலைவர்களை சந்தித்தும் நூல்கள், இதழ்களில் கட்டுரை எழுதியும் இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.

# மீண்டும் இந்தியா திரும்பி 1938இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய திட்டக் குழுவையும் விரிவான தொழில்மயமாக்கல் கொள்கையையும் உருவாக்கினார். கிராமியப் பொருளாதாரத்தையும் குடிசைதொழில்களையும் காந்தி முதன்மைப்படுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையிலான முரண்கள் அதிகரித்தன.

# 1939இல் மீண்டும் காங்கிரஸ் தலைவராக போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர் தோற்றார். காந்தியின் ஆதரவின்றி பதவியில் தொடர விரும்பாமல் போஸ் பதவியைத் துறந்தார்.

# விடுதலைக்குப் போரிட்ட புரட்சிகர சக்திகளை ஒன்றுதிரட்டும் நோக்கில் 'ஃபார்வர்டு பிளாக் கட்சி'யைத் தொடங்கினார்.

# 1940இல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தருணத்தில் சிறையில் இருக்க மறுத்து சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டார். இதனால் அச்சமடைந்த பிரிட்டிஷ் அரசு அவரை விடுவித்தது.

# பிரிட்டிஷ் அரசின் தீவிர கண்காணிப்பை மீறி கல்கத்தாவிலிருந்து காபூல், மாஸ்கோ வழியாக ஜெர்மனியை அடைந்தார்.

# இரண்டாம் உலகப் போர் நேரத்தில் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியை அகற்ற ஜெர்மனியில் இருந்த இந்தியர்களை உள்ளடக்கிய ராணுவப் படையுடன் இணைந்து செயல்பட்டார். அங்குதான் அவருக்கு 'நேதாஜி' (மரியாதைக்குரிய தலைவர்) என்னும் அடைமொழி வழங்கப்பட்டது.

# இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் கூட்டாளியாக இருந்த ஜப்பான் தென்கிழக்கு ஆசியா மீது படையெடுத்தபோது போஸ் ஜப்பானுக்குச் சென்றார். தென்கிழக்காசியாவில் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கலைக்கப்பட்டிருந்த இந்திய தேசிய ராணுவம் புத்துயிர்பெற்று போஸின் தலைமையில் இயங்கத் தொடங்கியது. “உங்கள் ரத்தத்தைக் கொடுங்கள் நான் விடுதலை பெற்றுக்கொடுக்கிறேன்” என்பது போன்ற அவருடைய புகழ்பெற்ற வாசகங்களாலும் களச் செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு பர்மா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்த இந்திய இளைஞர்கள் பலர் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

# ஜப்பான் படைகளுடன் கோஹிமா, இம்பால் வழியாக 'இந்திய தேசிய ராணுவம்' (ஐ.என்.ஏ.) இந்தியாவுக்குள் நுழைந்தது. ஜப்பான் அரசின் முழுமையான ஆதரவு கிடைக்காததால், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திடம் தோல்வியுற்று ஐ.என்.ஏ. பின்வாங்கியது.

# அதற்குப் பிறகும் இந்திய விடுதலைக்குப் போர்புரியும் படையாக 'இந்திய தேசிய ராணுவம்' தனித்து செயல்பட்டுவந்தது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனிடம் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து, இந்திய தேசிய ராணுவத்தில் எஞ்சியவர்களும் சரணடைய நேர்ந்தது.

# 1945 ஆகஸ்ட் 18 ஜப்பான் ஆக்கிரமிப்பிலிருந்த தைவானில் ஒரு விமான விபத்தில் போஸ் மரணமடைந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. போஸின் ஆதரவாளர்கள் அவருடைய மரணத்துக்கு சொல்லப்பட்ட காரணத்தை ஏற்க மறுத்தனர். அவருடைய மரணத்தில் இன்றுவரை மர்மம் நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்