தேர்தல் பெண்கள்: முதல் பெண் தலித் அமைச்சர்

By ஆதி

தமிழக அரசியல் வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இடம்பெற்று, தலித் மக்களுக்காக ஒலித்த முதல் பெண் குரல் சத்தியவாணி முத்துவினுடையது. 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அந்தக் கட்சியின் உறுப்பினராக அவர் இருந்துவந்தார். குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்றிருக்கிறார். தொடர் கட்சிப் பணிகளின் அடுத்த கட்டமாக, தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு

1957 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு தி.மு.க. சார்பில் இரண்டு முறை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அண்ணா தலைமையிலான தி.மு.க.வின் முதல் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சராகப் பதவி வகித்தார். அதற்குப் பிந்தைய கருணாநிதி ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகத் தொடர்ந்தார். அவரது காலத்தில்தான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பெண்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அவரது பதவிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் கவனம் செலுத்தினார்; தமிழகம் முழுவதும் 200 குழந்தை நல மையங்களும், மாவட்டச் சமூகநல மையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு வேலையும், கல்வியும் வழங்கப்பட்டன. 1970-ல் பெண்களுடைய சிறுசேமிப்புக்குப் பெரும் ஊக்கமளித்தார். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டினார்.

இடப்பெயர்வு

1973-ல் அவரது முயற்சியில்தான் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 508 மாணவர் விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டன. நல்ல நோக்கத்துடன் அவை ஆரம்பிக்கப்பட்டாலும், இன்றைக்கு அவை போதுமான அடிப்படை வசதிகளும் பராமரிப்பும் இன்றி இருப்பது அலட்சியத்துக்கான அடையாளம்.

இப்படித் தாழ்த்தப்பட்டோர், பெண்கள், மாணவர்கள் நலனில் தொடர்ச்சியான அக்கறையை வெளிப்படுத்திவந்தார் சத்தியவாணி முத்து. அதேநேரம் 1974-ல் கருணாநிதி ஆட்சியின் அமைச்சர் பதவியைத் துறந்து, கட்சியை விட்டும் விலகினார். ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி அவர் நடத்திவந்தாலும், 1977 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வென்ற பிறகு, அந்தக் கட்சியுடன் தா.மு.க. இணைக்கப்பட்டது.

அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு போட்டியிட்ட 1977, 1984 சட்டப்பேரவை தேர்தல்களில் அடுத்தடுத்துத் தோற்றாலும், இடைப்பட்ட காலத்தில் அக்கட்சியின் சார்பாக மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் காலத்தில் நாடாளுமன்றத்தின் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலக் குழு, வரதட்சிணைத் தடுப்பு, மதுவிலக்குச் சட்டங்களை அமல்படுத்தும் குழுக்களில் இடம்பெற்றுத் தன் கருத்துகளைத் தைரியமாக முன்வைத்தார்.

1979-ல் சரண் சிங் தலைமையிலான மத்திய ஆட்சியில் சத்தியவாணி முத்து அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவரும் காரைக்காலைச் சேர்ந்த அரவிந்த பாலா பழனூரும் மத்திய அமைச்சரவையில் முதன்முதலாக இடம்பெற்ற திராவிடக் கட்சி ஒன்றைச் சேர்ந்த அமைச்சர்கள் என்ற பெருமையையும் பெறுகிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் சார்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று, பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்திய வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்குத் தொடர்ச்சியாகப் பங்களித்த வகையிலும் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத முகம் சத்தியவாணி முத்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

25 mins ago

க்ரைம்

29 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

39 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்