துறைமுகத்துக்காக அழிக்கப்பட்ட குப்பம்

எண்பதுகளின் இறுதியில் ஒரு நாள் காலையில், ஆல்டென்வெர்டர் என்ற ஜெர்மானியக் கடலோர மீனவக் குப்பத்துக்கு ஒரு டிரக் நிறைய அடியாட்கள் போல தோற்றமளிக்கும் நபர்கள் வந்தார்கள். ஹெய்ன்ஸ் ஆஸ்ட்மனின் வீட்டு முன் அந்த டிரக் நின்றது. ஆல்டென்வெர்டரில் நீண்ட காலமாக வசிக்கும் மீனவர் அவர்.

கண்ணாடி போட்டிருந்த நகரசபை ஆசாமி ஒருவர் டிரக்கிலிருந்து இறங்கி அந்த வீட்டை நோக்கி வந்தார். அந்த வீட்டைச் சுற்றிலும் நோட்டமிட்டார் அவர். அந்த அதிகாரியைக் கேள்வி கேட்டாலோ பதில் ஏதும் கிடைக்கவில்லை. கடைசியில் தனது பலத்தைக் காட்டினார் ஆஸ்ட்மன். நகரசமை ஆசாமி கீழே விழ, அவரது கண்ணாடி இரண்டு பகுதிகளாக உடைந்தது.

ஒரு மாதம் கழித்துத் தாக்குதல் வழக்கிலிருந்து ஆஸ்ட்மன் விடுவிக்கப்பட்டார். ஆஸ்ட்மனின் வீட்டுக்கு வரும் மின் இணைப்பைத் துண்டிக்கும்படியும் தண்ணீர்க் குழாய்களை உடைக்கும்படியும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கும்படியும் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக நகரசபையின் அடியாட்கள் ஒப்புக்கொண்டனர். அந்தக் குப்பத்துவாசிகளை வெளியேற்றுவதற்காகச் சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளை நகரசபை பின்பற்றுவது அது முதலாவது தடவை அல்ல என்று நீதிபதி குறிப்பிட்டார். ஆம், நகரசபையின் அதிகாரிகள் மிக மோசமான வழிமுறைகளை நாடிக்கொண்டிருந்தார்கள். அதாவது ஹாம்பர்க் நகரம் உயிர்த்திருக்க வேண்டும் என்பதற்காக ஆல்டென் வெர்டர் குப்பம் உயிர்விட்டாக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

ஆல்டென்வெர்டெர் குப்பம்

துறைமுக நகரங்கள் மற்ற நகரங்களைப் போன்றவையல்ல. துறைமுக நகரங்கள் தங்களுக்கு அருகிலுள்ள நகரங்களைவிட அதிகமாகப் பன்னாட்டுக் கலாச்சாரத் தன்மை கொண்டவை. உலகத்தோடு தொடர்புடையவை. அதே நேரத்தில் பெரும் ஆபத்தையும் கொண்டிருப்பவை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சரிவை அந்த நகரங்கள் சந்திக்கலாம். பெல்ஜியம் நாட்டின் ப்ரூஸ் துறைமுகம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 12-ம் நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டு வரை முக்கியமான துறைநகராக இருந்தது ப்ரூஸ். அங்கே ஏற்றுமதி, இறக்குமதி ஆகாத பொருட்களே இல்லை எனலாம். ஆனால், அந்த நகரத்தையும் கடலையும் இணைக்கும் நீர்வழி மண்மூடிப் போகவே அந்தத் துறைமுக நகரின் கதையே மாறியது.

ஹாம்பர்குக்கும் வேறு விதமான விதி 50 ஆண்டுகளுக்கு முன்பு காத்திருந்தது. 20-ம் நூற்றாண்டின் மத்தியில் பெர்லினுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகையைக் கொண்டிருந்த ஹாம்பர்கின் துறைமுகத்தில் மட்டும் 14 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தார்கள். ஆனால், 1960-களில் கடல் வர்த்தகம் அங்கே வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. மற்ற ஐரோப்பிய துறைமுகங்கள் சரக்குக் கப்பல் வர்த்தகத்தையும் பெரிய கப்பல்களின் போக்குவரத்தையும் மேற்கொள்ள ஆரம்பித்ததால் ஹாம்பர்க் தடுமாற்றத்தைச் சந்தித்தது. மேலும், ஹாம்பர்க் கடலோர நகரமும் அல்ல.

கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 70 கடல் மைல்கள் தொலைவில் இருப்பது. எல்பே நதிதான் கடலுக்கும் அந்த நகரத்துக்கும் இடையே உள்ள தொடர்பு. சில இடங்களில் அந்த நதி ஆழம் குறைவாக இருப்பதால் போக்குவரத்தும் பிரச்சினையே. இவ்வளவு பிரச்சினை இருந்தாலும் ஒரு விஷயத்தில் மற்ற ஐரோப்பிய துறைமுக நகரங்களை விட ஹாம்பர்குக்கு ஒரு சாதகமான அம்சம் இருந்தது. வெகு காலமாக நகர அரசாக (City state) இருக்கும் நகரம் ஹாம்பர்க்.

ஆகவே, வணிகத்துக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் இசைவான சட்டதிட்டங்கள் அங்கே இருந்தன. இதன் காரணமாக, அந்த நகரத்துக்குரிய அதிகாரங்களைக் கொண்டு ஒரு சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுதான் ‘துறைமுக விரிவாக்கச் சட்டம்’. இந்த விரிவாக்கத்துக்குத் தன்னைப் பலிகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது 2,500 பேர் வசித்த ஆல்டென்வெர்டெர் குப்பம்.

அழிக்கப்பட்டது குப்பம்

குப்பத்துவாசிகளில் சிலர் உடனடியாக வெளியேறிவிட்டனர். சதுரமீட்டருக்கு இவ்வளவு நன்று ஒரு நல்ல தொகையை நகரசபை நீட்டியதும் அதை அவர்களால் வேண்டாமென்று சொல்ல முடியவில்லை. உடனடியாக அவ்வாறு வெளியேறாதவர்கள் 1973-க்குப் பிறகு வெளியேறும்படி வந்தது. தாங்களாக வெளியேறாவிட்டால் நகரத்திலிருந்தும் அரசிலிருந்தும் அவர்கள் துண்டிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற மிரட்டல்தான் அதற்குக் காரணம். ஆளில்லா வீடுகளெல்லாம் உடனடியாகத் தரைமட்டமாக ஆக்கப்பட்டன.

எழுபதுகளின் இறுதியில் அந்தக் குப்பத்தில் பத்துப் பன்னிரண்டு பேர்தான் எஞ்சினார்கள். 80-களின் தொடக்கத்திலோ மூன்று பேர்தான் எஞ்சினார்கள். மீனவர் ஆஸ்ட்மன், ஒரு விவசாமி, ஒரு பள்ளி ஆசிரியர். நகரத்துக்கு எதிராகப் போராடுவதில் ஆஸ்ட்மன் உறுதியாக இருந்தார். நகரத்துக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் அந்தக் குப்பத்தில் தொடர்ந்து ராக் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். ஒரு கட்டத்தில் அவர்களுடைய போராட்டத்தில் 40 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டார்கள்.

எனினும் 1997-ல் அந்த குப்பத்தின் செஸ்ட்னட் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. அந்தக் குப்பத்தின் இறுதிக் குப்பத்துவாசியான ஆஸ்ட்மன் தனது சிறுவயதில் அந்த மரங்கள் கீழேதான் விளையாடினார். வேறு வழியில்லாமல் ஆஸ்ட்மன் சில நிபந்தனைகளை முன்வைத்தார். குறைந்த வட்டியில் கடன், அவருக்குப் பிடித்த இடத்தில் மனை, புதிய வீட்டுக்குத் தான் செல்லும்வரையில் இடிக்கும் வேலையை ஆரம்பிக்கக் கூடாது, ஆகிய நிபந்தனைகள்தான் அவை.

அதற்கு 5 ஆண்டுகள் கழித்து ஆல்டென்வெர்டரின் சரக்குப் பெட்டி முனையம் தனது செயல்பாட்டைத் தொடங்கியது எங்கு தெரியுமா, சாட்சாத் ஆஸ்ட்மனின் வீடு இருந்த இடத்தில்தான்.

ஆல்டென்வெர்டர் குப்பம் அங்கே இருந்ததற்கான ஒரு சில எச்சங்கள்தான் தற்போது இருக்கின்றன. ஒரு சிறிய கல்லறைத் தோட்டமும் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித கெட்ரூட் தேவாலயமும்தான் அவை. மாதமிருமுறை அந்தக் குப்பத்து வாசிகளும் அவர்களது வாரிசுகளும் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்காக அந்த தேவாலயத்தில்தான் கூடுவார்கள். அங்கு வழிபாட்டு மொழி என்பது ஒருவகை கொச்சை ஜெர்மன்தான்.

அங்குள்ள சரக்குக் கப்பல்கள் மேலும் பெரிதாகிக்கொண்டே இருக்கின்றன. எம்.எஸ்.சி ஆஸ்கர் என்ற கப்பல்தான் அங்குள்ளவற்றிலேயே மிகவும் பெரியது. 400 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்டது. ஹாம்பர்க் துறைமுகத்துக்குள் நுழைய வேண்டும் என்றால் அது போன்ற ராட்சசக் கப்பல்களெல்லாம் சிக்கலான நடனம் ஒன்றை ஆடித்தான் ஆக வேண்டும். எல்பே ஆற்றின் வழியாக நுழைந்து திரும்ப வேண்டும்.

சரக்குக் கப்பல்கள் போக்குவரத்திலும் வணிகத்திலும் இன்று ஹாம்பர்க் அனுபவித்துக்கொண்டிருக்கும் அந்தஸ்தும் வெகு நாட்கள் நீடிக்காது போலிருக்கிறது. ஏனெனில், டச்சுக்காரர்களைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் கார்கள் உற்பத்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் கப்பல் போக்குவரத்துக்குக் கொடுப்பது வழக்கம்.

டச்சுக்காரர்களைப் பொறுத்தவரை ஒரு துறைமுகம் கட்டுவதென்பது ஒரு தேசிய செயல்திட்டம். ஜெர்மனியிலோ துறைமுகங்களெல்லாம் அந்தந்தப் பிரதேசங்களின் விவகாரம். ஆகவே, டச்சுக்காரர்களுடன் கப்பல் போக்குவரத்தில் ஜெர்மனியால் போட்டிபோட முடியாது என்று ஜெர்மானியர்களே கருதுகிறார்கள்.

இது இப்படி இருக்க, 2024 ஒலிம்பிக் போட்டியை ஹாம்பர்கில் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு கோரிக்கை எழுந்தது. ஆல்டென்வெர்டர் குப்பத்துக்கு அருகே ஒலிம்பிக் கிராமம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு அதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஹாம்பர்க்வாசிகள் அந்த வாக்கெடுப்பில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எதிராக வாக்களித்துவிட்டார்கள்.

“நானும் ஒலிம்பிக் போட்டிக்கு எதிராக வாக்களித்தேன்” என்கிறார் ஆஸ்மன் என்பவர். “பழைய துறைமுகத்தை மறுபடியும் பயன்படுத்தப் போகிறார்கள் என்றால் நான் ஏன் ஆல்டென்வெர்டரை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

சரக்குப் பெட்டகங்களுக்கு மக்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஆல்டென்வெர்டர் குப்பம் அழிக்கப்பட்டது. தற்போது ஒலிம்பிக் எண்ணத்தில் மக்களுக்குச் சரக்குப் பெட்டகங்கள் இடையூறாக இருக்குமோ என்ற சிந்தனை எழுந்திருக்கிறது. ஆனால், ஆஸ்மன் சொல்கிறார், “ஒலிம்பிக் போட்டிகள் சரிதான். ஆனால், எங்கள் துறைமுகப் பகுதியில் கூடாது.”

தி கார்டியன் | சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்