இசைத்துறையில் வேலைவாய்ப்பு பெருகுமா?

By செய்திப்பிரிவு

யாழினி

இசைத்துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று சீனா நிரூபித்துள்ளது. இந்தத் துறையில் ஆர்வத்தையும் முதலீட்டையும் உருவாக்க இந்தியா நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

இந்திய இசைப் பதிவுத் துறையின் (Recorded music industry) மதிப்பு ரூ. 1,068 கோடி. இந்த துறையே ரூ.3,100 கோடி மதிப்புடைய வானொலித் துறைக்கும், ரூ. 74,000 கோடி மதிப்புடைய தொலைக்காட்சித் துறைக்கும், ரூ. 7,500 கோடி மதிப்புடைய நேரலை நிகழ்ச்சிகள் துறைக்கும் மூலபொருளாக இருக்கிறது. ‘எர்னஸ்ட் அண்ட் யங்’ நிறுவனம், ‘எஃப்.ஐ.சி.சி.ஐ.’ ஆகியவை ‘நூறு கோடி திரை வாய்ப்புகள் 2019’ என்ற பெயரில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த முறைசாரா துறையில் ஒலிப்பதிவுகள் முக்கிய வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன. வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கும் திறன்கொண்ட இசைத் துறையை இந்தியா இன்னும் முழுமையாகக் கண்டுகொள்ளவில்லை. சீனா, இந்தத் துறையில் 4 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. 2012 வரை இந்தியாவுக்குப்பின் இருந்த சீனா, இன்று உலகின் முதல் பத்து இசைச் சந்தைகளில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையை இசைத் துறையில் அடைய இந்தியா என்ன செய்ய வேண்டும்?

ஆர்வத்தை ஊக்கப்படுத்துதல்

தற்போதைய நிலையில் இந்திய இசைத் துறையில் உருவாகும் வேலைவாய்ப்பு தொடர்பாக அலசுவதுதான் இதன் முதற்படியாக இருக்கும். ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைப் போல், அரசு நிதியுதவியுடன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலிப்பதிவுக் கூடங்களை அமைப்பது, இசைத் துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். நாளடைவில் நாட்டின் பொருளாதார பங்களிப்பாகவும் அவை மாறும்.

2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் ஊடகம், பொழுதுபோக்குத் துறை, தொலைக்காட்சி, திரைப்பட நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாரம்பரியக் கலைஞர்கள் ஆகியோரின் பணிகளைத் தொழில் பிரிவுகளில் இணைப்பது முக்கியம்.

உயர்கல்வியில் இசை

இசையை அணுகும் பார்வை முதலில் மாற வேண்டும். பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் ஒரு துறையாக இசையை அங்கீகரிக்க வேண்டும். இசை என்பதை ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்கும் பார்வையை இந்தியச் சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும். இசையை சிறந்த பணிவாழ்க்கையாக அணுகுவது சமூகத்தில் சிறந்த மாற்றங்களை உருவாக்கும்.

சீனாவில், 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இசைப் பட்டப்படிப்பு பாடமாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதேபோல் உயர்கல்வியில் இசையை அறிமுகப்படுத்தும்போது, அதற்கு தேசிய திறன் வளர்ச்சிக் கழகம், உலகின் முக்கிய இசைக் கல்வி நிறுவனமான பெர்க்லி இசைக்கல்லூரி, ஜூலியர்ட் பள்ளி ஆகியவற்றின் ஆதரவை நம்மால் கோர முடியும்.

1954-ம் ஆண்டிலிருந்து திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இந்தியாவில் வழங்கப்பட்டுவருகின்றன. ஆனால், திரையிசை சாராத இசைக் கலைஞர்களுக்கான தேசிய இசை விருதுகளை அரசு இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. இசையைப் பணிவாழ்க்கையாகத் தொடர்பவர்களுக்கு இதுபோன்ற விருதுகள் பெரும் ஊக்கமளிக்கும்.

முதலீட்டை ஊக்கப்படுத்துவது

தனித்துவமான, திறமையான இசைப் பண்பாடு நம் நாட்டில் இருந்தாலும், அதற்கேற்ற வகையில் அரங்கங்களும், கலைஞர்களுக்கான ஆதரவும் இன்னும் சரிவரக் கிடைப்பதில்லை. இசை போன்ற கலையில் முதலீடு செய்வது பண்பாடு, சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கும் பேரளவு உதவிசெய்யும்.

சீனாவால் இசைத் துறையில் 4 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கி உலகின் முதல் பத்து இசைச் சந்தைகளில் ஒன்றாக இடம்பெற முடியும்போது, அதைவிட அதிகமான பண்பாட்டு விழுமியங்களையும், இசைப் பண்பாட்டையும் கொண்ட இந்தியாவால் ஏன் அதைச் செய்யமுடியாது? மத்திய அரசுடன் இணைந்து இசைத் துறையின் பெருநிறுவனங்கள், வல்லுநர்கள் இது தொடர்பான முயற்சிகளை எடுத்தால், இந்திய இசைத் துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்