வாடகைக்கு வீடு கிடைக்குமா?

By ந.வினோத் குமார்

மா

நகரங்கள் பலருக்கும் வாழ்க்கையைத் தருகின்றன. ஆனால், வீட்டைத்தான் தருவதில்லை. சொந்த வீடு என்பது பலருக்கும் கனவு. அது நிறைவேறாமல்கூடப் போகலாம். சோகம் என்னவென்றால், வாடகைக்கு வீடு கிடைப்பதே கடைசிவரை கனவாகிப் போய்விடுமோ எனும் நிலையில்தான் இன்று பலரை மாநகரம் வைத்திருக்கிறது.

வீடு கிடைக்கும் வரை படுகிற பாடுகள் ஒரு பக்கம் என்றால், வீடு கிடைத்தவுடன் வீட்டு உரிமையாளர்கள் படுத்துகிற பாடு இன்னொரு பக்கம். ‘அடிக்கடி ரிலேடிவ்ஸ் வரக்கூடாது’, ‘சுவத்துல ஆணி அடிக்கக் கூடாது’, ‘ராத்திரி துணி துவைக்கக் கூடாது’ என உரிமையாளர்கள் போடுகிற விதிகளை எல்லாம் கேட்டால், அந்த வீடு வாழ்வதற்கு அல்ல. வெறுமனே இருப்பதற்குத்தான் என்பது புரிந்துவிடும்.

இப்படியான அனுபவங்களைச் சந்திப்போருக்காகவே எழுதப்பட்டிருக்கிறது ‘வாடகையெனும் சமூகச் சிக்கல்’ எனும் புத்தகம். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பு.பா.சுரேஷ் பாபு இதை எழுதியுள்ளார். (பிறப்பொக்கும் நூற்களம், 32, எல்லையம்மன் கோயில் தெரு, ஊரூர் அடையறு, சென்னை-600 020. தொடர்புக்கு: 9500448127)

வாடகை வீடு தேடுவோர், வாடகை வீட்டில் வசிப்போர், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பேசுவதோடு, வாடகை வீடு தொடர்பான சட்டங்களையும் அந்தச் சட்டங்கள் மூலம் அவர்களின் சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி என்பதைப் பற்றியும் விரிவாக அலசுகிறார் நூலாசிரியர்.

வாடகைக்கு வீடு எடுக்கும்போது பின்பற்ற வேண்டிய ஒப்பந்த நடைமுறைகள் குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எல்லாம் இன்று எவ்வளவு தூரம் பின்பற்றப்படுகின்றன என்பது பெரிய கேள்விதான்.

அதேபோல, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வாடகை வீட்டில் வசிப்போர், அந்த வீட்டின் உரிமையாளர் ஆகியோருக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக தனியே ஒரு பிரிவு செயல்பட்டு வருவது பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

வாடகை வீடு தொடர்பான சட்டங்களை மீறும் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து வீடுகளை, மாவட்ட ஆட்சியர் கைப்பற்ற முடியும் என்றும், அப்படிக் கைப்பற்றப்பட்ட வீடுகள் குறித்த விவரங்களைப் பொது இடத்தில் அனைவருக்கும் தெரியும்விதத்தில் வைத்தால், வாடகை வீடு தேடுபவர்கள் தங்கள் தேவைக்கேற்ப எங்கெல்லாம் வீடுகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால், இடைத்தரகர்களின் தலையீடு வெகுவாகக் குறையும் என்றும் சொல்கிறார் நூலாசிரியர். ஆனால், அரசு இதைச் செயல்படுத்த முன் வருமா என்பதுதான் கேள்வி!

மீண்டும் வருமா சமத்துவபுரங்கள்?

நன்றாகப் படித்த, நல்ல வேலையில் உள்ள பலருக்கே அவர்களின் தேவைக்கேற்ப வீடு கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளன. வேலை செய்யும் நிறுவனத்துக்கு அருகிலேயே வீடு வேண்டும். அதுவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வாடகையில் வீடு வேண்டும். அப்படியே கிடைத்தாலும், ‘அதைச் செய்யாதீங்க, இதைச் செய்யாதீங்க’ என்று ‘கடி’க்காத வீட்டு உரிமையாளர்கள் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் பொருந்தி வருகிற பொருத்தம் நூற்றில் 5 பேருக்கு மட்டுமே நிகழ்கிறது.

இவர்களுக்கே இந்த நிலை என்றால், விளிம்பு நிலை மக்களான தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோரைப் பற்றி என்ன சொல்ல? அவர்களின் தேவைக்கேற்ப வீடுகள் கிடைக்கின்றனவா? கிடைத்தாலும் நிம்மதியாக வாழ வழி உண்டா?

இவற்றை யோசித்துத்தான் 1997-ல் ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் உள்ள 100 வீடுகளைப் பழங்குடிகள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் (40), பிற்படுத்தப்பட்டவர்கள் (25), மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (25) மற்றும் இதர வகுப்பினர்கள் (10) ஆகியோருக்குப் பிரித்து வழங்கப்பட்டன. பலரும் பயனடைந்த அந்தத் திட்டம், பின் வந்த அரசால் கைவிடப்பட்டது. அரசியலுக்கு எவையெல்லாம் பலியாகின்றன?

வாடகையைப் பொதுவில் வை!

பெரிய பெரிய ஷோரூம்களைக் கட்டி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வணிக நிறுவனங்கள், சரியான ‘பார்க்கிங்’ வசதிகளைச் செய்யாமல், தங்கள் கடைகளுக்கு முன்பு சாலையிலேயே வாகனங்களை நிறுத்தச் செய்கிற வழக்கம் (சென்னையில் அண்ணா சாலையில் இந்தக் காட்சியை நாள்தோறும் பார்க்கலாம்.), அதனால் ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவை குறித்துப் பேசும் நூலாசிரியர், ஒவ்வொரு இடத்துக்கும், அங்கு இருக்கும் வசதிகளுக்கும் ஏற்ப இருக்க வேண்டிய நியாயமான ‘பொதுவான வாடகைத் தொகைப் பட்டியலை’ அரசு வெளியிட்டால், அது பலருக்கும் நன்மை பயக்கும் என்கிறார்.

அப்படியொரு ‘பொது வாடகைத் தொகைப் பட்டியல்’ ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே இருந்திருந்தால், கடைசி வரை வாடகை வீட்டில் வாழ்ந்த பாரதி ‘காணி நிலம்’ கேட்டிருக்கமாட்டார் இல்லையா..?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்