உள் அலங்காரத்துக்குச் செலவு எவ்வளவு?

By என்.கெளரி

ஒரு வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்டும், வாங்கும் பலரும் அதே அளவு முக்கியத்துவத்தை அந்த வீட்டின் உள் அலங்காரத்துக்குக் கொடுப்பதில்லை. வீட்டு உள் அலங்காரத்துக்கு அதிகமாகச் செலவாகும் என்று நினைப்பது, வீட்டைக் கட்டி முடித்துவிட்டுக் கடைசி நேரத்தில் வடிவமைப்பாளரை அணுகுவது, உள் அலங்கார பட்ஜெட்டை முதலிலேயே திட்டமிடாமல் விடுவது என இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டுக்கு உள் அலங்காரம் செய்வதற்கு முன்னால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் இருக்கின்றன.

வாடகைக்கா, நமக்கா?

உங்களுடைய புதிய வீட்டை வாடகைக்கு விடுவதற்காக உள் அலங்காரம் செய்கிறீர்களா, அல்லது நீங்களே குடியிருப்பதற்காக உள் அலங்காரம் செய்கிறீர்களா என்பதை முன்பே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். “நாம் கட்டும் வீட்டை வாடகைக்கு விடப்போகிறோம் என்றால் அதற்கு அடிப்படையான உள் அலங்காரம் செய்தாலே போதுமானது. இந்த அடிப்படை உள் அலங்காரத்தில் சமையலறை அலமாரிகள், பரண், தொலைக்காட்சிக்கான இடம், பூஜை யூனிட்டுகள், கழிப்பறைத் துணைக் கருவிகள் உள்ளிட்டவை அடங்கும்.

அத்துடன், வாடகைக்கு வருபவர்களிடம் அறைக்கலன்கள் இருக்கும். ஆகையால் ஓர் அறையில் உள் அலங்காரம் எதுவும் செய்யாமல் காலியாக விடலாம். இந்த அடிப்படை உள் அலங்காரம் செய்வதற்குத் தோராயமாக ஒரு சதுர அடிக்கு ரூ. 350 என்று நிர்ணயிக்கிறோம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ‘ஜெனித் இன்டிரீயர்ஸ்’ (Zenith Interiors) நிர்வாக இயக்குநர் எஸ். பாலசுப்ரமணியன்.

அதுவே நாமே அந்த வீட்டில் வசிக்கப்போகிறோம் என்றால் நமது தேவைக்கேற்ப, கூடுதலான வசதிகள் இருக்கும்படி உள் அலங்காரம் செய்துகொள்ளலாம். இதில் நவீன சமையலறை (Modular Kitchen), மேற்கூரை, விளக்குகள், கருப்பொருளுடன் வடிவமைக்கப்படும் அறைகள் போன்றவற்றை வசதியான உள் அலங்காரத்துடன் சேர்த்துக்கொள்ளலாம்.

“நாமே வசிக்கப்போகும் வீடு என்பதால் இதற்குக் கூடுதலாகச் செலவுசெய்து சில வசதிகளைச் செய்துகொள்வதில் தவறில்லை. அதுமட்டுமில்லாமல், நீண்ட நாட்கள் நீங்கள் வசிக்கப்போகும் வீட்டின் தோற்றம் உள் அலங்காரம் செய்யும்போது கூடுதல் அழகுடன் திகழும்” என்று சொல்கிறார் பாலசுப்ரமணியன்.

என்ன கருப்பொருளில் அலங்காரம்?



அறைகளைத் தங்களுக்குப் பிடித்த கருப்பொருளில் (Theme) வடிவமைக்கும் போக்கு இப்போது மக்களிடம் அதிகரித்திருக்கிறது. ஓர் அறையைக் கருப்பொருளில் வடிவமைப்பதற்கு ஏறக்குறைய ரூ. 1,75,000 வரை செலவாகும்.

“குறிப்பிட்ட கருப்பொருளில் அறையை வடிவமைக்க நினைப்பவர்கள் அதற்கான செலவையும் வீடு வாங்குவதற்கான, கட்டுவதற்கான செலவுடன் முதலிலேயே ஏற்பாடுசெய்துகொள்வது நல்லது. ஓர் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை உள் அலங்காரம் செய்வதற்கு ஏறத்தாழ ரூ. 2,50,000 வரை செலவாகும். அதுவே மூன்று படுக்கையறை கொண்ட வீடாக இருந்தால் மூன்று லட்சத்துக்கு மேல் செலவாகலாம்” என்கிறார் அவர்.

உள் அலங்காரத்துக்கு என்ன பொருள்?

உள் அலங்காரம் செய்வதற்கு முன்னர் சரியான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நம் வீட்டுக்கும் பொருளாதாரத்துகும் ஏற்ப பொருட்களைத் தேர்வுசெய்வது பொருத்தமானதாக இருக்கும். “மர வேலைப்பாடுகள் செய்வதற்கு இப்போது ‘லேமினேட்டட் ரப்பர்’ (Laminated Rubber), ‘ஸ்ப்ரே பெயிண்டட் (Spray Painted), மெம்ப்ரேன் ஃபினிஷ் (Membrane finish), ‘போஸ்ட் ஃபார்ம்டு’ (Post formed) போன்ற மரப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ‘போஸ்ட் ஃபார்ம்டு’ பொருட்கள் இப்போது சந்தையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவேளை, பிராண்ட்டட் பொருட்களைத் தேர்ந்தெடுத்தால் அதற்குச் சற்று கூடுதலாகச் செலவாகும்” எனப் பொருட்கள் தேர்வு குறித்து பாலசுப்ரமணியன் பகிர்ந்துகொள்கிறார்.

எப்போது செய்ய வேண்டும்?

ஒரு வீட்டை எந்தக் கட்டத்தில் உள் அலங்காரத்துக்கு ஒப்படைப்பது என்பதை முன்பே தீர்மானிப்பது கடைசி நேரக் குழப்பங்களைத் தவிர்க்க உதவும். கூடுமானவரை, வீடு முடிவடைதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அதில் உள் அலங்காரத்தைத் திட்டமிட வேண்டும். அதனால், கட்டுநரிடம் இதை முன்பே பேசிவைத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் மின்சார யூனிட்டுகள், பிளம்பிங் யூனிட்டுகள் போன்றவற்றை உள் அலங்காரத்துக்குப் பொருந்தும்படி வடிவமைக்க முடியும்.

வடிவமைப்பாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

உள் அலங்காரம் செய்ய முடிவெடுத்துவிட்டீர்கள். இனி வேலையைத் தொடங்க வேண்டும் அல்லவா? முதலில் திறமையான உள் அலங்கார வடிவமைப்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதைச் செய்துவிட்டாலே போதும் முக்கால்வாசிப் பணி முடிந்த மாதிரிதான். தேர்ந்தெடுக்கும் முன் அவருக்கு இந்தத் துறையில் அனுபவம் உண்டா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதுபோல பூஜை அறைக்கு ஒரு வடிவமைப்பாளர், வரவேற்பறைக்கு வேறொருவர் எனத் தேர்ந்தெடுப்பதைவிட ஒட்டுமொத்தமாக எல்லா உள் அலங்கார வடிவமைப்புக்கும் ஒரே வடிவமைப்பாளரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதேசமயம் அவர் சொல்லும் விலையைச் சந்தையின் விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் கடைசி நேரத்தில் கட்டுநர் ஏதாவது மாற்றங்கள் செய்யச் சொன்னால் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

- எஸ்.பாலசுப்ரமணியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்