உங்கள் வீட்டைக் காப்பீடு செய்திருக்கிறீர்களா?

By நிதி அத்லகா

வீட்டுக் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டிய முக்கியத்துவத்தைக் கடந்த மழைக்காலம் எல்லோரையும் உணரவைத்திருக்கிறது.

சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 20,000 கோடியைத் தாண்டியிருப்பதாகச் சொல்கிறது ‘ஏஒன் பென்ஃபீல்டு காட்டாஸ்ட்ரோப் ரிகேப்’ (AON Benfield Catastrophe Recap) நவம்பர் 2015 அறிக்கை.

ஆனால், இந்த இழப்பீடுகளுக்கான வீட்டுக் காப்பீடு கேட்புத்தொகைக் கோரிக்கைகள் வெறும் 2000 கோடி வரம்பிற்குள்தான் இருந்தன. வீட்டுக் காப்பீடு கோரிக்கைகளைவிட மோட்டார் காப்பீடு கோரிக்கைகள் அதிகமாக இருந்தன என்பதுதான் நிதர்சனம்.

மக்கள் பல கோடிகளைச் செலவழித்து வீட்டைக் கட்டுகிறார்கள். ஆனால், அதைப் பாதுகாப்பதற்காகச் சில ஆயிரங்கள் செலவுசெய்து காப்பீடு செய்யத் தயங்குகிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். “இந்தியாவில் வீட்டைக் காப்பீடு செய்ய வேண்டும் என்ற கருத்து இன்னும் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறது” என்கிறார் ஜேஎல்எல் தேசிய தலைவர் ஏ. சங்கர்.

சென்னை வெள்ளத்துக்குப் பிறகு மக்கள், வீட்டைக் காப்பீடு செய்வதில் இருக்கும் நன்மைகளைப் புரிந்துகொண்டார்கள். அதனால், வீட்டைக் காப்பீடு செய்யும் கருந்து அப்போதைக்குப் பிரபலமாக இருந்தது. ஆனால், இயல்புநிலை திரும்பிய பிறகு, மக்களின் வீடு காப்பீடு குறித்த கேள்விகள் ஒரேடியாகக் குறைந்துவிட்டன.

வீட்டுக் காப்பீட்டைப் பொறுத்தவரை, இரண்டு வகையான காப்பீடுகள் இருக்கின்றன. பாலிசி எடுத்தவர் இறந்துவிட்டால், அவர் வீட்டின்மீது வாங்கிய கடன்தொகையில் மீதமிருப்பதைச் செலுத்துவது முதலாவது பாலிசி (ஆயுள்) வகை.

இரண்டாவது பாலிசி, முழுக்கச் சொத்து சம்பந்தப்பட்டது. இந்த வகை பாலிசியில் கட்டமைப்பு, வீட்டில் இருக்கும் தனிப்பட்ட சொத்துக்கள் போன்றவற்றைக் காப்பீடு செய்யலாம். இந்த வகை பாலிசியில், இயற்கைப் பேரிடர், திருட்டு போன்ற சம்பவங்களால் வீட்டின் மதிப்பு குறைந்தாலோ பொருட்கள் சேதமடைந்தாலோ காப்பீடு கேட்புத் தொகையைப் பெறமுடியும்.

வீடு காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 3-4 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்கிறார் ஒரு முன்னணி வீடு காப்பீடு நிறுவனத்தின் நிர்வாகி.

“மழை வெள்ளத்துக்குப் பிறகான காப்பீடு கேட்புத்தொகையில் 99 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட வீட்டில் வசிக்காமல், கேட்புத் தொகைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு மட்டும் இன்னும் காப்பீட்டு கேட்புத்தொகை வழங்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், சென்னை வெள்ளத்துக்குப் பிறகு, புதிதாக வீடு காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்” என்கிறார் அந்த நிர்வாகி.

“வீட்டுக் காப்பீடு என்பது ஒரு வருட ஒப்பந்தம். இந்தக் காப்பீட்டில் எந்தவகையான இடைவெளியும் இருக்கக் கூடாது. இது ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் போல கிடையாது. இதற்கு எந்தவகையான சலுகைக்காலமும் கிடையாது. அத்துடன், வீட்டின் தற்போதைய மாற்று மதிப்பில்தான் இந்தக் காப்பீட்டைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும்.

உங்கள் பேலன்ஸ் ஷீட், கடன் தொகை போன்றவையெல்லாம் இதில் பொருட்படுத்தப்படமாட்டாது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த இழப்பீடு சரிசெய்யும் நிர்வாகி ஏ. சந்திரமவுலி.

வங்கிகள் வீட்டின் கடன் தொகைக்கு மட்டுந்தான் காப்பீடு தருகின்றன. அதனால், மற்ற பொருட்களுக்குத் தனிப்பட்டமுறையில் காப்பீடு செய்ய வேண்டியிருக்கும். அத்துடன், பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அதில் விட்டுப்போயிருக்கும் விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, நீர்க்கசிவு, மழை, பணம் கொள்ளையடிக்கப்படுவது, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தால் பொதுவான இடங்கள் போன்றவற்றைச் சில பாலிசிகள் உள்ளடக்குவதில்லை.

ஒரு வீடு என்பது முக்கியமான, விலைமதிப்புள்ள முதலீடு. அதனால், அதற்குக் காப்பீட்டைக் கட்டாயமாக்குவது முக்கியம். ஒரு வழக்கமான பாலிசி, தீவிபத்து, புயல், வெள்ளம், பூகம்பம், இடி, மின்னல் போன்ற இயற்கையான பாதிப்புகளிலிருந்து வீட்டின் உரிமையாளரைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அத்துடன், மனிதனால் உருவாக்கப்படக்கூடிய வெடிவிபத்துகள், போராட்டங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள், விமானத்தால் ஏற்படக்கூடிய சேதங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாக அந்த பாலிசி இருக்க வேண்டும்.

“வீட்டுக் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் சந்தாதாருக்கு இரண்டு காரணிகளை வைத்து பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. ஒன்று, காப்பீடு செய்யப்படும் சொத்து அமைந்திருக்கும் இடம், மற்றொன்று காப்பீடு செய்யப்படும் காலம். ஒரு வீட்டுக் காப்பீட்டின் காலம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் இருந்து அதிகபட்சம் முப்பது ஆண்டுகள் வரை இருக்கலாம்.

இந்தக் காப்பீட்டு காலம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன” என்கிறார் விஜயசாந்தி பில்டர்ஸ் விற்பனைப் பிரிவுத் தலைவர் எஸ். ஜெயந்தி.

வீட்டுக் காப்பீடு கட்டிடக் கட்டமைப்பு, தனிப்பட்ட சொத்துகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல் பொறுப்பு (liability) பாதுகாப்பையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. உதாரணத்துக்கு, உங்களுடைய வீட்டில் இருக்கும்போது, ஒருவருக்கு விபத்தோ, மரணமோ ஏற்பட்டால் அதற்கான தனிப்பட்ட உங்களுடைய சட்டரீதியான பொறுப்பை இந்தக் காப்பீடு பார்த்துக்கொள்ளும்.

“வாடிக்கையாளர்கள் நீண்டகாலத்துக்கான வங்கிக்கடனில் இருக்கும்போது அவர்களுடைய சொத்துக்கு ஆபத்து அதிகம். இந்த ஆபத்தை வீட்டுக் காப்பீடு செய்வதன்மூலம் தடுக்க முடியும். ஆனால், இந்தக் காப்பீட்டுத் தொகை தனி வீடுகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மாறுபடும்” என்கிறார் நவீன்‘ஸ் வணிகப்பிரிவு பொதுமேலாளர் எஸ். நடராஜா.

“குடியிருக்கும் வீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டு, கேட்புத்தொகைக்கு விண்ணப்பித்திருக்கும் காலத்தில் வேறு எங்காவது தங்கியிருந்தால் அதற்கான வாடகையையும் சில வீட்டுக் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்குகின்றன” என்கிறார் சங்கர்.

தி இந்து ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இந்தியா

8 mins ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்