மீளும் ஆத்தங்குடி டைல்

By சு.அருண் பிரசாத்

தமிழ்நாட்டுக் கட்டிடக்கலையின் பெருமிதங்களுள் ஒன்று செட்டிநாட்டுக் கட்டிடக்கலை. வியக்கவைக்கும் வேலைப்பாடுகள், வண்ணமிகு அலங்காரங்கள் எனக் காண்போரைப் பிரமிக்க வைக்கும் கலையுணர்வு கொண்ட செட்டிநாட்டுக் கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களுள் ஒன்று ஆத்தங்குடி டைல்ஸ்.

நவீனத்தைச் சுவீகரித்துக் கொண்டுவிட்ட இன்றைய வாழ்க்கை முறையால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மரபான விஷயங்களில் ஆத்தங்குடி டைலும் ஒன்று. சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தயாரிக்கப்பட்டு வந்த இந்த டைலின் தயாரிப்பு இன்று கணிசமாகக் குறைந்துள்ளது.

இதைக் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா கட்டிட்டக்கலைக் கல்லூரியில் ஆத்தங்குடி டைல் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. ஆத்தங்குடியைச் சேர்ந்த பெத்துராஜ், ஆத்தங்குடி டைலின் சிறப்பம்சம், பயன்கள் ஆகியவற்றை விளக்கினார்.

மேலும், ஒவ்வொரு கட்டமாக டைல் தயாரிக்கும் முறையை மாணவர்களுக்குச் செயற்முறையில் சொல்லிக் கொடுத்தார். தமிழகத்தின் பல்வேறு கட்டிடக்கலைக் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோரும் ஜெர்மனி மாணவர்கள் 22 பேரும் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கெடுத்து ஆத்தங்குடி டைல் தயாரிக்கும் முறையைக் கற்றுக் கொண்டனர்.

மீளும்-ஆத்தங்குடி-டைல்

காய்கறிகளில் இருந்து பெறப்படும் வண்ணங்களைச் சிக்கலான வடிவ அமைப்புகளில் ஊற்றி ஆத்தங்குடியின் மணலைக் கொண்டு இந்த டைல் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய செய்முறையே இதை ஒரு கைவினைக் கலையாக மாற்றியுள்ளது. பெரும்பாலான ஆத்தங்குடி டைல்கள் பாரம்பரியமான வடிவங்களைக் கொண்டது என்றாலும் காலத்துக்கு ஏற்ப புதுமையான வடிவங்களும் முயலப்பட்டு வருகின்றன.

இந்த டைல் முழுக்க முழுக்கக் கைகளால் தயாரிக்கப்படுவதால், தயாரிப்புச் செலவு குறைவு. முக்கியமாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததவை. இந்த டைலுக்குப் பராமரிப்புச் செலவு இல்லை. மட்டுமல்லாமல் காலம் செல்லச் செல்ல இந்த டைல் மெருகேறிக் கொண்டே இருக்கும் பண்பைக் கொண்டது.

 “வெர்டிஃபைடடு டைல், மொசைக் எனத் தரைத்தளத்துக்கு மக்கள் நவீனத்தை விரும்பத் தொடங்கிய பிறகு ஆத்தங்குடி டைல் போன்ற மரபார்ந்த கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு குறையத் தொடங்கியது. இத்தகைய பயிற்சி வகுப்புகள் மூலம் அக்கலையை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். அதன் மூலம் நாளைய கட்டிட வடிவமைப்பாளர்களாக வரவிருக்கும் இன்றைய மாணவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

மேலும், மரபின் தொடர்ச்சி அறுபடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்தக் கலையைக் கடத்த முடியும் என்று நம்புகிறோம். ஆத்தங்குடி போன்ற பாரம்பரியமான கட்டுமானப் பொருளை உருவாக்கும் கலைஞர்களுக்கும் இந்தப் பயிற்சி உதவும்” என்று சவீதா கட்டிடக்கலைக் கல்லூரியின் தலைவரும் இந்தப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளருமான துர்கானந்த் பல்சவார் கூறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்