பெண் குழந்தை போற்றுவோம்: பெண் குழந்தை பிறந்தால் பரிசு!

By என்.முருகவேல்

“அடுத்தவன் வூட்டுக்குப் போற பொம்பள புள்ளையப் பெத்துட்டு, அதுக்குக் காலம் முழுக்கக் காவலா இருக்க முடியும்? பெத்தோம், கட்டிக் கொடுத்தோம்ன்னு இல்லாம, அதுகளைப் படிக்க வச்சு, நகை நட்டுப் போட்டுக் கட்டிக் கொடுக்க நாங்க எங்கே போறது? அதான் கலைச்சிப்புடறது” என்று சொன்ன தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்த சின்னாயியும், “பொண்ணுங்க வீட்ல இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. வெளியில் போனாலும் பாதுகாப்பு இல்லை. அதுக்குப் பயந்துகிட்டு எங்க ஊரில் பாதிப் பேரு பொண்ணுன்னு தெரிஞ்சாலே கலைச்சிடறாங்க” என்ற எம்.பட்டியைச் சேர்ந்த வினோதினியும் இன்று தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விருத்தாசலம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் கருக்கலைப்பின் கரும்புள்ளி கிராமங்களாக விளங்கின. மங்கலம்பேட்டை, மங்களூர், முகாசா பரூர், எம்.பட்டி, எறுமனூர், தொட்டிக்குப்பம், மு.அகரம், எடச்சித்தூர், மாத்தூர் உள்ளிட்டக் கிராமங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் சராசரிக்கும் குறைவாக இருந்தது. 1000 ஆண்களுக்கு 983 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை கிராமங்களில் ’மக்கள் கருத்தொளி இயக்கம்’ மூலம் சில ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்தி வந்தது. பெண் குழந்தைகள் பிறப்பைத் தடுக்கும் முக்கியக் காரணிகளைக் கண்டறிந்து, முதல்கட்டமாக 6 ஸ்கேன் மையங்களை மூடியிருக்கிறது. வரதட்சிணை, பெண் மீதான அடக்குமுறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

பெண் குழந்தை வளர்ப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளைப் போக்கி, பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்!’ என்ற மத்திய அரசின் திட்டம் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியை, பெண் குழந்தை தினமாகக் கொண்டாடி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு உபகரணங்கள், மத்திய அரசின் ஜனனி சுரக் ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 700 ரூபாயும், தாயின் பங்களிப்புடன் கூடிய செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்கையும் ஆரம்பித்துக் கொடுக்கின்றனர். பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழையும் ஒரு மரக்கன்றையும் வழங்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிராமங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 5 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். பெண்களைக் கொண்டாடும் மாவட்டமாகக் கடலூர் மாறும் காலம் தொலைவில் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

40 mins ago

விளையாட்டு

57 mins ago

ஜோதிடம்

49 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

55 mins ago

மேலும்