கட்டிடக்கலை என்பது மாற்றம் அடையும் உயிர் ஆற்றல்

By துர்கானந்த் பல்சாவர்

இந்தியாவின் முக்கியமான கட்டிடவியல் அறிஞர்களுள் ஒருவர் பி.வி.தோஷி. அவர் சென்னையில் கட்டிடக் கலை குறித்து ஆற்றிய உரையின் சுருக்கம்.

நான் அகமதாபாத்தில் 1962-ல் கட்டிடக் கலைக்கான பள்ளியைத் தொடங்கியபோது இந்த அம்சங்களைத்தான் கேள்விகளாகக் கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. நமது கலாச்சாரம், பருவநிலை, மக்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற செயல்முறைகளை நாங்கள் உருவாக்கினோம். நமது நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு திருவிழாவும் காத்திருப்பையும் கொண்டாட்டத்தையும் சரிபகுதியாகக் கொண்டது. ஆக்கல், அழித்தல், புதுப்பித்தல் என மூன்றும் நமது திருவிழாவின் செயல்முறையாக இருக்கிறது. அதனால்தான் கட்டிடக் கலைக் கல்வியில் மானுடவியல், நடனம், இசை, நாடகம் மற்றும் வரலாற்றையும் பாடமாக வைத்தோம்.

பொருளாதாரம், வடிவமைப்பு, ஒளி மற்றும் வெளி சார்ந்த நுட்பமான விஷயங்களைப் புரிந்துகொள்ளும் மாதிரிகளை உருவாக்கினோம். பழம்பெரும் நகரங்களிலிருந்து கற்றுக்கொண்டோம். எங்கள் மாணவர்கள் அவரவர் தாய்மொழியிலேயே பேசுவதற்குக் கேட்டுக்கொண்டோம். இது கலாச்சார வேர் அறுபடாத புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்தும். மேம்பாடு என்பது நகல் செய்வதல்ல. கண்டுபிடிப்பது.

நாம் நமது யதார்த்தத்தை உருவாக்குகிறோம்

நடைமுறையில் உள்ள யதார்த்தத்தைக் கேள்வி கேட்கவும் சவால்விடவும் எங்களுக்குச் சுதந்திரம் இருந்தது. அப்படித்தான் எனது திட்டங்கள் உருவாகின. நகர்ப்புறத் திட்டங்கள், கல்விநிலையங்கள், நிறுவனக் கட்டிடப் பணிகள், நகர்ப்புற வடிவமைப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருந்தோம். எனது அக்கறைகள், எனது ரசனைகள் என்னவென்று நான் கண்டுகொண்டேன். முதலில் மலிவான செங்கல் மற்றும் கான்கிரீட் கட்டிடங்களை உருவாக்கினோம்.

பின்னர் பதேபூர் சிக்ரி, மதுரை, ரங்கம் மற்றும் ஜெய்பூர் போன்ற நகரங்களின் பாரம்பரியக் கட்டிடக் கலையைப் பயின்றேன். 22 முதல் 88 வயதுவரையுள்ள கட்டிட வல்லுநர்களைச் சேர்த்து சுற்றுச்சூழலுக்கேற்ற கட்டிடக் கலை நடைமுறையான வாஸ்து - சில்பா-வை உருவாக்கினேன். எரிபொருள் ஆற்றலைச் செலவழிக்காத தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய வெளிப்பாடுகளுடன் கூடிய வெளிகளை உருவாக்கினோம். பழமையான கட்டிடவியல் நுணுக்கங்களையும் அதில் சேர்த்துக்கொண்டோம்.

நான் எனது வீட்டின் தோட்டத்தையும் வீட்டின் நீட்சியாக உருவாக்கினேன். இலகுவான இடங்களை எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்றுகூடுதல், சம்பிரதாயமற்ற தன்மை, பகிர்வு இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஒரு வீட்டை வடிவமைக்க வேண்டும். எனது டிசைன் ஸ்டுடியோவான சங்கத், ஒரு கிராமத்தைப் போல மரங்கள், படிக்கட்டுகள், வளைவுக்கூரைகள் மற்றும் நீர்ப்பகுதிகளைக் கொண்டது. அது சம்பிரதாயமான அலுவலக கட்டிடமாக வடிவமைக்கப்படவில்லை.

வீட்டு வடிவமைப்பும் எனக்குள் ஏற்பட்ட மாற்றமும்

நான் அகமாதாபாத்திற்கு வாழவந்தபோது, கூட்டுறவுக் கழக வீட்டை வாடகைக்கு எடுத்தேன். அவை அடுக்குமாடிக் குடியிருப்புகள் அல்ல. ஒரு வராந்தா, ஒரு அறை, சமையலறை, முற்றம் மற்றும் வெளியே படிகளைக் கொண்டது. அந்த வீட்டை அதன் உரிமையாளர்கள் நீட்டிக் கட்டிக்கொள்ளலாம். இப்படித்தான் வீடுகளை வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தேன். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகரிக்கும்போதோ, குறையும்போதோ அதற்கேற்ப வீடு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். எனது ஆரம்பகாலத்திய வீட்டுத்திட்டங்களிலிருந்தே என்னுடைய பிரதான நோக்கம் அதுவாகவே இருந்தது. வாழ்பவர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாக வீடுகள் இருக்க வேண்டும்.

எதிர்கால நகரங்கள்

நாம் மக்கள்தொகையில் வளர்ந்துவருகிறோம். தொழில்நுட்பம், வருவாய் நிலைகள், பொருளாதாரம் எல்லாமே மாறியுள்ளன. கிராமப்புறப் பகுதிகளும் மாறிவருகின்றன. நமக்கு மேலும் சமூக நிலையங்கள் தேவைப்படுகின்றன. குடும்பம், குழந்தைகள், முதியவர்கள், நமக்கு முன்பு இருந்த சாவகாசம் மற்றும் ஆற்றல் எல்லாவற்றிலும் என்னென்னவோ மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

வளம் குன்றா நகரங்கள் ஒருங்கிணைந்த தன்மையுடனும், பன்முகத்தன்மையுடனும், உயிரியல் ரீதியாக தன்னிறைவுடனும், சுற்றுச்சூழல் வளத்துடனும் இருத்தல் அவசியம். ஒரு நகரம் என்பது பெரிய வீடு. வீடு என்பது ஒரு சிறிய நகரம். நான் கார்கரை நவிமும்பையிலும், ஜெய்பூரில் வித்யாதர் நகரையும், அகமதாபாத்தில் பத்ரா ப்ளாசாவையும் உருவாக்கினேன். வாழ்க்கையை நமது நகரங்களில் கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்பட்டவை அவை.

வாழ்க்கை என்பது முழுவதும் எதிர்பாராத நிகழ்ச்சிகளால் நிறைந்தது. அது ஒரு விதிக்குள் அடங்காதது. கட்டிடக் கலை என்பது தொடர்ந்து மாற்றமடையும் உயிர் ஆற்றல். சுற்றுச்சூழலோடு ஆழமான பிணைப்பைக் கட்டிடக் கலை வைத்திருக்கிறது. வெவ்வேறு அனுபவங்களினூடான பயணமாகவே எனது வாழ்க்கைப் பயணம் இருந்துள்ளது.

நான் கடினமான விதிகளை விரும்புவதில்லை. பன்முகத்தன்மையையும் அளவிட முடியாத தன்மையையும் கட்டிடக்கலை வெளிப்படுத்த வேண்டும். ஒன்றைப் பார்க்கவும் அனுபவிக்கவும் எண்ணற்ற வழிகள் உள்ளன. ஒன்றைப் படைக்கவும் எண்ணிறந்த வழிகள் உள்ளன. நாம்தான் நமது எதார்த்தத்தை உருவாக்குகிறோம். எனது எதார்த்தம் என்பது பன்மையும், பன்மையில் சீர்மையும்தான். வாழ்க்கை என்பது தொட்டுணர முடியாதது.

பி.வி.தோஷி, 1927-ம் ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள புனேயில் பிறந்தவர். பம்பாயில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். படித்து முடித்ததும் பிரான்ஸ் நாட்டில் உலகப் புகழ்பெற்ற கட்டிடவியல் அறிஞர் லா கர்பூஸரின் கீழ் பணியாற்றினார். 1954-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்தியக் கட்டிடத் துறைக்குப் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளார். இந்தூரில் குறைந்த வருமானத்தினருக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். ஆரண்யா ஹவுஸ்சிங் என அழைக்கப்படும் இந்த வீட்டுக் குடியிருப்புத் திட்டம் ஒரு முன்மாதிரித் திட்டம்.

இது மட்டுமல்லாது நேஷனல் இன்ஸ்டியூடட் ஆஃப் ஃபேஷன், டெல்லி கட்டிடம், நேஷனல் இன்ஸ்டியூடட் ஆஃப் மேனேஜ்மெண்ட், பெங்களூரூ கட்டிடம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனக் கட்டிடங்களும் கட்டியுள்ளார். ராயல் இன்ஸ்டியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆகிடெக்ஸரால் கவுரவிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் வழங்கப்படும் கட்டிடத் துறைக்கான உயரிய விருதான பிரிட்ஸகர் விருதைப் பெற்றுள்ளார்.

தி இந்து (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: ஷங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 secs ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

9 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்