களம் புதிது: அரசு அதிகாரத்தின் பெண் முகம்!

By டி.செல்வகுமார்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரே, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளரின் பணிகள் என்ன?

ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர் (சட்டமன்ற கட்சித் தலைவர்) முதல்வராக இருப்பார். அந்த மாநிலத்தை நிர்வாக ரீதியாக ஆள்பவர் தலைமைச் செயலாளர்தான். இவரது நேரடிக் கட்டுப்பாட்டில்தான் மாநிலக் காவல் துறை, ஒட்டுமொத்த அரசு நிர்வாகம், அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு, நிதி மேலாண்மை போன்றவை இயங்கிவருகின்றன.

அரசின் கொள்கை முடிவுகளை நிர்வாக ரீதியாக நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதைத் தீர்மானிப்பது தலைமைச் செயலாளர்தான். மாநில சட்டப் பேரவையில் புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியப் பொறுப்பு தலைமைச் செயலாளருக்குத்தான் உண்டு. அரசுத் திட்டங்களை அந்தந்தத் துறைகளின் செயலாளர்கள் உரிய முறையில் நிறைவேற்று கிறார்களா, திட்டப் பலன்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அவ்வப்போது துறைச் செயலாளர்களின் ஆய்வுக் கூட்டம் நடத்தி தலைமைச் செயலாளர் உறுதி செய்வார்.

உள்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறன்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பும் தலைமைச் செயலாளருக்குத்தான் இருக்கிறது.

ஒரு திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக அம்சங்கள், அவற்றுக்கான நிதி ஆதாரம், நடைமுறைப் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் முதல்வருக்குத் தலைமைச் செயலாளர்தான் எடுத்துரைக்க வேண்டும். மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பது குறித்தும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச்சர்களால் பிரச்சினை ஏற்பட்டால் அது குறித்து முதல்வர் கவனத்துக்கு தலைமைச் செயலாளர்தான் கொண்டு செல்வார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தவறு செய்யும்போது முதல் கட்ட விசாரணை நடத்தப்படும். அதில் தவறு செய்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானால் ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருக்கும் தலைமைச் செயலாளர்தான் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார். அது தொடர்பான அறிக்கை அவருக்கே (தலைமைச் செயலாளர்) வரும். பின்னர் மாநில அரசை நிர்வாகம் செய்யும் தலைவர் என்ற முறையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.

பணியில் இருக்கும்போதே பட்ட ஆய்வு

கிரிஜா வைத்தியநாதன் 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.எஸ்சி. இயற்பியல் பட்டம் பெற்ற அவர், 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். 1983-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், நிதித்துறை சிறப்புச் செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பணியில் இருந்தபோதே 2011-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் நல்வாழ்வுப் பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.எச்டி பட்டம் பெற்றார். 2013-ம் ஆண்டு நில நிர்வாக ஆணையராகப் பணியாற்றினார். 2014-ம்

ஆண்டு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போது புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

20 mins ago

ஓடிடி களம்

34 mins ago

க்ரைம்

52 mins ago

ஜோதிடம்

50 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

59 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்