சலுகை வீடுகளில் தனியார் முதலீடு

By ரிஷி

சொந்த வீடு என்னும் கனவுடன் வாடகை வீட்டிலேயே வாழ்க்கையை இழுத்துப் பிடித்து நடத்திவரும் இந்தியர்கள் அநேகர். எல்லோருக்கும் சொந்த வீடு ஒன்று வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதுமா? அதை நிறைவேற்றிக்கொள்ள அவர்களது பொருளாதாரச் சூழல் ஒத்துழைப்பதில்லையே. ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்று சொல்வதைப் போல் தங்களது அதிர்ஷ்டமின்மையை நொந்துகொண்டே வாழ்ந்துவருகின்றனர். எனவே, இந்தியக் குடிமக்களின் சொந்த வீடு ஆசையை நிறைவேற்றிடத் தனது ஒத்துழைப்பை வழங்க மத்தியில் ஆளும் அரசு முடிவெடுத்தது.

ஆகவே, மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு சொந்த வீடு அமைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஈடேற்றும் வகையில் செயல்பட்டுவருகிறது. இந்த எண்ணம் ஈடேறுவதற்காகவே அனைவருக்கும் வீடு 2022 என்னும் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது ஆளும் பாஜக அரசு.

2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தால் சலுகை விலையில் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதனால் வீடற்ற இந்திய குடிமக்களுக்கு வீடு கிடைக்கும் என்பது அவர்களுக்கு உற்சாகமளிக்கும் விஷயம். அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வீடுகளைக் கட்ட வேண்டியதிருப்பதால் கட்டுமானத் துறை இந்தத் திட்டத்தால் ஊக்கம் பெற்றிருக்கிறது என்பது கூடுதல் அனுகூலம் தரும் விஷயம். இதனிடையே இந்தத் திட்டம் தொடர்பாக பிரதமரில் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சக அதிகாரிகளும், ஆளும் அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் தனியார் கட்டுமான அமைப்பைச் சேர்ந்த கட்டுநர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் வாழும் இந்தியக் குடிமக்களில் வீடற்றவர்களுக்கு 2022-ம் ஆண்டுக்குள் வீடு வழங்கப்பட வேண்டும் என்னும் திட்டத்தை நெருக்கடி இன்றிச் செயல்படுத்த என்னென்ன செய்யலாம் என்பது குறித்த சில முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் முக்கியமான முடிவாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தனியார் முதலீட்டுக்கு அரசு வழிசெய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்தக் கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளில் அப்படி ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சுமார் இரண்டு லட்சம் சலுகை வீடுகளைக் கட்டியெழுப்பும் 350 கட்டுமானத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலீட்டை அரசு அனுமதித்திருக்கிறது. மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குஜராத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் இந்தக் கட்டுமானத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

38 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலீட்டை கிரெடாய் அமைப்பின் உறுப்பினர்கள் செய்யவிருக்கிறார்கள். அரசு தன் குடிமக்களுக்காக உருவாக்கும் இந்த வீடுகளின் கட்டுமானச் செலவு 15 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை இருக்கும் என்று சொல்கிறார்கள். சராசரியாக ஒரு வீட்டைக் கட்டி முடிக்க 18 லட்சம் ரூபாய் செலவாகும் என்கிறார்கள். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் பயன்பெற இருக்கும் பயனாளிகளுக்காக அரசு ஒரு லட்சம் முதல் 2.35 லட்சம் வரை தனது பங்களிப்பாகத் தர இருக்கிறது.

அரசு உருவாக்க உள்ள 2 லட்சம் வீடுகளில் சுமார் ஒரு லட்சம் வீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கட்டப்பட உள்ளன. குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டியெழுப்பப்படும். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ஒடிஷா போன்ற மாநிலங்களில் ஆயிரத்துக்கும் குறைவான வீடுகளே கட்டப்பட இருக்கின்றன. இதுவரை இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 27 ஆயிரத்து 879 கோடி ரூபாய் செலவிட அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் நிறைவேற்றம் காரணமாக ஒரு புறம் கட்டுமானத் துறை பயன்பெறுகிறது; மற்றொரு புறம் வீடற்றவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். ஆகவே அனைத்துத் தரப்பினரையும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியடையவே செய்திருக்கிறது என்கிறது கட்டுநர் தரப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்