வீடு என்னும் கனவில் கவனம் வைப்போம்

By சூர்யா

சொந்த வீடு என்பது நம்மில் பலருக்கும் வாழ்நாள் கனவு. அப்படியான கனவு நிறைவேறும்போது நாம் அதில் முழுக் கவனத்தைச் செலுத்துவது அவசியம். ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாகிவிட்டது அவர் பார்த்துக்கொள்வார் என விட்டுவிடுவது முறையல்ல.

ஒப்பந்ததாரர் வேலையை முறையாகச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நமது வீடு எழுந்துவருவதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும். கட்டுமானப் பணிகளின் போது முறையான கவனமின்றி மேற்கொள்ளப்படும் செயல்களால் வீட்டின் பலம் பாதிக்கப்படும்.

என்னதான் உறுதியான கம்பிகளையும் சிமெண்டுகளையும் நீங்கள் வாங்கிக் கொடுத்தாலும் வீடு கட்டும் முறையை ஒழுங்காக மேற்கொண்டால் மட்டுமே வீடோ, கட்டிடமோ அதற்குரிய உறுதித்தன்மையுடன் எழும்பும். இல்லையெனில் எதிர்பார்ப்புடன் நாம் கட்டிய வீடு, நாம் எதிர்பாராத விதத்தில் நம்மை வாட்டமடையச் செய்துவிடும். ஆகவே, கட்டிட நிபுணர்களின் ஆலோசனையுடன் நமது வீடு கட்டும் பணியை நாமே அவ்வப்போது மேற்பார்வை செய்வது நல்லது.

பொதுவாக, கான்கிரீட் கட்டுமானத்தின்போது முறையாகப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால் நான்கு வகையான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். முதலில் மெல்லிய விரிசல் விழ வாய்ப்புண்டு. மெல்லிய விரிசலால் பெரிய பாதிப்புகள் இல்லை, என்றாலும் கான்கிரீட் கட்டுமானத்தில் போதுமான நீர் ஊற்றி அதை முறையாகப் பதப்படுத்தும்போது இத்தகைய விரிசல்கள் விழாமல் தடுக்கலாம். அடுத்ததாக சுவர்களில் ஏற்படும் விரிசல். இது மழைக் காலங்களில் அதிகமாக ஏற்படும். ஏனெனில் சுவர்களை சாந்துப் பூச்சு கொண்டு பூசும்போது சிமெண்டுடன் மணலைச் சேர்த்துப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்த மணலின் அழுத்தம் மழைக் காலத்தில் அதிகரிக்கும், ஆகவே அப்போது விரிசல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் குளிர்காலத்தில் சுவர்கள் விரிவடையாமல் சுருங்கவே செய்யும். எனவே விரிசல்களின் அளவு குறையக்கூடும்.

சுவர்களின் விரிசல்கள் விழுவதற்குக் காரணம் முறையாக அஸ்திவாரம் அமைக்காததே என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இத்தகைய விரிசல்களால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை வரும் தடுப்பதே சாலச்சிறந்தது. இதைத் தடுக்க அஸ்திவாரம் முறையாக அமைக்கப்படுகிறதா என்பதை நிபுணர்களின் உதவியுடன் கண்காணித்துக்கொள்ள வேண்டும். வீட்டின் கூரைப் பகுதியை முறையாக அமைக்காவிட்டால் உயரத்தில் உள்ள கூரைப் பகுதியில் விரிசல் ஏற்பட்டுவிடும். சில வேளைகளில் சுவரும் கூரையும் சந்திக்குமிடத்தில் விரிசல்கள் தோன்றும் அல்லது கூரையின் நடுப்பகுதியில் விரிசல்கள் தோன்றும். கான்கிரீட் சிலாப்களில் ஏற்படும் இழுவிசை காரணமாக கூரையின் நடுப்பகுதியில் விரிசல்கள் விழுந்துவிடும்.

முறையாகப் பூசாவிட்டால் சுவரும் கூரையும் சந்திக்குமிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டுவிடும். இவை அனைத்தையும் கட்டுமானத்தின் போதே கவனத்தில் கொண்டு இவற்றைத் தவிர்க்க கட்டுமானத் தொழிலாளிகளிடம் எச்சரிக்க வேண்டும். கட்டிடங்களின் மீது பாசி படர்ந்தாற்போல் நீர் கசிந்திருப்பதும் கட்டிடத்திற்குத் தீங்கையே விளைவிக்கும். சுவர்களின் உள்ளே பதிக்கப்பட்டிருக்கும் நீர்க் குழாயில் பழுது இருக்கும்போது அதிலுள்ள நீர் கசிந்து சுவர்களை ஊடுருவும். இந்த நீர் சுவர்களை அரித்தெடுத்துக் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையைப் போக்கிவிடும்.

ஆகவே ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கட்டிடத்தைக் கட்ட வேண்டும். தரைத்தளத்தில் 2 அங்குல சல்லிக்கற்களைப் பாவுதல், முக்கால் அங்குல குழாய்களைப் பதித்தல் போன்றவற்றைச் செய்து ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த இயலும். சுவர்களின் வழியே செல்லும் குழாய்களில் நீர்க்கசிவு இருந்தால் அதைத் தாமதமின்றி பழுதுபார்த்துவிடுதலும் அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்