தான செட்டில்மென்ட் யாருக்குச் செல்லுபடியாகும்?

By எஸ்.பி.விஸ்வநாதன்

என் பெயர் முருகதாஸ். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். என் அப்பாவின் அப்பா வாங்கிய சொத்து (1970-1975) வாங்கியவரின் பெயரிலேயே உள்ளது. மாற்றம் செய்யவில்லை. அவர் 1980-ம் ஆண்டு இறந்துவிட்டார். இறப்புச் சான்றிதழ் இல்லை. தற்பொழுது பட்டாவை என் தந்தை பெயருக்கு மாற்றம் செய்வது எப்படி? நாங்கள் கடந்த 30 வருடம் அங்கயேதான் இருக்கிறோம்.

வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார இணைப்பு, குடும்ப அட்டை என அனைத்தும் ஒரே முகவரி. என் தந்தை தாய் இருவரும் படிப்பறிவு இல்லாதவர்கள். இதனைப் பயன்படுத்தி (வி.எ.ஓ.) 10,000 ரூபாய் கேட்கிறார். நாங்கள் அன்றாடம் தினக்கூலி செய்து பிழைப்பு நடத்துபவர்கள். தயவுசெய்து விளக்கம் அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

- முருகதாஸ்

உங்கள் தந்தை வழி தாத்தா தனது பெயரில் வாங்கிய சொத்து அவர் காலமான பிறகு அவரது வாரிசுகளை வந்தடையும். உங்கள் தாத்தாவிற்கு எத்தனை குழந்தைகள் (அதாவது உங்கள் தந்தையின் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்) என்று நீங்கள் கூறவில்லை. உங்கள் தாத்தாவின் இறப்புச் சான்றிதழும் வாரிசுச் சான்றிதழும் கண்டிப்பாக அவசியம்.

முதலில் அவற்றைப் பெற நீங்கள் முயல வேண்டும். பிறப்புச் சான்றிதழை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு செய்து பெற வேண்டும். வாரிசுச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்து பெற வேண்டும். உங்கள் தாத்தாவுக்கு உங்கள் தந்தை ஒரே வாரிசாக இருக்கும் பட்சத்தில், உங்கள் தாத்தாவின் பிறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்களை இணைத்து, உங்கள் தாத்தாவின் பெயரில் உள்ள சொத்தைப் பொறுத்து அனைத்து வருவாய்த் துறை ஆவணங்களிலும் (பட்டா உட்பட) உங்கள் தாத்தாவின் பெயருக்கு பதிலாக உங்கள் தந்தையின் பெயருரைப் பதிவு மாற்றம் செய்ய உங்கள் தந்தை மனு செய்ய வேண்டும். அதன் பிறகு வட்டாட்சியர் உங்கள் தந்தை பெயருக்குப் பட்டா வழங்குவார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் மனுவில் ஒட்ட வேண்டிய ரூ.2 க்கான நீதிமன்றக் கட்டண வில்லையைத் தவிர வேறு எந்தப் பணமும் யாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை.

என் சகோதரிக்கு மூன்று குழந்தைகள். அவருடைய மாமனாருக்கு அவர் கணவர் ஒரே மகன். மாமனாருக்கு 4 ஏக்கர் நிலம் உண்டு. அந்த நிலம் அவருக்குப் பிறகு என் சகோதரியின் கணவனுக்குத்தான் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் திருமணம் நடந்தது. என் சகோதரியின் மைத்துனிகள் எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. என் சகோதரியின் கணவரும் அவரது மாமனாரும் சகோதரியையும் மூன்று குழந்தைகளையும் கவனிப்பதில்லை. சகோதரர் என்ற முறையில் நான் அவருக்கு உதவுகிறேன்.

என் சகோதரி மாதம் ரூ. 3,000 ஆயிரம் வருமானம் தரக்கூடிய வகையில் ஒரு சிறு வேலையும் செய்துவருகிறார். என் சகோதரியின் குழந்தைகளின் பொருளாதாரப் பாதுகாப்பை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. அந்தக் குழந்தைகள், அவர்களது தாத்தாவின் உரிமைகோர முடியுமா? அதற்கான வழி என்ன எனச் சொல்லுங்கள்.

- எம்.சந்திரசேகரன்

உங்கள் சகோதரியின் மாமனாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம் அவரது சுய சம்பாத்திய சொத்தா அல்லது மூதாதையர் வழியில் வந்த சொத்தா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் சகோதரியின் மாமனாருக்கு எத்தனை பெண் குழந்தைகள் (அதாவது உங்கள் சகோதரியின் கணவருடன் பிறந்த சகோதரிகள் எத்தனை பேர்) என்பதையும் நீங்கள் குறிப்பிடவில்லை.

அந்த 4 ஏக்கர் நிலம் உங்கள் சகோதரியின் மாமனாருக்கு மூதாதையர் வழியில் வந்த சொத்தாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சகோதரியின் மூன்று குழந்தைகளுமே அந்த சொத்தில் சட்டப்படி உரிமைகோர முடியும். நீங்கள் தகுந்த நீதிமன்றத்தில் உங்கள் சகோதரியின் குழந்தைகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்து சொத்தில் அவர்களுக்குரிய பங்கைப் பெறலாம்.

தான செட்டில்மென்ட் என்றால் என்ன? யார் யாருக்குக் கொடுத்தால் செல்லுபடியாகும்? என் கணவர் தனக்குச் சொந்தமான வீடும், மத்திய அரசாங்கத்தில் வேலையும் உள்ளது என்று சொல்லி திருமணம் செய்தார். திருமணம் முடிந்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார். பின்பு பல்வேறு காரணங்களால் கணவன் மனைவி இருவரும் பிரிந்தோம்.

ஆனால் விவகாரத்து நடக்கவில்லை. பின் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் தன் தவறை உணர்ந்து உடல் நலம் சரியில்லாத தன்னைக் கவனித்துக் கொள்ள மனைவி வேண்டும் என்று அழைத்துக்கொண்டார். என்னுடைய கேள்வி என்னவென்றால் திருமணத்திற்குச் சொத்தாகக் காட்டிய வீட்டை, விவகாரத்து ஆகாத பட்சத்தில், மனைவியும் இறக்காத நிலையில், அந்த வீட்டைத் தன்னுடைய மனநலம் சிறிது பாதிக்கப்பட்ட தம்பிக்குத் தானம் கொடுத்தது சரியா? அந்த வீட்டின் மீது அவருடைய மனைவி உரிமை கோர முடியுமா?

- சகிலா

தான செட்டில்மென்ட் என்பது ஒருவர் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தைத் தான் விரும்பும் நபருக்கு எந்த ஒரு பிரதிபலனும் (கிரயத்தொகை) பெற்றுக்கொள்ளாமல் எழுதிக்கொடுக்கும் ஆவணமாகும். உங்கள் கணவருக்குச் சொந்தமான வீடு என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

அது அவரது சுய சம்பாத்தியத்தில் கிரயம் பெறப்பட்ட சொத்தா அல்லது மூதாதையர் வழியில் அவருக்கு வந்த சொத்தா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. மேற்படி வீடு உங்கள் கணவர் அவரது சுய சம்பாத்தியத்தில் கிரயம் பெற்ற சொத்தாக இருக்கும் பட்சத்தில் அதை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தான செட்டில்மென்ட் எழுதிக்கொடுக்க உரிமை உண்டு. அவர் தன் தம்பிக்குத் தானம் கொடுத்தது சட்டப்படி செல்லும். அந்த வீட்டில் சட்டப்படி நீங்கள் எந்த வித உரிமையும் கோர முடியாது.

ஐயா, என் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு என் தந்தைக்குத் அவருடைய சகோதரிகள் பூர்வீகச் சொத்தை செட்டில்மென்ட் செய்து கொடுத்தனர். ஆனால் அதற்காகப் பணம் உட்பட எதுவும் பெறவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. இதை வைத்து எதிர்காலத்தில் அவர்கள் வில்லங்கம் செய்ய வாய்ப்புள்ளதா?

- கனகராஜ்

உங்கள் தந்தையின் சகோதரிகளிடமிருந்து பூர்வீகச் சொத்தில் அவர்களுக்குரிய பங்கை உங்கள் தந்தை பெயரில் செட்டில்மென்ட் வாங்கும்போது அதற்காகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை செட்டில்மென்ட் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒரு வேளை குறிப்பிடப்படாமல் இருந்தாலும் செட்டில்மென்ட் செய்யப்பட்ட அன்றே மேற்படி சொத்து உங்கள் தந்தைக்கு பூர்ணமாகப் பாத்தியப்பட்டு விடுவதால், சட்டப்படி உங்கள் தந்தையின் சகோதரிகள் எதிர்காலத்தில் வில்லங்கம் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு வில்லங்கம் எதுவும் செய்தாலும் அவை சட்டப்படி செல்லாது.

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

தபாலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்),

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்