வெறும் சுவர் அல்ல 14: கான்கிரீட்டுக்கு நீராட்டுதல்

By எம்.செந்தில்குமார்

கான்கிரீட் இட்ட பின்பு அது தன் முழுமையான வலிமையை அடைவதற்காகத் தொடர்ந்து தண்ணீர் நிறுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருப்பதைத்தான் நீராட்டுதல் (CURING) என்கிறோம். 

கான்கிரீட் என்ற முழுமையான வடிவம் பெற நாம் சிமெண்ட், மணல், மற்றும் ஜல்லி இவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து நீர், சிமெண்ட் விகிதத்திற்கு (WATER CEMENT RATIO) ஏற்ப சரியான அளவு தண்ணீர் சேர்த்து நமக்குத் தேவையான இடத்தில் இடுகிறோம். ஆனால், இந்தக் கலவை முழுமையாக நாம் எதிர்பார்க்கும் வலிமையோடு உருவாக கான்கிரீட்டின் வெளிப்புறத்தில் நீர் நிறுத்தி அதன் வெப்பநிலையை முறைப்படுத்த வேண்டும்.

நாம் கடந்த வாரக் கட்டுரைகளில் பார்த்தபடி கான்கிரீட் கலவையில் வேதிவினை நடைபெற்று பசை உருவாகிறது .இந்த நிகழ்வில் தேவையான அளவு ஈரத்தன்மையுடன் கான்கிரீட் இருக்க வேண்டியது அவசியம். நீர் சிமெண்ட் விகிதம் இந்த அடிப்படையில்  மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வெப்பநிலையை முறைப்படுத்துதல் இந்த வேதிவினையில் முக்கியமானது. வெளிப்புறச் சுற்றுச்சூழல் வெப்பநிலை இந்தச் செயலைப் பாதிக்காத வண்ணம் நாம் முறைப்படுத்த இப்படித் தண்ணீர் நிறுத்துகிறோம்.

தண்ணீர் நிறுத்தாவிட்டால் வெளிப்புறத்தில் மெல்லிய பிளவுகள் தோன்ற வாய்ப்புள்ளது. இது கான்கிரீட்டின் மேற்புற உறுதித்தன்மை மற்றும் அதன் ஒட்டுமொத்த வலிமை இரண்டையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

மேற்கூரை நீராட்டுதல்

மேற்கூரைக்கு முறைப்படி நீர் நிறுத்தி வைக்க சிமெண்ட் கலவையால் பாத்திகட்டிவைப்பது நடைமுறையில் உள்ள வழக்கம். இந்தப் பாத்தி கட்டி வைப்பதை மேற்கூரையின் விளிம்பு வரை செய்யாமல் அரை அடி முதல் ஒரு அடி வரை உட்புறம் தள்ளி இந்தப் பாத்தி கட்டி வைக்கப்படுகிறது. இது தவறான முறை. இப்படிச் செய்வதால் பாத்தி கட்டப்படாத ஓரப்பகுதி முழுமையாக ஈரப்பதம் எட்டாத சூழலை அடைகிறது. இதைக் கவனிக்க வேண்டும்.

மேலும் வெளிப்புறத்தில் நாம் பீம் (BEAM) அமைத்து கான்கிரீட் கூரை இடுகிறோம். கான்கிரீட் இட்ட மறுநாள் இந்த வெளிப்புறத்தில் உள்ள பலகைகளைப் பிரித்து விடுகிறோம். அவ்வாறு பிரிப்பது சரியான முறைதான். அதில் தவறு ஏதுமில்லை. ஆனால், அந்த வெளிப்புறத்தையும் நாம் முறைப்படி ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். அதை எவ்வாறு செய்வது என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழலாம். விளிம்புப் பகுதிகளில் சணல் சாக்குகளை விரித்து வைத்து அதை நீராட்டுவதன் மூலமாக அந்த வேலையை நாம் செய்ய முடியும். மேற்கண்ட முறைப்படி நாம் படிக்கட்டு கான்கிரீட் பகுதிகளையும் முறையாக சணல் சாக்குகள் கொண்டு நீராட்டலாம்.

காலம் நீராட்டுதல்

மேற்கூரைக்கு நீர் நிறுத்தி வைப்பதைப் போலவே காலம் கான்கிரீட்டுக்கு முறைப்படி நீராட்டுதல் வெகு முக்கியம். ஈரத்தன்மையை நிலைநிறுத்தி வைக்கும்படியான சணலான சாக்குப்பைகளைச் சுற்றி வைப்பது பொதுவாகப் பயன்பாட்டில் உள்ளது. நாம் வைக்கோலையும் இதற்குப் பயன்படுத்தலாம். வைக்கோல் ஈரத்தன்மையைச் சிறப்பாக நிலை நிறுத்தி வைக்கும். நாம் வைக்கோலைக் காலத்தைச்  சுற்றி கட்டி வைப்பதன் மூலம் நீராட்டுதலைச்  சிறப்பாகச்  செய்யலாம்.

எவ்வளவு விரைவாக கான்கிரீட் வலிமை அடைகிறது?

நாம் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் போது கான்கிரீட் தன் உறுதித்தன்மையை அடைவது விரைவாக நடைபெறுகிறது. ஏழு நாட்களில் கிட்டத்தட்ட 65 சதவீதமும் மற்றும் 14 நாட்களில் 90 சதவீதமும் கான்கிரீட் தன் வலிமையைப் பெற்று விடுகிறது. 28 நாட்களில் அது 99 சதவீதமாக உயர்கிறது.

எத்தனை நாள் நீராட்டுதல் தேவை?

மேற்கூரை கான்கிரீட்டுக்குக் குறைந்த பட்சம் ஏழு முதல் பத்து நாட்கள் நீர் நிறுத்தி வைத்து கவனித்துக் கொள்வது உகந்தது. அந்த நாட்களில் அது தன் வலிமையை அடைந்துவிட்டால் பிறகு காலமெல்லாம் அது நம்மைத் தாங்கி நிற்கும்.

பொதுவான தவறு

மேற்கூரை கான்கிரீட் இட்ட பின்பு அதன் மீது நீர் நிறுத்திவைப்பது பாத்தி கட்டிய பின்பே செய்ய வேண்டும் என்பதற்காக அடுத்த நாள் காலையில் நீர் நிறுத்தும் முறையை நாம் பொதுவாகப் பல இடங்களில் பின்பற்றுகிறோம்.  ஆனால், கான்கிரீட் இட்ட ஒரு மணி நேரத்தில் நாம் நீர் தெளிக்கலாம். தோட்டத்தில் பயன்படுத்தப்படும் பூவாளியைக் கொண்டு நாம் இந்த அடிப்படை நீராட்டுதலைத் தொடங்கலாம். மிக வேகமான அழுத்தத்தில் நீர் பாய்ச்சுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி நாம் நீர் தெளிப்பதன் மூலம் கான்கிரீட்டின் மேற்புறம் சுருங்குவதால் ஏற்படும் விரிசல்களைத் (SHRINKAGE CRACKS) தவிர்க்கலாம்.

கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@honeybuilders.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்