பெண்கள் 360: துணை நின்றவர்களுக்கு நன்றி

By க்ருஷ்ணி

ஐந்து நெடிய ஆண்டுகள் கழித்துப் பொது வெளியில் தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளான பிரபல மலையாள நடிகை. 2017இல் தன் மீது சக நடிகர் திலீப் நிகழ்த்திய பாலியல் வன்முறை குறித்து அவர் புகார் அளித்திருந்தார். குற்றம் இழைத்தவர் முன்னணி நடிகர் என்பதால் அந்த நடிகை மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டார். திரைத்துறையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC)’ அமைப்பு தொடங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நடிகைகள் குரல்கொடுத்தனர். அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளிவராத நிலையில் ஜனவரி 10 அன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத் தில் அந்த நடிகை கருத்துப் பதிவிட்டுள்ளார்.

“இது எளிதான பயணமாக இருக்க வில்லை. பாதிக்கப்பட்டவர் என்கிற அடையாளத்தில் இருந்து போராடி மீண்டவர் என்கிற அடை யாளத்தைப் பெறுவதற்கான பயணம் இது. என் மீது சுமத்தப்பட்ட பழியால் என் பெயரும் அடையாளமும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டன. நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்கிறபோதும் என்னைச் சிறுமைப்படுத்தவும் தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால், அப்போதும் என் குரலை உயிர்ப்புடன் வைத்திருக்க சிலர் என்னுடன் நின்றனர். அவர்களுக்கு நன்றி” என்று அதில் எழுதியுள்ளார்.

ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் விருப்பக் குறியிட்ட இந்தக் கருத்தைப் பலர் பகிர்ந்தனர். மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் நடிகையின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர, அது சமூக ஊடகத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பேசு பொருளானது. பெண்களும் இளைஞர்களும் நடிகைக்குப் பெருவாரியாக ஆதரவு அளித்த பிறகே மம்முட்டியும், மோகன்லாலும் எதிர்வினையாற்றியதாக அவர்கள் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டது. ‘மிகத் தாமதமான மிகச் சிறிய செயல் இது’ என்று விமர்சித்தனர். ‘தவறிழைத்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தான் எதிர்கொண்ட சோதனையை வேறு யாரும் அனுபவிக்காத நிலை நிலை உறுதிசெய்யப்படும்’ என்றும் அந்த நடிகை தன் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இணையவழிப் பாலியல் தாக்குதல்

பெண்கள், சிறுபான்மை யினர் குறிப்பாகப் பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோர் மீது நூதனமான முறையில் இணையவழியில் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுவதை ‘தி வயர்’ செய்தி இணையதளம் ஆதாரங்களுடன் கண்டறிந் துள்ளது. இந்தியாவின் முன்னணி பெண் பத்திரிகை யாளர்களின் கருத்துகளை முடக்கும் வகையில் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆபாச கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ராணா அயூப், பர்கா தத், ஃபயஸ் டிசோசா, ஸ்வாதி சதுர்வேதி உள்ளிட்ட பல பெண் பத்திரிகை யாளர்கள் இந்த வகைத் தாக்குதலை எதிர்கொண்டுவருகின்றனர்.

முற்போக்குக் கருத்துகளைச் சொல்கிறவர்கள் சந்திக்கும் தாக்குதல் புதிதல்ல என்கிறபோதும், ‘டெக் ஃபாக்’ (TEK FOG) என்னும் ரகசிய செயலியின் மூலம் தற்போது நிகழ்த்தப்பட்டுவரும் தாக்குதல் மோசமானது என ‘தி வயர்’ குறிப்பிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவினர் பயன்படுத்தும் செயலி இது என்பதையும் ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளனர்.
முற்போக்குக் கருத்துகளைப் பதிவிடு கிற, அநீதிக்கு எதிராகக் குரல்கொடுக்கிற பெண் பத்திரிகையாளர்கள் குறித்த தகவல்கள் முதலில் திரட்டப்படுகின்றன. அவை ‘டெக் ஃபாக்’ செயலியில் இருக்கும் ரகசியப் பணியாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எந்தக் கருத்தைப் பதிவிட்டாலும், அந்தச் செயலியின் ரகசியப் பணியாளர்கள் நாலா பக்கமும் இருந்தும் ஒரே நேரத்தில் அதிரடித் தாக்குதலை நிகழ்த்துவார்கள். இந்தத் தாக்குதலால் சோர்ந்து போகிறவர்கள், தங்கள் சமூக ஊடகக் கணக்கில் இருந்து சிறிது காலம் விலகியிருக்க நினைப்பார்கள். உடனே அந்தக் கணக்கை ஹேக் செய்து, அதன்மூலம் செயலியின் ரகசியப் பணியாளர்கள் தங்கள் கருத்தைப் பதிவிடுவார்கள். மக்களுக்கு அது அந்தப் பத்திரிகையாளரின் கருத்து போலத் தோன்றும். ஆனால் அதை எழுதியவர்கள் ‘டெக் ஃபாக்’ செயலியின் ரகசியப் பணியாளர்கள் என்பது யாருக்கும் தெரியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்