கோடையை வரவேற்க உங்கள் வீடு தயாரா?

By யுகன்

கோடையைச் சமாளிக்க வீட்டுக்குக் குளிர்சாதன வசதியைச் செய்வதுதான் ஒரே வழி என்றில்லை. அப்படியே குளிர்சாதன வசதியைச் செய்வதாக இருந்தாலும் வீட்டின் படுக்கை அறையில் மட்டுமேதான் செய்யமுடியும். இதுதான் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்களுக்குச் சாத்தியமான ஒன்றாக இருக்கமுடியும். அதுவும் அடுத்த மாதம் மின் கட்டணம் வந்தால் வியர்த்துவிடும்!

பகலில் வீசும் அனல் காற்றைச் சமாளித்து வீட்டில் புழங்க வேண்டுமானால் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற வேண்டும். வீட்டைப் புதிதாகக் கட்டிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் வீட்டைக் கோடையைத் தாங்கும் வகையில் குளிர்ச்சியாக வடிவமைப்பதற்குச் சில வேலைகளைச் செய்தால் போதும்.

வெட்டி வேரு வாசம்

தென்னம் ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிடலாம். இவற்றால் வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும்.

தனி வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம். இதன் மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும்வரை நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைக்கலாம். மாலை வேளையில் மாடியின் தரையில் நன்றாகத் தண்ணீர்த் தெளித்துவிட்டு அமர்ந்துகொண்டால் அவ்வளவு ரம்யமாக இருக்கும்.

கூரை உயரக் குளிர்ச்சி

பொதுவாகவே கோயில்கள், தேவாலயங்களின் உள்ளே குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கூரை உயரமாக இருப்பதுதான். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் கூரையின் உயரத்தை 12 அடி இருக்கும் அளவில் அமைத்தால் வீட்டின் குளிர்ச்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும். எல்லாம் சரி, ஏற்கெனவே கட்டிய வீட்டுக்கு என்ன செய்வது என்று கேட்கலாம்.

மரத் தடுப்புகள்

இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் மொசைக் டைல்ஸ் அல்லது சலவைக் கற்களைப் பதித்துவிடுகிறார்கள். கோடைக் காலத்திற்கு ஏற்றவையாக இவை இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பெரும்பாலான மக்களின் விருப்பமாக அவை இருக்கின்றன. இதுபோன்ற வீடுகளில் சுவரையும் தரையையும் இணைக்கும் வகையில் மரத்தினாலான ஒரு தடுப்பைக் கொடுத்தால் வீட்டின் உள்ளே வெளியிலிருந்து கடத்தப்படும் வெப்பம் தடுக்கப்படும். பார்ப்பதற்கும் வீட்டிற்குள் ஏதோ உள் அலங்கார அமைப்பை பிரத்யேகமாகச் செய்தது போல் இருக்கும்.

வீட்டில் உள்ளே புழங்கும் சூடான காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன்களைக் கோடைக் காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஃபேன்களை முகப்பு அறையிலும் படுக்கை அறையிலும் சமையல் அறையிலும் பொருத்த வேண்டும். அதேநேரத்தில் வீட்டின் ஜன்னல்களின் வழியாகக் குளிர்ச்சியான காற்று வீட்டின் உள்ளே பரவும்.

வீட்டின் வெளிப்புறத்துக்குக் கோடைக் காலத்தில் அடர்த்தியான வண்ணத்தைவிட மெலிதான வண்ணங்களே சிறந்தவை. மெலிதான வண்ணங்கள் சூட்டையும் வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும்.

குளிர்ச்சியை வரவேற்கும் ஜன்னல்கள்

புதிதாக வீடு கட்டும் முயற்சியில் இருப்பவர்கள் 2 அடிக்கு மேலாக 4 அடிக்குள்ளாக மணல் போட்டு அஸ்திவாரம் அமைத்தால் வீட்டின் குளிர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும். வீட்டின் முகப்பு அறை, சமையல் அறை, படுக்கை அறை எல்லாவற்றிலும் குறைந்தது ஒரு ஜன்னலாக இருக்கும் வகையில் வீட்டைக் கட்ட வேண்டும். ஜன்னல்கள் அதிகம் இருக்கும் வீட்டில் குளிர்ச்சிக்குக் குறைவிருக்காது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்