செயலி உலா: சமையலுக்குத் தோள்கொடுக்கும் தோழன்

By நிஷா

நம் அனைவருக்கும் உணவு பிடிக்கும். இருப்பினும், அந்த உணவைச் சமைப்பதற்குத் தேவைப்படும் சிறப்புத் திறன்கள் அனைவருக்கும் இருப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே அந்தத் திறன்களால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கின்றனர். பலருக்கும் தெரிந்த சாம்பாராக இருந்தாலும், ஒரு சிலர் வைக்கும் சாம்பார் மட்டும் நம்முடைய மனத்தைக் கவர்ந்து இழுப்பதன் காரணமும் இதுவே.

சமைக்கிற அனைவரின் உணவும் ஒரே சுவையில் ஏன் இருப்பதில்லை? பலருக்கும் நன்கு தெரிந்த உணவின் சுவையில் ஏற்றத்தாழ்வு ஏன்? அனைவரும் ஒரே மாதிரியான சுவையில் சமைக்க முடியாதா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக வந்திருக்கும் செயலியே ‘cookd’.

குறிப்புகள் ஏராளம்

உணவுப்பொருட்கள், மண்ணின் இயல்பு, உணவு வகைகள், உணவு நேரம், போன்றவற்றின் அடிப்படையில் இதில் 800-க்கும் மேற்பட்ட சமையல் காணொலிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இது அறிமுகப்படுத்தும் புதுப்புது சமையல் குறிப்புகள், உங்கள் சமையலைச் சலிப்புடையதாக மாறாமல் இருக்க உதவுகிறது.

பொதுவாக, சமையல் செய்முறை காணொலிகளில், சேர்க்கப்படும் பொருட்களின் அளவு டேபிள் ஸ்பூன் அல்லது டீ ஸ்பூன் என்பதாகவே இருக்கும். இந்த அளவு முறை சமைக்கும்போது உதவும் என்றாலும், கடைகளில் பொருட்களை வாங்கும்போது சிரமமாக இருக்கும். இந்தச் செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்து டேபிள் ஸ்பூன் /டீ ஸ்பூன் அளவீடுகளும் கிராமில் வாங்கக்கூடிய அளவுகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன. இதனால், சமையலுக்குத் தேவைப்படும் பொருட்களைக் கடைகளில் சரியான அளவில் வாங்கிக்கொள்ள முடியும்.

இருப்பதற்கு ஏற்ற சமையல்

சமையல் பொருட்களின் இல்லாமை நாம் சமைக்கும்போது அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினை. காலையில் அவசரமாகச் சமைக்கும்போதுதான் தக்காளி இல்லை என்பதோ கடுகு, மிளகாய்த் தூள் இல்லை என்பதோ நமக்குத் தெரியவரும். இதனால், நாம் சமைக்கத் திட்டமிட்டு இருந்த தக்காளி சட்னியைக் கடைசி நேரத்தில் கைவிட வேண்டிவரும். இந்த அன்றாடப் பிரச்சினைக்கு இந்தச் செயலி அளிக்கும் தீர்வு அலாதியானது. வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை இந்தச் செயலியினுள் உள்ளீடு செய்தால்போதும், அவற்றைக்கொண்டு நீங்கள் என்ன சமைக்க முடியும் என்பதையும், அதை எப்படிச் சமைக்க வேண்டும் என்பதையும் அது உங்களுக்கு அழகாக, எளிதாகப் புரியும் வகையில் விளக்கும்.

எண்ணிக்கைக்கு ஏற்ற சமையல்

இதன் இன்னொரு சிறப்பு, சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமைக்க உதவும் திறன். எத்தனை பேருக்குச் சமைக்க வேண்டும் என்று நீங்கள் உள்ளீடு செய்தால்போதும், அதற்குத் தேவைப்படும் அளவீடுகளில் சமையல் காணொலிகளை மாற்றி உங்களுக்கு இது அளிக்கும். இது சமைக்கும்போது தேவைப்படும் பொருட்களின் அளவுகள் குறித்துச் சிந்தித்து நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கும். உங்கள் முழு கவனமும் சமையலின் சுவையில் இருப்பதை உறுதி செய்யும்.

ரிப்பீட் மோடு

சமையல் காணொலிகளைப் பார்த்துச் சமைக்கும்போது இருக்கும் முக்கியப் பிரச்சினை அவற்றின் வேகம். சமைக்கும்போது அந்தக் காணொலிகளை அடிக்கடி நிறுத்த வேண்டியிருக்கும் அல்லது பின் செல்ல வேண்டியிருக்கும் அல்லது மீண்டும் முதலிலிருந்து பார்க்க வேண்டியிருக்கும். சமையலில் கைகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது இது சற்று கடினமான செயலாகவே இருக்கும். இந்தச் செயலியில் சமையலின் ஒவ்வொரு நிலையையும் நீங்கள் ரிப்பீட் மோடில் பார்க்கும் வசதி இருக்கிறது. இது சமையலை எளிதாக்குவதோடு, நாம் கற்கும் திறனையும் சேர்த்து மேம்படுத்துகிறது

சமையல் அட்டவணை

காலையில் என்ன சமைக்கலாம் என்கிற குழப்பம் நம் அனைவருக்கும் ஏற்படும். அதிலிருந்து சுதாரித்து எழுந்து, முடிவு செய்து, ஏதோ ஒன்றை சமைப்போம். சமையல் முடிந்த பின்னர், இதை ஏன் இன்று சமைத்தீர்கள் என்று வீட்டில் யாரோ ஒருவர் அதிருப்தியுடன் கேள்வி எழுப்புவார். இது நமக்கு எரிச்சலையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும். இந்த அன்றாடப் பிரச்சினைக்குத் தீர்வளிக்கும் விதமாக இந்தச் செயலியில் சமையல் அட்டவணையைத் திட்டமிட்டு வடிவமைக்கும் வசதி இருக்கிறது. நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் ஓய்வான நேரத்தில் அமர்ந்து பேசி, என்ன சமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, தினசரி அட்டவணையோ வார அட்டவணையோ மாத அட்டவணையோ தயார் செய்துகொள்ள முடியும். இது சமைப்பவர்களின் குழப்பத்தையும், சாப்பிடுபவர்களின் ஏமாற்றத்தையும் நீக்கும்.

அதிகரிக்கும் சுவை

இந்தச் செயலி, சிறப்பாகச் சமைப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான திறன் போதாமையை மிக இயல்பாக, எளிதாக நிரப்புகிறது. ஒரு தோழனைப் போல், இது சமையலறையில் நம்முடன் இருந்து, நம்முடைய சமையலை மேம்படுத்துகிறது. தவறுகளைச் சரி செய்கிறது, புதியவகை உணவுகளைச் சமைக்கக் கற்றுத்தருகிறது, முக்கியமாகச் சுவையைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. இதனால்தான், சென்னையைத் தளமாகக்கொண்டு இருக்கும் டிஜிட்டல் ஹோம்-குக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான Cookdஇல், கேரளா ஏஞ்சல் நெட்வொர்க் நிறுவனமான Konglo Ventures 4.4 கோடி ரூபாய் அளவுக்கு நிதி முதலீடு செய்துள்ளது.

https://www.youtube.com/c/CookdTV/featured

https://cookdtv.com/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

13 mins ago

சினிமா

26 mins ago

விளையாட்டு

32 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்