சூழலுக்கு உகந்த சிவப்புத் தரை

By எல்.ரேணுகா தேவி

அனல் வீசும் சென்னை வெயிலுக்கு மத்தியில் அண்ணாநகரில் உள்ள திருபுரசுந்தரியின் ‘தமிழ்மணம்’ வீடு விடியற்காலைப் பொழுதின் குளிர்ச்சியால் நிறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தன்னுடைய வீட்டில் போடப்பட்டுள்ள சிவப்புத்தரைதான் என்கிறார் அவர். பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘பிரான்சுவா ராபேலாஸ் த டூர்ஸ்’ பல்கலைக்கழகத்தில் நகர்ப்புறம், நகர்ப்புறம் சார்ந்த கட்டிடத் திட்டமிடலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் திருபுரசுந்தரி. ஸ்டுடியோ என்கிளேவ் (Studio Enclave) என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

திருபுரசுந்தரி செவ்வேளுக்குக் கட்டுமானத் தொழில்தான் முதன்மையானது என்றாலும் சென்னையில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘நம் வீடு, நம் ஊர், நம் கதை’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். கட்டிட வடிவமைப்பாளர் ஐயனார் நடத்திவரும் ‘கற்றல் கூடம்’ அமைப்புடன் இணைந்து, வழக்கொழிந்துபோன பாரம்பரிய முறையிலான சிவப்புத் தரையை அமைக்கும் கலைஞர்களைக் கொண்டு இன்றைய தலைமுறையினருக்குப் பயிலரங்குகள் நடத்திவருகிறார்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் தரைத் தளத்துக்கு கிரானைட், மார்பிள் அல்லது டைல் ஆகிய கற்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் நாம் திட்டமிட்டதைவிடவும் வீட்டின் கட்டுமானச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிடும். ஆனால், இதற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரியமான சிவப்புத் தரை (Red Oxide Floor) முறையில் வீடுகளுக்கான தரைத்தளத்தை அமைத்துக் கொடுக்கிறார் கட்டிடக் கலை நிபுணர் திருபுரசுந்தரி செவ்வேள்.

குளிர்ச்சி தரும் சிவப்புத் தரை

“இளங்கலை படிக்கும்போது இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்கு இருக்கும் ‘அவான்’ என்ற பகுதியில்தான் பிரபல நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் வாழ்ந்துள்ளார். அங்கு அவர் வாழ்ந்த வீடு, ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்த கிராம வீடுகள் போன்றவை அன்றைக்கு எப்படி இருந்தனவோ, அதேபோலத் தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அதைப் பார்த்துதான் பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதற்காகத்தான் ‘நம் வீடு, நம் ஊர், நம் கதை' அமைப்பைத் தொடங்கினேன். எங்கள் அமைப்பின் சார்பாக சென்னையில் பல பழமையான வீடுகளுக்குச் செல்லும்போதுதான் சிவப்புத் தரை பற்றித் தெரிந்து கொண்டேன்.

வெப்பமண்டலப் பகுதியான நம்முடைய சென்னையில் மற்ற கற்களை வீட்டில் பதிப்பதைவிட, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சிவப்புத் தரை அமைத்தால், வீடு ஏசி போட்டது போல் இருக்கும். இதன் ஒரு பகுதியாகத்தான் என்னுடைய வீட்டில் கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்ற கற்களுக்குப் பதிலாக வீட்டுக்குக் குளிர்ச்சி தரும் சிவப்புத் தரையை அமைக்கலாம் என முடிவுசெய்தேன்” என்கிறார்.

ஆனால், சிவப்புத் தரை அமைக்கும் கலைஞர்கள், அவ்வளவு எளிதில் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்காகத் தமிழகம் முழுவதும் சிவப்புத் தரை அமைக்கும் கலைஞர்களைத் தேடி அலைந்துள்ளார். தன்னுடைய தேடலில் கிடைத்த கலைஞர்கள் அனைவரையும் ‘கற்றல் கூடம்’ அமைப்பு வழியாக ஒன்றிணைத்துள்ளார். குறிப்பிட்ட தலைமுறையினருடனேயே நின்றுவிட்ட சிவப்புத்தரை அமைக்கும் கலையைப் பயிலரங்குகள் மூலமாக இன்றைய இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்திவரும் பணியை திருபுரசுந்தரி செவ்வேளும் ஐயனாரும் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் முன்பு அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டிருந்த சிவப்புத் தரை, தற்போது திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கன்னியாகுமரி போன்ற ஒரு சில பகுதிகளில் உள்ள பாரம்பரிய வீடுகளில்தான் காணப்படுகிறது. ஆனால், இந்தச் சிவப்புத் தரை கேரள மாநிலத்தில் பல வீடுகளில் காணப்படுகிறது.

மிருதுவான மணலில் ஐந்து சதவீதம் சிமெண்ட் கலவை சேர்த்து, அத்துடன் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வண்ணங்களைச் சேர்த்து சிவப்புத் தரை அமைக்கப்படுகிறது.இதற்காகவே தன்னுடைய ‘கற்றல் கூடம்’ அமைப்பில் சிவப்புத் தரை அமைக்கும் அறுபது கலைஞர்களுடன் பணிபுரிந்து வருகிறார் ஐயனார்.

“சிவப்புத் தரை முழுவதுமாக இயற்கை முறையில் அமைக்கப்படும்.தொடக்கத்தில் இருந்தே சிவப்பு நிறம் பயன்படுத்துவதால் இதற்குச் சிவப்புத் தரை எனப் பெயர் வந்துள்ளது. ஆனால், சிவப்பு வண்ணம் மட்டுமல்லாது மஞ்சள், நீலம், பச்சை, கறுப்பு போன்ற வண்ணங்களிலும் சிவப்புத் தரையை அமைத்துக் கொடுக்கிறோம். இதற்காகக் காய்கறிகள், மஞ்சள், இலை ஆகியவற்றிலிருந்து வண்ணங்களைத் தயாரிக்கிறோம்.

சிவப்புத் தரை அமைக்க ஓர் அறைக்கு இரண்டு நாட்கள். ஆனால், தரையை இழுத்த பிறகு, அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு வாரங்கள் காயவைக்க வேண்டும். அதன்பிறகு தேன்மெழுகு (Bee Wax), தேங்காய் நாரைக்கொண்டு சிவப்புத் தரையை பாலீஷ் செய்ய வேண்டும். இயந்திரம் மூலமாகச் செய்யப்படும் பாலீஷ் இந்தத் தரைக்கு உகந்தது அல்ல” என்கிறார் ஐயனார்.

நல்ல தண்ணீர் அவசியம்

கிரானைட், மார்பிள் போன்ற கற்களில் வழுவழுப்புத் தன்மை அதிகமாக இருக்கும். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் எளிதில் வழுக்கி விழுந்துவிடுவார்கள். ஆனால், சிவப்புத் தரையில் பாலீஷ் போட்டாலும் வழுவழுப்புத்தன்மை இருக்காது. அதேநேரம், தரை பளபளப்பாகத் தெரியும். புதிய வீடு கட்டுபவர்கள் ஓர் அடிக்கு சிமெண்ட் தரைத்தளம் அமைத்து, அதன்மேல் மிருதுவான சிவப்புத் தரையை இழுத்து சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய வண்ணங்களில் வேண்டிய வடிவங்களை அமைத்துக்கொள்ளலாம்.

சிவப்புத் தரை இழுக்க மிக முக்கியமாகத் தேவைப்படுவது தண்ணீர்தான். ஒருவேளை கட்டுமானம் செய்யும் இடத்தில் உப்புத் தண்ணீர், கலங்கலான தண்ணீர் இருந்தால் அங்கே சிவப்புத் தரை அமைப்பது கடினம். ஆழ்துளைத் தண்ணீராக இருந்தாலும், அதில் உப்புத்தன்மை இல்லாமல் இருந்தால் நல்லது.

“சிவப்புத் தரை இழுக்க முக்கியத் தேவை நல்ல தண்ணீர்.அப்போதுதான் சிவப்புத் தரையில் எதிர்காலத்தில் விரிசல் விழாமல் இருக்கும். உப்பு, கலங்கலான தண்ணீரைப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தரையில் விரிசல் விட சாத்தியம் அதிகரிக்கும். கிரானைட், மார்பிள் கற்களுக்குச் செலவு செய்யும் தொகையைவிடச் சிவப்புத் தரை அமைப்பதற்குத் தொகை குறைவு. நேர்த்தியான சிவப்புத் தரை அமைக்க அந்தப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ள கலைஞர்களால் மட்டும்தான் முடியும்” என்கிறார் திருபுரசுந்தரி.

துரித உணவைப் போன்று இன்றைக்குக் கட்டுமானத் துறையில் துரிதக் கட்டுமானப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நம்முடைய கனவு இல்லங்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பல பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்குகின்றன. இந்தப் பின்னணியில், “இயற்கைக்குப் பாதிப்பில்லாத ஆரோக்கியமான கட்டுமானங்களே இன்றைய தேவை” எனும் திருபுரசுந்தரி செவ்வேளின் வார்த்தைகள் உண்மையானவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

54 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்