சிறிய கடைகளுக்கான மின் கட்டணம் எவ்வளவு?

By வீ.சக்திவேல்

‘மி

ன் கட்டணம் ஷாக் அடிக்கிறதா?’ என்ற கட்டுரையில் வீடுகளுக்கு மின்சாரச் சேமிப்பு குறித்துப் பார்த்தோம். இப்போது கடைகளுக்கு எந்த மாதிரியான மின் கட்டணம் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மின்சார வாரியம் வணிகப் பயன்பாடு என்று தனியாகப் பல பிரிவுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கிறது. மற்ற அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் உள்ள மின் கட்டணம் என்பது அவர்கள் பயன்படுத்தும் யூனிட்டுக்கு ஏற்றவாறு வசூலிக்கப்படுகிறது. அதில் இத்தனை யூனிட்டுக்கு மேல் போனால் கட்டண விகிதம் மாறுகிறது என்றவாறு அமைக்கப்படாததால் எத்தனை யூனிட் பயன்படுத்துகிறமோ அதற்கு ஏற்ற மின் கட்டணம்தான் செலுத்தப்பட வேண்டும். மேலும், வீடுகளுக்கு மாதிரி 500 யூனிட்டைக் கடக்காமல் பார்க்க வேண்டும் இல்லையென்றால் மானியம் இல்லாமல் அதிகமாகக் கட்ட வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. எனவே, பெரிய வணிக நிறுவனங்கள் யூனிட்டைக் கவனிக்க வேண்டியதில்லை. ஆனால், சிறிய கடைகளுக்கு அப்படி இல்லை. இந்தச் சிறிய கடைகளின் மின்சாரக் கட்டண விகிதம் பிரிவு V என்ற பட்டியலில் வருகின்றன.

சிறிய கடைகளுக்கு மின் கட்டணம்

உதாரணத்துக்கு ஒரு டீக்கடையை எடுத்துக்கொள்வோம். காலையில் 4 அல்லது 5 மணிக்கு ஆரம்பித்து இரவில் 7 அல்லது 8 மணிக்கு மூடப்படும் என்று வைத்துக் கொள்வோம் (இரவு பகல் தொடர்ந்து இயங்கும் கடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை). அந்தக் கடையில் பெரும்பாலும் இரண்டு லைட்களும் ஒரு பேனும் ஒரு பிரிட்ஜும் இருக்கும். இவை அனைத்தும் ஒரு நாளைக்குத் தொடர்ந்து ஓடினால் இருமாதங்களுக்கு ஒருமுறை உத்தேசமாக 80 லிருந்து 95 யூனிட் வரைக்கும் ஓடும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்தக் கடைக்காரர் கட்ட வேண்டிய மின் கட்டணம் 95 யூனிட் என்றால் ரூ.639. கடை வணிகப்பயன்பாட்டில் வருவதால் பயன்படுத்தும் மின் கட்டணத்துக்கு அரசாங்கம் அளிக்கும் மானியம் கிடையாது. எனவே, யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய் வீதம் 95 யூனிட்டுக்கு ரூ.475-ம் நிரந்தரக் கட்டணம் ரூ.140-ம் பயன்பாட்டு மின் கட்டணத்துக்கு வரி 5 சதவீதம் என்ற கணக்கில் 475-க்கு 23.75-ம் (மின் கட்டணத்துக்கு இன்னமும் ஜி.எஸ்.டி கொண்டு வரப்படவில்லை என்பதைச் சத்தம் போட்டுச் சொல்லிவிடாதீர்கள்) ஆக மொத்தம் 638.75 அதாவது ரூ.639 கட்டவேண்டிவரும்.

சரி கொஞ்சம் பயன்பாடு கூடியிருச்சுன்னா? அங்கதாங்க வில்லங்கமே இருக்கு. 100யூனிட் வரைக்கும் உங்களுக்கு பிரச்சினை இல்லை 100 யூனிட்டுக்கு நீங்க செலுத்த வேண்டிய மின் கட்டணம் 665 ரூபாய்தான் கட்டணம். 101 யூனிட் என்றால் நீங்க கட்ட வேண்டியது 994 ரூபாய். அதாவது 329 ரூபாய் அதிகம். ஏன்,ஏன்,ஏன்? என்கிறீர்களா? 100 யூனிட் வரைக்கும் உங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய்னு சொன்னோம் இல்லையா ஆனா 101 வது யூனிட் பயன்பாட்டிலிருந்து ரூ.8.05 என்று மாறிவிடுகிறது. “அப்டின்னா 101 வது யூனிட்டுக்கு 3 ரூபாய் 5 பைசாதான்னு கூடும் அப்ப 668.5 தானே வரும்?” உங்க கேள்வி சரிதன். ஆனால், இந்த 100 யூனிட்டைக் கடந்துவிட்டால் உங்களுக்கான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 8.05 என்பது 101-வது யூனிட்டிலிருந்து ஆரம்பமாகிவிடுகிறது. ஆமாங்க 101 X 8.05 = 813.05 + 40.65 + 140 = 993.75 அதாவது 994 கணக்கு சரிதானா? இதுதாங்க மின் வாரியத்தின் மின் கட்டண விகிதம்.

மின்சாரம் குடிக்கும் சாதனங்கள்

சில கடைகளில் இரண்டு மாசத்துக்கொரு முறை ரூபாய் 600, 700-ன்னு கட்டிக்கிட்டு இருந்தவர்களுக்குத் திடீரென ரூபாய் 1,400 என மின் கட்டணம் வந்தால் அவர்கள் 100 யூனிட்டைத் தாண்டி 150 யூனிட் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அர்த்தம். சிறிய கடைக்காரர்கள் 100 யூனிட்டைத் தாண்டாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். கடையில் டியூப் லைட் இருந்தால் அதை எல்ஈடி விளக்காக மாற்றிக்கொள்வது அவசியம். இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு என்பதால் ஓரளவு அதில் மின் பயன்பாடு குறையும். அதைத் தவிர கடையில் அதிகமாக மின்சாரம் எடுப்பது பிரிட்ஜ்தான். கடைக்காரர்கள் கடையை மூடும்போது மிஞ்சிய ஒரு அரை லிட்டர் பாலை பிரிஜ்ட்ல வச்சுட்டுப் போயிட்டு, காலையில் அதைப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த அரை லிட்டர் பால்தான் உங்க மின்சாரத்தைக் குடித்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

செய்ய வேண்டியவை

சரி அதற்கு பிரிட்ஜை நிறுத்திவைக்கலாம். தண்ணீர், பால் இவற்றுக்காகத்தான் டீ கடைகளில் ப்ரிட்ஜ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் பால் போன்று கெட்டுப் போகும் பொருளை இரவுக்குள் தீர்த்துவிடுவதுபோல அளவாக வாங்கிப் பயன்படுத்தினால் இரவில் ப்ரிட்ஜை அணைத்துவிட்டுச் செல்லலாம். காலையில் வந்தவுடன் அதை ஆன் செய்தால் குளிர்ச்சியாகத் தண்ணீர் பாட்டில் காலையில 9 மணிக்கு மேல்தான் கேட்பார்கள் என்பதால் அதற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சில நாட்களில் அதிகம் பால் சேர்ந்துவிட்டது என்றால் ஒன்று வீட்டுக்குக் கொண்டுசெல்லலாம் அல்லது அன்றைக்கு பிரிட்ஜை அணைக்காமல் அதிலேயே வைத்து விட்டுச் செல்லலாம். வெளி ஊருக்குத் திருமணத்துக்கோ மற்ற விசேஷங்களுக்கோ செல்லும்போது அல்லது தீபாவளி போன்ற விசேஷங்களுக்குக் கடைக்கு விடுமுறை விடும்போது கண்டிப்பாக ஃப்ரிட்ஜை அணைத்துவிட்டுச் செல்வது அவசியம். வியாபார நிமித்தமாக ஃபிரிட்ஜை அடிக்கடி திறந்து மூடினால் அதற்கும் மின்சாரச் செலவு அதிமாகும் என்றாலும் அதைத் தவிர்ப்பது சிரமம். ஆனாலும் திறந்து திறந்து மூடுவதை முடிந்த அளவுக்குக் குறைத்தால் மின்சாரப் பயன்பாடும் குறையும்.

இந்த அறிவுரைகள் அனைத்தும் இரு மாதங்களுக்கு ஒருமுறை 100 முதல் 130 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தான். எப்போதும் எனக்கு 150 யூனிட்டுக்கு மேல்தான் வருகிறது என்றால் இது போன்ற செயல்பாடுகள் பலன்தருவது கடினம்தான். ஆனாலும் முயன்று பார்க்கலாம். ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் என்றால் 10 யூனிட்டுக்கு 80 ரூபாய் சேமிக்கலாமே? வங்கியில் சேமிப்பது மட்டும் சேமிப்பு அல்ல. நமது பயன்பாட்டை அது பெட்ரோலாக இருந்தாலும் சரி மின்சாரமாக இருந்தாலும் சரி தேவைக்கும் சற்றுக் குறைவாகப் பயன்படுத்தத் தொடங்கினாலே அதுவும் நமக்குச் சேமிப்புதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்