சுவர் ஓவியம் 3 - பெண்கள் வளர்த்த ஓவியக் கலை

By ஜெய்குமார்

ஓவியக் கலை குகைகளில் இருந்துதான் தொடங்கியது. பிறகு இந்தக் கலை வீட்டுச் சுவர்கள், அரண்மனைகள், கோயில்கள் எனப் பல இடங்களில் வரையப்பட்டு வளர்ந்தது. தங்களது அன்றாட நடைமுறைகளை, பண்பாட்டைப் பதிவுசெய்யும் விதமாகத்தான் இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. பிறகு அவை சடங்குகளுக்காகவும் குடும்ப விழாக்களுக்காகவும் வரையப்பட்டன.

இந்தியாவில் தனித்துவம் மிக்க பல ஓவியக் கலைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாயின. மேற்கில் உருவான ஓவியக் கலைகளுக்கு நிகரான ஆற்றல் கொண்டவை இந்திய ஓவியக் கலைகள். ஆனால் இங்கே ஓவியக் கலை என்பது பெரும் தொழில் சார்ந்து இல்லாமல் தங்கள் பயன்பாட்டுக்காக வரையப்பட்டு வந்தது. இவ்வகை ஓவியங்களை நாட்டார் ஓவியங்கள் என வகைப்படுத்தலாம். அவற்றுள் ஒன்றுதான் மதுபனி ஓவியம்

ஜனகன் வளர்த்த ஓவியக் கலை

இன்றைய பிஹார் மாநிலத்தில் மதுபனி என்னும் மாவட்டப் பகுதியில் தோன்றியதால் இந்த ஓவியக் கலை அந்தப் பெயராலேயே அழைக்கப்பட்டது. இந்த மதுபனி மாவட்டம் நேபாள எல்லைப் பகுதியில் இருக்கிறது. இந்த ஓவியக் கலைக்கு மிதிலா ஓவியங்கள் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. ராமாயணப் புராணக் கதைப்படி சீதையின் சுயம்வரத்தில் கலந்துகொண்டு ராமன் வில்லை முறித்து வெற்றிபெறுவார். ஜனகனின் மிதிலை நாடு சீதையின் திருமணத்துக்காகக் கோலாகலமாகத் தயாராகும். அந்தத் திருமண விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அம்சமாக ராமனை வரவேற்க ஜனகன், அரண்மனைச் சுவர்களில் வண்ண ஓவியங்களைத் தீட்டச் சொன்னதாக ஒரு ஐதீகம். இப்படித்தான் இந்த ஓவியக் கலை தோன்றியது. அதனால் மிதிலா ஓவியங்கள் என இவை அழைக்கப்படுகின்றன. ராமாயணத்தில் ஜனகன் ஆட்சி புரியும் மிதிலை நாடு இந்த மதுபனி-நேபாளப் பகுதியில்தான் வருகிறது.

புத்தாக்கம் பெற்ற கலை

1934-ம் ஆண்டு இந்தப் பகுதியில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் அரசின் ஆட்சியராக இருந்த வில்லியம் ஜி.ஆர்ச்சர் இந்த நிலநடுக்கப் பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். அப்போது மண்ணில் புதையுண்ட வீடுகளின் சுவர்களிலிருந்த மதுபனி ஓவியங்களைப் பார்த்து வியந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அந்தக் கலை குறித்துத் தெரியவந்துள்ளது. பிறகு மதுபனி ஓவியங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதி வெளியுலகு அறியும்படிச் செய்தார். இந்த ஓவியங்கள் மேற்குலக ஓவியரான பிக்காஸோவின் ஓவியங்களுடன் ஒப்பிடத்தக்க ஆற்றல் கொண்டவை என ஆர்ச்சர் எழுதியுள்ளார். ஆர்ச்சரின் இந்த முயற்சிக்குப் பிறகு இந்தக் கலை புத்தாக்கம் பெற்றது எனலாம்.

பெண்கள் வளர்த்த கலை

இந்த மதுபனி ஓவியக் கலை மற்ற நாட்டார் ஓவியக் கலையைப் போன்று முழுக்க முழுக்கப் பெண்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கலையே. மதுபனி பகுதியில் வாழும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் கூடித் தங்கள் வீட்டுச் சுவர்களில் இந்த ஓவியங்களை வரைந்தனர். மதச் சடங்குகள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியங்கள் வரைய காவி, கரி ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.

புராணக் காட்சிகள், மனித உருவங்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றை வரைந்தனர். பெரும்பாலும் சூரியன், நிலா, துளசி ஆகியவை அதிக அளவில் வரையப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. மேலும் ஓவிய உருவங்களுக்கு இடையில் வெறுமனே இடைவெளி விடாமல் முழுவதும் பூ உருவங்களை வரைகிறார்கள். இது இந்த ஓவியக் கலைக்குத் தனி அழகைத் தருகிறது.

மதுபனி ஓவியங்கள் வீட்டு உள்ளரங்கத்துக்காகவும் வரையப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் கேன்வாஸிலும் வரையப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. தங்கள் தேவைக்காகப் பெண்கள் கூடி வரைந்த இந்தக் கலை வட்டாரத்தைத் தாண்டி கவனம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்