அடமானம் வைக்கப்பட்ட வீட்டை வாங்கலாமா?

By செய்திப்பிரிவு

ஜி.எஸ்.எஸ் 

ஒருவர் வங்கியில் கடன் பெற்று ஒரு வீட்டை வாங்குகிறார். அதற்கான தவணையைச் செலுத்துகிறார். ஒரு கட்டத்தில் அவரால் மாதத் தவணையைக் கட்ட முடியவில்லை. வீட்டை விற்றுவிடலாம் எனத் தீர்மானிக்கிறார்.
இந்த நிலையில் அவர் அடமானம் வைத்த வீட்டின் அசல் ஆவணங்களை வங்கி அவருக்குத் தந்து விடாது. கடனை முழுமையாகச் செலுத்தினால்தான் வீட்டு ஆவணங்களைத் தரும்.

அதேவேளை அசல் ஆவணங்களை வங்கி தராமல் யாருக்கும் அவர் தன் வீட்டை விற்க முடியாது. இப்படி அடமானம் வைக்கப்பட்ட வீடுகளை யாராவது விற்க முன்வருகிறார்கள் என்றால் அதை வாங்குவது புத்திசாலித்தனமா, இல்லையா? ஆனால், இப்படிப்பட்ட வீடுகளை வாங்குவதில் பல லாபங்கள் உண்டு. பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த வீட்டை அதன் உரிமையாளர் சற்றே குறைந்த தொகைக்குக்கூட விற்க முன்வரலாம்.

தவிர முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட ஒரு வீடு உங்கள் கைக்கு வருகிறது. மின்சாரம், தண்ணீர் போன்ற சகல இணைப்புகளும் ஏற்கெனவே பெறப்பட்டிருக்கும். மிகப் பெரிய சாதகமான அம்சம் என்பது ஒரு வங்கியில் வீட்டுக்கடன் பெறும்போது அந்த நிலம் மற்றும், வீட்டுக்கான மதிப்பீட்டை அதற்குரிய நிபுணர் அளித்திருப்பார். தவிர ஆவணங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் வழக்கறிஞர் ஒருவர் ஆராய்ந்து பச்சைக்கொடி காட்டியிருப்பார். ஆக, தேவைப்படும் அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைளையும் வங்கி ஏற்கெனவே எடுத்திருக்கும் என்பது அந்த வீட்டை வாங்குபவருக்கு மிகப் பெரிய பலம்.

வேறொருவர் வங்கியில் அடமானம் வைத்த வீட்டை நீங்கள் வாங்க வேண்டுமென்றால் அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் (Certified Copies) பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்றுத் தருமாறு வீட்டை விற்பவரிடம் கோரலாம். ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும்போது ஒரிஜினல் ஆவணங்கள் பின்னர் கைக்கு வரவேண்டுமென்றும் அவற்றில் கோளாறு அல்லது வில்லங்கம் ஏதாவது இருந்தால் ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்றும் குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

அந்த வீட்டை நீங்கள் வாங்கத் தீர்மானித்தால் வங்கியில் எவ்வளவு பாக்கிக் தொகை இருக்கிறதோ அதை முதல் கட்டமாக நீங்கள் அளிக்க வேண்டியிருக்கும். அப்போது அந்த வங்கிக் கடன் கணக்கு முடிந்து விடும். அப்போது வீடு தொடர்பாக அளிக்கப்பட்ட ஆவணங்கள் விற்பவரின் (அதாவது வங்கிக் கடன் பெற்றவரின்) கைக்கு வந்து சேரும். அவற்றை அவர் உங்களிடம் அளிப்பார். வீட்டுக் கடன் பெற்ற நாளிலிருந்து அதற்குச் சுமார் முப்பது ஆண்டுகள் முன்புவரை வீட்டை விற்பவர் வில்லங்கமில்லாச் சான்றிதழ் பெற்றிருப்பார் (அப்படிக் கொடுத்திருந்தால்தான் வங்கி வீட்டுக் கடனைக் கொடுத்திருக்கும்).

அதற்குப்பின் வீடு தொடர்பான ஆவணங்கள் வங்கியிடம்தான் இருந்திருக்கும் என்பதால் ‘வில்லங்கம்’ நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும் எதற்கும் கடைசியாக வில்லங்கமில்லாச் சான்றிதழ் கோரப்பட்ட தேதியிலிருந்து விற்பனையைப் பதிவுசெய்த தேதிவரை வில்லங்கமில்லாச் சான்றிதழ் பெறலாம். வீட்டை விற்பவர் வங்கியிலிருந்து ஆவணங்களை உங்களிடம் கொடுத்தால் போதாது. இந்த அடமானம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகி இருக்கும். அதை முதலில் நீக்குமாறு நீங்கள் வீட்டை விற்பவரிடம் கட்டாயப்படுத்த வேண்டும்.

அந்த வங்கியிலிருந்து ‘வீட்டுக்கடன் முடிக்கப்பட்டு விட்டது. இனி அந்த வீட்டுக்கும் வங்கிக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்ற கடிதத்தை வீட்டை விற்பவர் வாங்கி உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். இதை ‘No dues certificate’ என்பார்கள். மேற்கூறிய விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடமானம் வைத்த வீட்டை வாங்குவதற்குத் தயங்க வேண்டாம் என்பதுடன் அதில் பல சாதகமான கோணங்களும் இருப்பது உங்களுக்குத் தெரிய வரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

30 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

51 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்