கும்பக்குடி இப்போ குந்தன் குடி

By கல்யாணசுந்தரம்

கும்பக்குடி என்ற பெயரையே குந்தன்குடி என்று மாற்றும் அளவுக்கு குந்தன் நகைகள் அதிகமாகச் செய்யப் படுகின்றன கும்பக்குடி கிராமத்தில்.

திருச்சி அருகே துப்பாக்கித் தொழிற்சாலை செல்லும் வழியில் உள்ளது கும்பக்குடி கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், மகளிர் சுய உதவிக் குழு மூலமாகக் குந்தன் நகைகளை உற்பத்தி செய்துவருகின்றனர்.

இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கிறவர் சுமதி. குடும்ப வருமானத்தை உயர்த்த ஏதேனும் கைத்தொழில் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்த சுமதிக்கு 2005-ம் ஆண்டு திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கவரிங் மற்றும் குந்தன் நகைகள் தயாரிப்பதற்கான பயிற்சி கைகொடுத்திருக்கிறது. அதில் தனது தோழிகளுடன் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார்.

பாதை தந்த பயிற்சி

பயிற்சியை முடித்ததும் இதைத் தொழிலாகவே மேற்கொண்டால் என்ன என்ற எண்ணம் சுமதிக்கு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ள ஐந்து பெண்களுடன் இணைந்து ஆளுக்கு 500 ரூபாய் போட்டு நகைகளுக்கான மூலப்பொருள்களை வாங்கி தொழிலைத் தொடங்கியுள்ளனர்.

தாங்கள் தயாரித்த நகைகளை திருச்சியில் உள்ள ஃபேன்சி கடைகளுக்கு விற்பனை செய்ய எடுத்துச் சென்ற போதுதான் சந்தைப்படுத்துவதில் பிரச்சினையைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அதையும் சமாளித்து மீண்டிருக் கிறார்கள். அந்த வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் சுமதி.

“தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்துகொண்டே செல்வதாலும், அதை அணிந்து செல்வதில் பாதுகாப்பு இல்லாததாலும் பெண்கள் அதிக அளவில் குந்தன் நகைகள், கவரிங் நகைகளை விரும்புகின்றனர்.

மேலும், குறைந்த விலையில் நிறைய டிசைன் நகைகளை வாங்க லாம். பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றம் தருவதால் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கும் இதுபோன்ற நகைகளை அணிந்து செல்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்தும், அவர்கள் நினைக்கும் வகையிலும் நகைகளைச் செய்து தந்தால், அதைச் சந்தைப்படுத்துவதில் பிரச்சினை இருக்காது. இதைத்தான் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்” என்கிறார் சுமதி.

கைகொடுக்கும் கண்காட்சிகள்

மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 20 பெண்கள் இணைந்து குந்தன் நகை தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலகின் ஒத்துழைப்போடு வங்கிக் கடன் பெற்று, தங்கள் வியாபாரத்தை விஸ்தரித்திருகிறார்கள். இந்தத் தொழிலில் போதுமான வருமானமும் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

மகளிர் சுய உதவிக் குழு மூலம் நடத்தப்படும் கண்காட்சிகளில் தொடர்ந்து அரங்குகள் அமைத்ததும், கல்லூரிகளில் நடத்தப்பட்ட கண்காட்சி களும் தங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்ததாகச் சொல்கிறார்கள்.

“மாணவிகளின் விருப்பத்துக்கு ஏற்ப நவீன டிசைன்களில் நகைகளைச் செய்தோம். எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த பணிகளைச் செய்யக் கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளனர்.

நகைகள் செய்ய சென்னை, மதுரை, ஐதராபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேவையான மூலப்பொருள்களை வாங்கி வருகிறேன்.

மகளிர் திட்டத்தின் மூலம் திருச்சி மட்டுமல்லாது சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழு பெண்களுக்குக் குந்தன் நகை தயாரிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்துள்ளேன்” என்று சொல்லும் சுமதி, ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பின் செயலராக இருக்கிறார்.

பெருமித வருமானம்

“எங்கள் ஊராட்சியில் மட்டும் 30 குழுக்கள் உள்ளன. இவர்களுக்குத் தேவையான பல்வேறு தொழில் பயிற்சிகள், கடனுதவிகள் பெற்றுத் தருகிறோம். அதிகபட்சமாக இரண்டு கோடி அளவுக்குக் கடன் பெற்று முறையாக திரும்பச் செலுத்தியுள்ளோம். எங்களுடன் பணிபுரியும் பெண்கள் மாதத்துக்குக் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு வருமானம் பெறுகின்றனர்” என்கிறார் பெருமிதத்துடன்.

வேலையில்லை என்று புலம்புவதைவிட, கிடைக்கிற சிறு வாய்ப்பை வைத்தே முன்னேற முடியும் என்பதற்குக் கும்பக்குடி கிராமப் பெண்கள் நல்ல முன்னுதாரணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

ஓடிடி களம்

25 mins ago

க்ரைம்

43 mins ago

ஜோதிடம்

41 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

50 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

58 mins ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்