வீட்டு வாடகை எப்படிச் சமாளிபபது?

By டி. கார்த்திக்

எந்த ஊரிலும் சொந்த வீடு வைத்திருப்பவர்களைவிட வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். ஒரு காலத்தில் வீட்டு வாடகை ஓரளவு செலுத்தக்கூடிய அளவில் நியாயமாக இருந்தது. ஆனால், இன்றோ நிலைமை மாறிவிட்டது. வாடகைதாரர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதித் தொகைக்கு மேல் வாடகைக்கு செலுத்தவே போய்விடுகிறது. அதுவும் சென்னையில் வாடகையை கேட்டாலே வாடகைதாரர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

சென்னையில் முன்பு பேச்சலர்கள் என்றாலே வாடகைக்கு வீடு தரமாட்டார்கள். ஆனால், இன்றோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாடகைக்குவிட யோசிக்கும் நிலை வந்து விட்டது. இதற்கு முக்கியக் காரணம் தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி.) துறையில் கிடைக்கும் அதிகபட்ச சம்பளம். ரூ. 3 ஆயிரமோ அல்லது 4 ஆயிரமோ வாடகைக்கு விடக்கூடிய ஒரு வீட்டில் நான்கு பேச்சலர்களுக்கு வீடு கொடுத்தால், ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.1500 வீதம் ரூ.6000 வசூலித்துவிடுகிறார்கள். வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருவதால் பேச்சலர்களும் கேட்கும் வாடகையை கொடுக்க தயாராகவே இருக்கிறார்கள். அதனால், வீடு வாடகைவிடுவோர் இவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

ஐ.டி. துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான துறையில் கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் எல்லாம் வீடு வாடகைக்கு செல்லும்போது அலைவதற்குத் தயாராகவில்லை. ஏதாவது ஒரு தரகர் மூலமே அணுகுகிறார்கள். தரகர் பணம் கறக்கும் நோக்கில், “ நல்ல பார்ட்டி, ரூ. 5 ஆயிரம் இல்லை, 7 ஆயிரம் கூட கொடுப்பாங்க; வந்து கேட்டால், ரூ. 8 ஆயிரம் சொல்லுங்க. அப்புறம் பேசுற மாதிரி பேசி ரூ.7 ஆயிரம் வாங்கிடலாம்” என்று வீட்டு சொந்தக்காரர்களுக்கு ஆசை காட்டி அவர்களிடம் ஒரு தொகையையும், வாடகைக்கு வருபவரிடம் ஒரு மாத வாடகைப் பணத்தையும் கறந்து கொண்டு போய்விடுவார்கள்.

வீடு வாடகை கட்டணம் அதிகரிக்க சில தரகர்களும் இப்படி காரணமாக உள்ளனர். இப்படி இஷ்டத்துக்கு வீட்டு வாடகையை உயர்த்திவிடுவதால் ஒரு ஹால், ஒரு பெட்ரூம், கிச்சன், பாத்ரூம் உள்ள வீட்டுக்குக்கூட ஏரியாவுக்கு தகுந்தார்போல் ரூ.6 முதல் 8 ஆயிரம் வரையில் வாடகை கேட்கிறார்கள் உரிமையாளர்கள்.

வீட்டு வாடகைக்கு ஒருபுறம் என்றால், தண்ணீருக்கு ஒரு கட்டணம், மின் கட்டணம் யூனிட்டுக்கு இஷ்டம்போல் கட்டணம் என வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கவே செய்கிறார்கள். சில இடங்களில் , கொடுக்கும் வாடகைக்கும் உரிமையாளர்கள் செய்து கொடுக்கும் வசதிகளுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் வீட்டு வாடகை றெக்கை கட்டி பறக்கிறது என்றுகூட சொல்லலாம். இந்த இடங்களில் ரூ.15 ஆயிரத்துக்குக்கூட வீடு கிடைப்பது சிரமமாக உள்ளது. நகரின் மையப்பகுதி என்றில்லாமல் தாம்பரம் தாண்டியும் வீட்டு வாடகை கண்டபடி உயர்ந்தே காணப்படுகிறது.

ஒருவர் ஒரு வீட்டை காலி செய்கிறார் என்றால், அடுத்து வரும் நபருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்தியே கேட்கிறார். பலரும் குழந்தைகளின் பள்ளிக்கூடத்தை கருத்தில் கொண்டே வெவ்வேறு இடங்களுக்கு காலி செய்யும் நிலை உள்ளது. ஆனால், செல்லும் இடத்தில் நல்ல வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக உரிமையாளர்கள் எவ்வளவு உயர்த்தி கேட்டாலும் கொடுக்கும் நிலையே உள்ளது.

பல இடங்களிலும் வாடகையில் 5 மாத அல்லது 10 மாதத் தொகையை அட்வான்ஸ் தொகையாக வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு வேளை வீட்டை காலி செய்ய நேரும்போது, வர்ணம் பூச, வீட்டை கழுவ, இன்னும் என்னென்ன சொல்லி அட்வான்ஸ் தொகையை எவ்வளவு கழிக்க முடியுமோ அந்த அளவுக்கு கழிக்கவும் செய்கிறார்கள். வீட்டை காலி செய்யும் போது குறிப்பிட்ட அந்த மாதத்தில் 10 நாட்கள்தான் இருந்திருப்போம். ஆனாலும், ஒரு மாத வாடகையை எடுத்துக் கொள்ளும் வீட்டுக்காரர்களும் சென்னையில் அதிகம்.

பல வீட்டு உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தமோ, வீட்டு வாடகை வாங்க ரசீதும்கூட கொடுப்பதில்லை. வருமான வரி செலுத்துவோர் அதற்காக சலுகையைப் பெற ரசீது முக்கியமாக உள்ளது. அந்த நேரத்தில் ரசீது கேட்டாலும் கொடுக்க பெரும்பாலான உரிமையாளர்கள் மறுத்துவிடுவார்கள். மீறி அதிக அழுத்தம் கொடுத்தால், வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள்.

சென்னையில் இப்படி வீட்டு வாடகை உயர்ந்திருப்பதைப் பார்த்து இன்று கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை என இதர நகரங்களிலும் அதிக வாடகை கேட்கும் நிலையை பார்க்க முடிகிறது. வெளி மாவட்டங்களில் முன்பு ஆயிரம் ரூபாய்க்கோ அல்லது இரண்டாயிரம் ரூபாய்க்கோ வீடு வாடகை விட்டவர்கள் இன்று ரூ.4 ஆயிரம், 5 ஆயிரம் கேட்கிறார்கள். வாடகை வீடு என்றாலே தலை சுற்றும் அளவுக்கே இன்றைய நிலை இருக்கிறது.

தமிழ் நாட்டில் வாடகைக் கட்டுப்பாட்டு சட்டமெல்லாம் அமலில் இருக்கவே செய்கிறது. ஆனால், இந்த சட்டத்தை யாரும் பின்பற்றுகிறார்களா இல்லையா என்பது கேள்விகுறிதான். இந்த சட்டம் கடுமையாகும்போதுதான் வாடகை குறைவை பற்றி நினைக்கவே முடியும். அதுவரை புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்