ரியல் எஸ்டேட்டில் முந்துகிறது இந்தியா!

By ரோஹின்

இந்தியாவைப் பொறுத்தவரை ரியல் எஸ்டேட் துறை வேலைவாய்ப்புக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் பெருமளவில் பங்களிக்கக்கூடியது. புதிது புதிதாக நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும்போதெல்லாம் அதை ஒட்டி ரியல் எஸ்டேட் துறையும் சில படிகள் மேம்பட சாத்தியமுண்டு. புதிதாக ஒரு தொழில்திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்போதுகூடத் தொழிற்சாலை, அதற்கான தொழிலாளர் குடியிருப்பு என ரியல் எஸ்டேட் துறையும் அதனால் பயன்பெற வாய்ப்புண்டு. இதன் காரணமாக ரியல் எஸ்டேட் துறை பலவேறு பிரச்சினைகளையும் மீறி வளர்ச்சி காண்கிறது என்பதே யதார்த்தம். இந்த வளர்ச்சியானது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைச் சுட்டும் வகையில் ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையைத் தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சிக் கழகமும், ரியல் எஸ்டேட் அமைப்பான கேபிஎம்ஜியும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன.

இந்த அறிக்கையானது 2030-ம் ஆண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறை உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக உருவெடுக்கும் என்றும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்துக்கும் மேல் பங்களிக்கும் என்றும் தெரிவிக்கிறது.

2022-ல் அதிகமான இந்தியர்களை வேலைக்கு வைத்திருக்கும் அமைப்பாகவும், சுமார் ஏழரைக் கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பைத் தரும் அமைப்பாகவும் கட்டுமானத் துறை மாறக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டில் 42 கோடியாக இருந்த இந்திய நகர்ப்புற மக்கள்தொகை 40 சதவீதம் அதிகரித்து 2030-ல் 58 கோடியைத் தொடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 11 கோடி வீடுகளை நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு அளிக்க வேண்டியதிருக்கும் என்றும் தெரிகிறது. இப்போது பற்றாக்குறையாக இருக்கும் ஆறு கோடி வீடுகளையும் -இதில் இரண்டு கோடி வீடுகள் நகர்ப்புறப் பகுதிக்கானவை - உள்ளிட்ட எண்ணிக்கை இது.

ரியல் எஸ்டேட் அமைப்பான கேபிஎம்ஜியின் இந்தியத் தலைவரான நீரஜ் பன்சால், ரியல் எஸ்டேட் சட்டம், ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் போன்றவற்றில் மேற்கொண்டிருக்கும் சீர்திருத்தமானது, கட்டுமான அனுமதி தொடர்பான விஷயங்களில் ஏற்பட்டுவரும் காலதாமம் போன்றவற்றைக் குறைத்து கட்டுமானத் துறையைப் பலப்படுத்தப்போகிறது என்கிறார். மேலும் இந்தத் துறையில் செயல்படுபவர்களிடம், கட்டுமானத் தரம், திட்டங்களைச் சரியான நேரத்துக்கு வழங்குவது, பணியின் பாங்கு, வேலை தொடர்பான நிர்வாகம் போன்ற விஷயங்களில் உலக அளவிலான மனப்பாங்கை உருவாக்க வேண்டியதிருக்கிறது என்றும் கூறுகிறார். அத்துடன், கட்டுமானத்துக்கான துரித அனுமதி, வில்லங்கமற்ற நில ஆவணம், நீண்ட கால முதலீடு, திறன்மிகு தொழிலாளர் குழு போன்றவற்றை வழங்குவதற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஆறரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 432 குழாயமைப்புத் திட்டங்கள், ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 400க்கும் மேற்பட்ட இருப்புப்பாதைத் திட்டங்கள், 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான 70 விமான நிலையத் திட்டங்கள், 55,100 கோடி ரூபாய் மதிப்பிலான 75 துறைமுகத் திட்டங்கள் உள்ளிட்ட பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவை குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நிலம் தொடர்பான விவகாரங்களில் சவால்களாக இருக்கும் வங்கிகளிலிருந்து கிடைக்கும் வரம்புக்குட்பட்ட நிதி உதவி, வரம்புக்குட்பட்டே கிடைக்கக்கூடிய நீண்ட கால முதலீடு, மரபு சார்ந்த தொழில்நுட்பத்தைக் கையாளும் தொழிலாளர் பற்றாக்குறை, நிலையான, ஊகிக்கக்கூடிய வரிப் பற்றாக்குறை ஆகியவை குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ரியல் எஸ்டேட் துறையின் பிரச்சினைகளைத் தீர்க்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆரோக்கியமானது. மேற்குறிப்பிட்ட திட்டங்கள் பெருமளவில் வேலைவாய்ப்பை அளிப்பதுடன் அது தொடர்பாகக் குடியிருப்புத் திட்டங்களுக்கும் வழிவகுக்கும். ஆகவே ரியல் எஸ்டேட் துறை இந்தத் திட்டங்களால் பெரும் பயனை அடைய வாய்ப்பு இருக்கிறது. மந்த கதியில் இயங்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு இந்த அறிக்கை புத்துயிரூட்டுவதுபோல் தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்