நீர்க் கசிவுக்கு என்ன தீர்வு?

By செய்திப்பிரிவு

நாம் உயிர் வாழ நீரும் காற்றும் அடிப்படையான தேவைகள். நல்ல காற்றும் வெளிச்சமும் வீட்டுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் நீரும். சுவாசிக்கத் தேவையான காற்று வீட்டுக்குள் இயல்பாக நுழைந்துவிடுகிறது. போதுமான வெளிச்சத்துக்கு சூரிய ஒளியையும் மின் விளக்குகளையும் பயன்படுத்திக்கொள்கிறோம்.

காற்றைத் தேக்கிவைத்துப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இன்னும் எழவில்லை. இயற்கையான காற்றே போதுமான அளவுக்கும் தேவைப்படும் போதெல்லாமும் கிடைக்கிறது. ஆனால் நீர் விஷயம் அப்படியல்ல. மழை மூலம் இயற்கையாகக் கிடைத்தாலும் அதைத் தேக்கிவைத்துத்தான் பயன்படுத்த வேண்டியதிருக்கிறது. நிலத்தடி நீரையும் அதிகம் பயன்படுத்துகிறோம். மழைபெய்யத் தேவையான இயற்கையான அமைப்புகளை முடிந்தவரை சேதப்படுத்திவிடுகிறோம். ஆகவே நிலத்தடி நீரை எடுத்து வீட்டில் தேக்கிவைத்து மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

வீடுகளில் நீர்த் தேவை இருவகைகளில் உள்ளது. ஒன்று குடிப்பது, சமைப்பது போன்ற காரியங்களுக்குத் தேவையானது. இதற்குச் சுத்தமான, சுகாதாரமான நீர் அவசியப்படுகிறது. ஆனால் குளிப்பது, துவைப்பது போன்ற புறக்காரியங்களுக்கு அவ்வளவாக நல்ல நீர் இல்லாவிட்டாலும் சிறிது கடினத் தன்மை கொண்ட நீர் இருந்தாலும் போதும். முதல் வகை நீரை நல்ல தண்ணீர் என்றும் இரண்டாம் வகை நீரை உப்புத் தண்ணீர் என்றும் சாதாரணமாகச் சொல்கிறோம். இந்த இரண்டு வகைக்கான நீர் சேமிப்பும் வீடுகளில் அவசியம். நல்ல நீரே அனைத்துத் தேவைகளையும் சமாளிக்கும் அளவுக்குக் கிடைத்தால் பிரச்சினையில்லை.

இல்லாவிட்டால் இரண்டுவகையான சேமிப்பு வீடுகளில் அவசியப்படும். ஆகவே இரண்டுவகையான நீரையும் சேமிக்க இரண்டுவகையான நீர்த்தொட்டிகளும் தேவை.

நீர்த்தொட்டிகளிலிருந்து பயன்பாட்டுக்குத் தேவைப்படும் இடங்களுக்கு நீரைக் கொண்டுசெல்ல குழாய்கள் அமைக்கிறோம். இந்தக் குழாய்கள் வழியே நாம் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், குளிப்பதற்கும், துவைப்பதற்கும், தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கும் தேவையான நீரைச் செலுத்துகிறோம். இந்தக் குழாயில் செல்லும் நீரின் தன்மைக்கு ஏற்ற வகையிலான பொருள்களாலான குழாயை அமைக்க வேண்டும். அதே போல் பயன்பாட்டுக்குப் பின்னான கழிவுநீரைக் கையாளவும் குழாய்கள் அவசியம். அவற்றுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட குழாயைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் குடிநீரைக் குழாயில் பிடித்துக் குடிக்கும் நிலை இல்லை. ஒன்று குடுவைத் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இல்லையெனில் நீர் சுத்திகரிக்கும் கருவி ஒன்றை நிறுவி, அதிலிருந்து குடிப்பதற்கான நீரைப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால் சமைப்பதற்கு குடுவைத் தண்ணீரைப் பயன்படுத்தும் அளவுக்கான வருமானம் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. ஆகவே சமையலுக்கும், சில வீடுகளில் குளிப்பதற்கும் நல்ல தண்ணீரே பயன்படுகிறது. பிற தேவைகளுக்கு உப்புத் தண்ணீர் பயன்படுகிறது. நல்ல நீர் செல்லும் குழாய்கள் தரமான உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்காத பொருள்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். உப்புத் தண்ணீர் செல்லும் இடங்களில் பிவிசி குழாய்களைப் பயன்படுத்தலாம்.

நீர்த் தேவைகளுக்கான குழாய்களையும், கழிவு நீர்க் குழாய்களையும் பராமரிப்பது முக்கியமான பணி. சாதாரணமான வீடுகளிலேயே இது சிக்கலான பணி. அதுவும் விளையாடும் வயதில் குழந்தைகள் உள்ள வீடு என்றால் கேட்கவே வேண்டாம். சுட்டித் தனம் காரணமாகக் குழாய்களைக் கையோடு பிடுங்கி எடுத்துவிடுவார்கள். அடிக்கடி பிளம்பரைத் தேடி அலைவதே பிழைப்பாய் போய்விடும். இத்தகைய பராமரிப்பு பணிகளின் சிக்கலான பகுதியை பிளம்பரிடம் ஒப்படைத்துவிடுவதே நல்லது. ஆனால் பிளம்பரை எல்லா விஷயங்களும் தேட வேண்டிய அவசியமில்லை. கூடுமானவரை பிளம்பரைத் தேடி அலையும் வேலையைக் குறைத்துக்கொள்வது மன ஆரோக்கியத்துக்கு நல்லது. முறையாக வீட்டின் குழாய்களைச் சோதித்துக்கொண்டால் பிளம்பரின் வரவைப் பெருமளவில் குறைத்துவிடலாம்.

குழாய் இணைப்புகள் இறுக்கமாகவும் நீர்க் கசிவும் இன்றி இருப்பதை அடிக்கடி சோதித்துக்கொள்ள வேண்டும். சமையலறையில் பாத்திரங்களைக் கழுவும் தொட்டியில் எண்ணெய், கொழுப்புப் பொருள்களைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். சிறு சிறு துகள்கள் தானே என்று கழிவு நீர்க்குழாயில் பயன்பாட்டுக்குப் பின்னான தேயிலைத் தூள், காப்பி தூள், உணவுக் கழிவுகள் போன்றவற்றைக் கொட்டக் கூடாது. இவற்றைக் கொட்டினால் அவை நாளடைவில் குழாயின் பாதையை அடைத்துக்கொண்டுவிடும். பின்னர் அடிக்கடி தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். எளிதில் தவிர்க்கப்பட வேண்டிய இதைப் பெரிய பிரச்சினையாக்காமல் இருப்பது நல்லது.

குளியலறையிலும் கழிப்பறையிலும் திட நிலையில் உள்ள கழிவுகளைப் போடுவது சரியல்ல. சிறு சிறு அளவில் முடி போன்றவற்றைப் போட்டால் அவை கழிவுநீர் செல்லும் குழாயின் பாதையில் சிறிதுசிறிதாகச் சேர்ந்து அடைப்பை உருவாக்கிவிடும். வீடுகளில் குழாய்களின் எங்காவது நீர்க்கசிவு தென்பட்டால் அவற்றை உடனே மாற்றிவிடுவதும் அவசியம். நீர்க்கசிவு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குழாய் பிரச்சினை நம் தலையைக் குடையாமல் பார்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்