சேதி தெரியுமா? - 3 புதிய மருத்துவக் கல்லூரிகள்

By செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

நவ. 26: தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாகக் கடந்த மாதம் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

மாற்றுப் பாலினத்தோர் மசோதா

நவ. 26: மாற்றுப் பாலினத்தோர் பாதுகாப்பு மசோதா, 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 2019, ஆகஸ்ட் 5 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாற்றுப் பாலினத்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக வெப்பநிலை அதிகரிப்பு

நவ. 26: உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 2100-ல் 3.2 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், பசுங்குடில் வாயு உமிழ்வு ஒவ்வோர் ஆண்டும் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பசுங்குடில் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பருவநிலைப் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

கார்ட்டோசாட்-3 வெற்றி

நவ. 27: 13 வர்த்தக நானோ-செயற்கைக்கோள்களுடன் ‘கார்ட்டோசாட்-3’ செயற்கைக் கோளை பி.எஸ்.எல்.வி.-சி47 ஏவுகணை மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோளாக ‘கார்ட்டோசாட்-3’ வடிவமைக்கப் பட்டுள்ளது. ஹரிக் கோட்டாவிலிருந்து செலுத்தப்பட்ட 74-ம் ஏவுகணை இது.

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

நவ. 27: ஜார்கண்ட், டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களும் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கும் பகுதிகளாக மாறியிருப்பதாக தேசிய புள்ளிவிவர அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், டெல்லியில் 9.4 சதவீதமும், ஜார்கண்ட்டில் 7.5 சதவீதமும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

சிறப்புப் பாதுகாப்புக் குழு மசோதா

நவ. 27: சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி.) சட்டத்திருத்த மசோதா, 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திருத்த மசோதாவின்படி பிரதமர், அவருடன் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்கள், அவர்களுடைய குடும்பத்தினருக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்பில் தங்கியிருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படும்.

ஹாங்காங் ஜனநாயக மசோதா

நவ. 27: ஹாங்காங்கில் ஜனநாயகத் துக்காகப் போராடுபவர்களுக்கு ஆதரவளிக்கும் மனித உரிமை, ஜனநாயக மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டதால் சட்டமாகியிருக்கும் இந்த மசோதாவை சீனா கடுமையாக எதிர்த்துவந்தது. ஹாங்காங்கில் ஜனநாயகச் சுதந்திரம் பறிக்கப்பட்டால், அந்தப் பகுதிக்கு அமெரிக்கா வழங்கிவரும் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப்பெறும் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள்

நவ. 28: மேற்கு வங்கத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு (கரீம்பூர், கரக்பூர் சதர், கலியாகஞ்ச்) நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. உத்தராகண்டில் பிதௌர்கட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் நவம்பர் 25 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

41 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்