இப்போது என்ன செய்கிறேன்? - புரிந்துகொண்டு உதவ முயல்கிறேன்

By செய்திப்பிரிவு

தொகுப்பு - கோபால்

சுடரொளி- அரசுப் பள்ளி ஆசிரியர், மாநில ஒருங்கிணைப்பாளர், குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பு

யுனிசெஃப் அமைப்பின் முன்னெடுப்பான குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வத்துடன் கல்வி சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்து வந்த ஆசிரியர்கள், அவர்கள் நடத்திவரும் அமைப்புகள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டமைப்பாக இயங்கிவருகிறது. நான் ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்கிற அமைப்பில் 11 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுவருகிறேன்.

இந்த ஊரடங்கு நேரத்தில் குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் முன்னெடுக்கப்படும் பணிகளை ஒருங்கிணைத்துவருகிறேன். இவ்வமைப்பின் சார்பில் இனிப் பள்ளி நடைமுறை என்னவாக இருக்கும், அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது அரசு, பெற்றோர், ஆசிரியர்கள் எல்லோரும் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கும், எவையெல்லாம் நடைமுறைச் செயல்பாடுகளாக இருக்க வேண்டும் என்பதை ஒரு திட்ட அறிக்கைபோல் தயாரித்து அரசுக்கு அளிக்க உள்ளோம்.

அந்தத் திட்ட அறிக்கையை உருவாக்குவதற்காக 41 கேள்விகளைத் தயாரித்து ஆசிரியர்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கிறோம். இதற்காக ஒரு செயலியை உருவாக்கியுள்ளோம். மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 100 ஆசிரியர்களிடம் இந்தச் செயலியின் மூலம் கருத்துக்கணிப்பை எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரது பிரதிநிதித்துவத்துடன் இந்தத் திட்டத்தை உருவாக்கி அரசுக்குக் கொடுக்க விரும்புகிறோம்.

உளவியல் முதலுதவிப் பயிற்சி

இந்தக் கொள்ளைநோய் ஓர் ஆண்டுக்கு மேல் நீடிக்கும் என்று தெரிகிறது. எனவே, இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உளவியல் முதலுதவி அளிப்பதற்கு ஆசிரியர்கள் அனைவரும் பயிற்சி பெறவேண்டும் என்பதை முதன்மையான கோரிக்கையாக அரசுக்கு வைக்கப் போகிறோம். அதற்கு முன்பாக நாங்களே உளவியல் வல்லுநர் குழு ஒன்றைக் கொண்டு மூன்று மணிநேர இணையவழிப் பயிற்சியை ஆசிரியர்களுக்கு அளித்துவருகிறோம்.

பொதுத் தேர்வு தேவையில்லை

இதற்கிடையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை இந்த ஆண்டு நடத்தத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எங்கள் கூட்டமைப்பு எடுத்துள்ளது.. இதற்கான பிரச்சாரங்களை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மேற்கொண்டுவருகிறோம்

எழுத்துக் கற்பித்தலுக்கான காணொலிகள்

ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளின் ஆசிரியராக தனிப்பட்ட முறையில் சில பணிகளை நான் செய்துவருகிறேன். முதல் வகுப்பு மாணவர்களுக்கு உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகியவற்றை எப்படிக் கற்பிப்பது என்பது குறித்த காணொலிகளை உருவாக்கிவருகிறேன். முதல் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களின் அடிப்படையில் அதன் உள்ளடக்கங்களை எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம் என்பது மாதிரி இந்தக் காணொலிகளை உருவாக்கியிருக்கிறேன். இது குழந்தைகளுக்கானதுதான் என்றாலும், இதைப் பார்த்து தங்கள் வகுப்பறையில் ஆசிரியர்களும் செயல்படுத்தமுடியும்.

இப்போதைக்கு ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் இந்தக் காணொலிகளைப் பகிர்ந்துவருகிறேன்.தொடக்கத்தில் இந்தக் காணொலிகளுக்கு நான்கைந்து பேர் எதிர்வினையாற்றினார்கள். அப்புறம் அவர்களாலும் இணைய வசதியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை. அந்த வகையில் இந்தக் காணொலி முயற்சி இப்போதைக்குத் தோல்விதான். என்னுடைய எல்லா மாணவர்களையும் அவற்றைப் பார்க்க வைக்க முடியவில்லை. உணவுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பர்களிடம் இணைய வசதியை எதிர்பார்க்க முடியாது.

ஆனால், அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது இந்தக் காணொலிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன். ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ அமைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு இவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

அலைபேசி உரையாடல்

இது தவிர என்னுடைய மாணவர்கள் அனைவரிடமும் வாரம் ஒரு முறை அலைபேசியில் அழைத்துப் பேசிவருகிறேன். அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் கொடுப்பது, இந்தச் சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வூட்டுவது ஆகிய பணிகளைச் செய்துவருகிறேன். இவர்கள் எல்லாம் நகர்ப்புற மாணவர்கள். இவர்களில் மூன்று குடும்பங்களுக்கு மட்டும் உடனடியாக உணவு போன்ற நிவாரணத்தை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

மாணவர்கள் என்ன செய்யலாம்?

முதலில் மாணவர்கள் அனைவரும் இந்தக் கொள்ளைநோய் தொடர்பான பாதுகாப்பு, விழிப்புணர்வு சார்ந்த அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக மனித இனம் பழக்கப்படுத்தப்பட்ட அன்றாட நடைமுறைக்கு ஏற்றபடி பழகியிருக்கும். அது மாறும்போது அதை எதிர்கொள்வதற்குத் தேவையான உளவியல் யாருக்குமே இருக்காது. இது குறித்த விழிப்புணர்வு பெற்றோருக்குத் தேவை.

மாணவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே அவர்களுக்கு பிடித்ததைச் செய்யத் தொடங்கியிருப்பார்கள். இஷ்டப்பட்ட நேரத்தில் உறங்குவது, குளிப்பது, சாப்பிடுவது என்றிருப்பார்கள். எனவே, மாணவர்கள் அனைவரும் மீண்டும் திட்டமிடப்பட்ட அன்றாட வழக்கத்துக்குள் வருவதற்கு இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்.

இன்னின்ன வேலைகளை இந்த இந்த நேரத்தில் செய்யத் திட்டமிட்டு அதை நடைமுறைபடுத்துவது, எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிப்பது என ஒரு திட்டமிடப்பட்ட நடைமுறைக்குப் பழகிக்கொண்டால் மீண்டும் பள்ளி செல்வதற்கான அன்றாட நடைமுறைக்குச் செல்லும்போது சிக்கல் இருக்காது. அதே போல் ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிடாமல் தவிர்க்கலாம்.

தானாகத் தேடிக் கற்றுக்கொள்வது என்பதை மாணவர்கள் இப்போது கொஞ்சம் முன்னெடுக்கலாம். இணைய வசதி இருப்பவர்கள் இணையம் மூலமாக எதையாவது தேடிக் கற்கலாம். அது தவிர பாட்டியிடம் கதை சொல்லக் கற்றுக்கொள்ளலாம். வீட்டு வேலைகள், வாழ்க்கைத்திறன்கள் ஆகியவற்றை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது ஆகியவற்றைச் செய்தால் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் பயனளிப்பதாக இருக்கும்.

ஆசிரியை சுடரொளி தொடர்புக்கு: sudarolikalvi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்