ஆம், அது கொல்லப்படுவதில்லை!

By ஆசை

பிரபல இந்தியவியல் அறிஞரான மிர்சா அலியாதெ 1933-ல் எழுதிய ‘மைத்ரேயி’ என்ற ரொமேனிய மொழி நாவலுக்கும் 1974-ல் வங்க மொழியில் மைத்ரேயி தேவி எழுதிய ‘கொல்லப்படுவதில்லை’ (ந ஹன்யதே) நாவலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இரண்டு நாவல்களும் ஒரு காதல் கதையின் இரண்டு பக்கங்களைச் சொல்பவை. முதல் நாவலுக்குக் கொடுத்த பதிலடியாகவும் இரண்டாவது நாவலைக் கருதலாம். இந்த நாவல்கள் 41 ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை என்பது கூடுதல் கவர்ச்சியையும் மர்மத்தையும் அளிக்கிறது.

சம்ஸ்கிருதமும் இந்தியத் தத்துவமும் கற்பதற்காக 1928-ல் இந்தியாவுக்கு வந்த மிர்சா அலியாதெ, பிரபல இந்தியத் தத்துவவியல் அறிஞரான சுரேந்திரநாத் தாஸ் குப்தாவிடம் மாணவராகச் சேர்கிறார். 1930-ல் மிர்சாவைத் தன் வீட்டிலேயே தங்கவைத்து, சொல்லிக்கொடுக்கிறார் சுரேந்திரநாத். சுரேந்திரநாத்தின் மனைவியும் மிர்சாவைத் தன் மகன்போல பாவித்து அன்பு காட்டுகிறார். ஆனால், மிர்சாவுக்கும் சுரேந்திரநாத்தின் மூத்த மகள் மைத்ரேயி தேவிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்தக் காதல் விவகாரம் வெளிப்பட, சுரேந்திரநாத், மிர்சாவைத் துரத்திவிடுகிறார். துரத்தப்பட்ட மிர்சா காதல் வலி தாங்காமல் கொஞ்ச நாள் இமயமலையில் திரிகிறார். கிட்டத்தட்ட துறவியாகவே ஆகிவிடுகிறார். அதற்குப் பிறகு தனது சொந்த நாட்டுக்குத் திரும்பும் மிர்சா நாவல்கள் எழுதுகிறார். அவரது இரண்டாவது நாவல் ‘மைத்ரேயி’, அவருக்கும் மைத்ரேயிக்கும் இடையிலான காதலை அடிப்படையாகக் கொண்டது. காதலை மட்டும் சொன்னால் பரவாயில்லை, இருவருக்கும் இடையே உடலுறவு நிகழ்ந்தது என்று மிர்சா எழுதியிருப்பது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு நாவல் உருவாகக் காரணமானது.

இனி மைத்ரேயியின் பக்கம். 16 வயது பெண்ணான மைத்ரேயி, ரவீந்திரநாத் தாகூரின் சிஷ்யை. அந்த இளம் வயதிலேயே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருப்பவர். மிர்சா மீது தான் கொண்டிருந்த காதலை அந்தப் பருவத்தின் விளைவு என்றுதான் மைத்ரேயி அப்போது நினைத்தார். மிர்சா துரத்தப்பட்ட பிறகுதான் தன் காதலின் ஆழத்தை அவர் உணர்ந்தார். எனினும், காலப்போக்கில் அவருடைய காதல் அவருடைய அடிமனதில் போய்ப் புதைந்துகொண்டது. ஒருசில ஆண்டுகளில் அவருக்குத் திருமணம் நடக்க, கணவருடன் அமைதியான இல்லற வாழ்வு தொடங்குகிறது. இரண்டு குழந்தைகள், வசதியான வாழ்க்கை. பிரச்சினைகள் ஏதுமில்லையென்றாலும் தனிமை உணர்வு வதைக்கிறது. மிர்சா எழுதிய நாவலைப் பற்றி மைத்ரேயி தனது தந்தை மூலம் 1930-களின் இறுதியில் கேள்விப்படுகிறார். எனினும் நாவலின் உள்ளடக்கம் குறித்து அப்போது விரிவாக அறிந்துகொள்ளவில்லை. 1972-ல் இந்தியாவுக்கு வந்த மிர்சாவின் நண்பர் ஒருவர் மூலமாக நாவலில் வரும் ‘உடலுறவு சம்பவம்’ பற்றித் தெரிந்துகொண்டு ஆவேசமடைகிறார். அவருடைய நண்பர் ஒருவரின் மூலம் பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கச் செய்து வாசித்துப் பார்த்து மேலும் கோபமடைகிறார். நடக்காத ஒரு விஷயத்தைப் பரபரப்புக்காக மிர்சா எழுதியதை நினைத்துக் குமுறுகிறார். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக மிர்சா மீதான கோபம் குறைந்து, 16 வயதில் தான் கொண்டிருந்த காதலை நோக்கி மனது திரும்புகிறது. அதுவரை ஆழ்மனதில் புதைந்து கிடந்த அந்தக் காதல், மனதின் மேல்தளத்துக்கு வருகிறது. அது மைத்ரேயியின் காதல் அல்ல, மிர்சா மீது கொண்டுள்ள காதல் அல்ல. அது காதல் மட்டுமே. தூய்மையான, உடலற்ற, அழிவற்ற காதல். கொல்லப்படும் உடலில் கொல்லப்பட முடியாத ஆன்மாவாய் இருக்கும் காதல். அந்தக் காதலைக் கண்டடைகிறார் மைத்ரேயி. அப்போது அவருக்கு வயது 60-ஐ நெருங்கிவிட்டது. தன் கணவரிடம் இந்த உணர்வுகளைப் பற்றிச் சொல்கிறார். தனது மனதின் குரலுக்கு மைத்ரேயி செவிமடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, மிர்சாவைப் போய்ப் பார்க்கச் சொல்கிறார் கணவர்.

அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் மிர்சா பேராசிரியராக இருந்தார். மிர்சாவைச் சந்திப்பதற்காக அந்தப் பல்கலைக்கழகத்தில் தாகூரைப் பற்றிய உரையொன்றுக்கு ஏற்பாடு செய்துகொள்கிறார் மைத்ரேயி. மிர்சாவின் அலுவலகத்துக்குள் நுழையும் மைத்ரேயி மிர்சாவை அழைக்கிறார். மைத்ரேயியின் வருகை பற்றி ஏற்கெனவே அறிந்துகொண்டிருந்த மிர்சாவுக்கு உடல் நடுங்குகிறது. திரும்பிப் பார்க்காமலேயே பேசுகிறார். திரும்பிப் பார்த்தபோது அந்தக் கண்களில் ஒளியே இல்லை. தனக்கு ஒரு மனைவி இருக்கிறார் என்று தடுமாற்றத்துடன் பேசும் மிர்சா, மைத்ரேயியை கங்கைக் கரையில் வந்து சந்திப்பதாகவும், அங்கே தனது காதலின் உண்மையான வடிவத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார்.

மைத்ரேயி இந்தியாவுக்கு வந்த பிறகு, 16 வயதில் தொடங்கும் தனது காதலிலிருந்து 60 வயதில் காதலை மறுகண்டுபிடிப்பு செய்து, அதன் தொடர்ச்சியாக மிர்சாவைச் சந்திக்கச் சென்று ஏமாற்றமடைந்ததுவரை சுயசரிதை நாவலாக வங்க மொழியில் எழுதி வெளியிடுகிறார். அந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. அவரே அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார். 1994-ல் மிர்சாவின் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பையும், மைத்ரேயி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒரே நேரத்தில் சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டது.

இரண்டு நாவல்களையும் வைத்துத் தற்போது பார்க்கும்போது உணர்ச்சி, கலைத்தன்மை, உண்மை ஆகியவற்றில் மைத்ரேயி தேவியின் நாவலே உயர்ந்து நிற்கிறது. மிர்சாவின் நாவல் கலைத்தன்மை கைகூடாத ஒரு ரொமான்டிக் நாவலாகவே மிஞ்சுகிறது. காதலின் தூய நிலையை நோக்கிச் சென்று அதை தரிசித்து அழிவற்ற அதன் தன்மையை உணர்ந்து சொன்னதன் மூலம் மைத்ரேயியின் நாவல் அழிவற்ற நிலையை அடைந்துவிட்டிருக்கிறது.

16 வயது பெண்ணாக இருந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை 60 வயதில் நினைவுகூர்வது மட்டுமல்ல, அப்படி நினைவுகூர்வதன் மூலம் தற்போது அவருக்கு ஏற்படும் காதலின் தளும்பல்கள் பிரதியில் அவருடைய வயதை மறைக்கின்றன. படிப்பவர் ஓர் ஆண் என்றாலும் அவருடைய இளம் வயதுக் காதலை, நிறைவேறாத காதலை சமூகம், வயது, பாலினம், பாலியல் ஈர்ப்பு, திருமண எல்லைகளின் நிர்ப்பந்தங்களைத் தாண்டி, தூயதாக மீண்டும் மீட்டுத்தரும் வல்லமை கொண்டதாக இந்த நாவல் இருக்கிறது. ஆழ்மனதில் உறைந்து, கனவுகளில் எப்போதாவது தவிப்பாக வெளிப்படும் சிறு வயதுக் காதலைத் தூசு தட்டி, அதை ஒவ்வொருவருக்கும் தூயதாக மாற்றித்தரும் மாயாஜாலத்தைச் செய்யும் நாவல் இது. சு. கிருஷ்ணமூர்த்தியின் தமிழாக்கத்தில் சாகித்ய அகாடமியால் இந்த நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

18 mins ago

ஆன்மிகம்

35 mins ago

ஆன்மிகம்

43 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்