வாழ்வதற்குச் சரிப்படுமா ஒத்தி வீடு?

By உமா

செ

ன்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் சொந்தமாக வீடு வாங்க முடியாத வாடகை வீட்டுக்காரர்கள் ஆண்டுதோறும் கணிசமான தொகையை வாடகைக்குச் செலவிடுகிறார்கள். அதேநேரம் சிலர் வீட்டு வாடகைக்குப் பதிலாக ‘லீஸ்’ எனப்படும் போக்கியம் அல்லது ஒத்திக்குப் போவதையும் நாடுகிறார்கள். லீஸ் வீடு சிறந்ததா?

புறநகர்ப் பகுதிகளில் வாடகை வீட்டில் இருந்து கொண்டு நகர்ப்பகுதிகளுக்கு அலுவலகம் செல்பவர்களுக்கு லீஸ் வீடு கிடைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. நகர்ப் பகுதிகளைவிடப் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான வீடுகள் லீஸுக்கு கிடைக்கின்றன. குறிப்பிட்ட தொகையை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்து விட்டு, அதற்கான ஒப்பந்தத்தைப் போட்டவுடனேயே, அந்த வீடு நமக்குச் சொந்த வீடு போன்ற தோற்றத்தை மாற்றுவது சாதகமான விஷயம். ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை வாடகையாகக் கொடுப்பதிலிருந்து விடுதலையும் கிடைத்துவிடும்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களும் நிறைய இருக்கின்றன. முதலில் வீட்டின் வசதி வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அந்த வீட்டில் நாம் எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்த பின்னரே, வீட்டை லீஸுக்கு எடுக்க வேண்டும். பொதுவாக எல்லாருமே 11 மாதங்கள் என்ற அளவில்தான் லீஸ் ஒப்பந்தம் போடுவார்கள். 11 மாதங்கள் முடிந்த பின்னர், இரு தரப்பும் விரும்பினால், ஒப்பந்தத்தை மேலும் 11 மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். அந்த நேரத்தில் சில வீட்டின் உரிமையாளர்கள் லீஸ் தொகையை அதிகரித்துக் கேட்கவும் செய்வார்கள். அப்போது லீஸ் எடுப்பவர் விரும்பினால், அதே வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால், லீஸ் தொகையை முழுமையாகப் பெற்றுக்கொண்டு வேறு வீட்டை லீஸுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

லீஸ் வீட்டில் சாதகமான விஷயம் என்னவென்றால், வாடகை செலுத்த வேண்டியதில்லை. லீஸ் எடுத்தவருக்கு, 11 மாதங்களுக்குப் பிறகு வாடகைத் தொகை மிச்சமாகும். உதாரணமாக ஆறாயிரம் ரூபாய் வாடகை செலுத்தும் நபர், அந்த வீட்டை லீஸுக்கு எடுக்கும் பட்சத்தில், அவருக்கு 11 மாதங்களில் சுமார் 66 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும். அந்த வீட்டுக்கு 3 லட்சம் ரூபாய் லீஸ் தொகையாகக் கொடுத்திருந்தால், வாடகை செலுத்தாத காரணத்தால் மீதமான 66 ஆயிரம் ரூபாய், பெரிய சேமிப்பாகவே கருதலாம்.

சிலர் தொடர்ந்து லீஸ் வீட்டில் இருந்தால், மிச்சமாகும் ஆறாயிரம் ரூபாயைச் சேமித்து, ஓரிரு ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்தி, வேறொரு வீட்டை லீஸுக்கு எடுத்து மாறிக் கொள்ளலாம். எனவே, வாடகைத் தொகையைச் சேமித்து லீஸ் தொகையை அதிகரிப்பதன் மூலம், மூலதனம் அதிகரிப்பதுடன், பின்னாளில் அதைக் கொண்டே புதிய வீட்டை வாங்குவதற்கான முன்பணமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதால் பல்வேறு சாதகங்கள் இருந்தாலும், சில பாதங்களும் உண்டு. ஆனால், லீஸ் எடுக்கும்போது போடப்படும் ஒப்பந்தத்தைச் சரியாக வடிவமைத்துக் கொண்டால், பல பிரச்சினைகளை லீஸ் எடுப்பவர்கள் தவிர்க்கலாம். உதாரணமாக, லீஸ் ஒப்பந்தம் போடும்போதே, வீட்டுக்கு வெள்ளையடிப்பது, வீட்டின் பராமரிப்புச் செலவு ஆகியவற்றுக்கு வீட்டின் உரிமையாளரே பொறுப்பு எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும், வீட்டைக் காலி செய்ய விரும்பினால், இரு தரப்பும் எத்தனை மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். வீட்டின் உரிமையாளருக்கு வீடு தேவைப்படும் பட்சத்தில், லீஸுக்கு இருப்பவர் சுமார் 3 மாதங்கள்வரை கால அவகாசம் கேட்டு காலி செய்யலாம். அதேபோல், வீட்டை லீஸ் எடுத்தவருக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில், பணத்தைத் திருப்பித் தர, வீட்டின் உரிமையாளர் 3 மாதங்கள் அவகாசம் கோரலாம். இதுதான் பரஸ்பர லீஸ் ஒப்பந்தமாக இருந்து வருகிறது. ஒத்திக்குத் தேவைப்படும் பணத்தை ஒரே சமயத்தில் புரட்டுவது சற்றுக் கடினமாக இருக்கும். அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், கணிசமான வட்டித் தொகை கிடைக்கும். ஒத்தியில் அப்படியெல்லம் எதிர்பார்க்க முடியாது அல்லவா?

வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும்போது, ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட முடியும். ஆனால், லீஸுக்கு வீடு எடுக்கும் பட்சத்தில், அதுபோல் எளிதாக மாறுவதில் சிக்கல்கள் உண்டு. எனவே, ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு முன்பாக ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து விட்டே முடிவு செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

21 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

47 mins ago

க்ரைம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்