எங்க ஊரு வாசம்: பிள்ளைகள் வளர்க்கும் மரங்கள்!

By பாரததேவி

கைகளில் சிறு கன்றுகளோடு ஒரு சிறுவன் மட்டுமின்றி ஊருக்குள் இருக்கும் அத்தனை சிறுவர்களும் புறப்பட்டுவிடுவார்கள். எல்லோருடைய கைகளிலும் வேர் புதைக்கப்பட்ட மண்ணோடு அத்திக் கன்று, ஆலங்கன்று, வேம்பு என்று விதவிதமான கன்றுகள் சிறு துளிர் இலைகளோடு பனி கொண்ட ஈரத்தில் சிலிர்த்துக்கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தை மாத வருசத்துக்கும் தங்கள் பிள்ளைகளின் கையால் ஒரு கன்றை எடுத்துக்கொண்டு போய் பிஞ்சைகளில், ஓடைகளில், ஆற்றின் ஓரத்தில் என்று நடச்சொல்வார்கள். ஆலங்கன்று, அத்திக்கன்று என்றால் ஆற்றோரட்திலும் குளத்தோரத்திலும் நட்டுவைப்பார்கள். புளியங்கன்றும் அப்படியே. ஏனென்றால் இவை காய்த்து, கனியும்போது ஆடு, மாடு மேய்ப்பவர்கள், அந்த வழியே போகிறவர்கள், சிறுவர்கள் என்று கல்லெறிந்து கனி பெறக்குவார்கள். இப்படி கல்லெறிவதால் வெள்ளாமை செய்யும் பிஞ்சைக்குள் கல் பெறக்கி மாளாது. அதனால்தான் அப்படி ஆற்றோரங்களில் நட்டுவிடுவார்கள். ஆனால் வேப்பமரம், வாகை மரம், புன்னை, மருது இவற்றை பிஞ்சைக்குள்ளும் பிஞ்சையின் உசந்த கரையிலுமாக நட்டுவிடுவார்கள். கமலை குழிக்கு மட்டும் பூவரசங்கன்று போகும்.

வருஷம் ஒரு முறை இப்படி வரும் தை மாதப் பொங்கலுக்குப் பிள்ளைகள் கையினால் மரம் நடுவது என்பது ஊரின் சம்பிரதாயம். இப்படி மரங்களை நடுவது தைப்பொங்கல் திருநாளில் சூரிய பகவானுக்குத் தாங்கள் அளிக்கும் காணிக்கை என்று நினைத்தார்கள். அதோடு இப்படி மரங்களை நட்டு வளர்ப்பதால் இந்த வருசத்தைவிட அடுத்த வருசம் பூமி இன்னும் செழிக்கும் என்றும் வெள்ளாமை என்னும் அதிக மகசூல் தரும் என்றும் நம்பினார்கள். அதோடு சிறுவர்களின் கையால் இந்த மரங்களை நடவைத்தால் ‘என் மரம், உன் மரம்’ என்று அதன் வளர்ச்சியைப் பார்த்து சந்தோசப்படுவதோடு மரங்கள் சீக்கிரம் வளர வேண்டுமென்றும் ஆசைப்படுவார்கள்.

அது மட்டுமில்லாமல் அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இருபத்தைந்து வயதுக்குள் இருக்கும் சிறுவர், சிறுமி எல்லோருக்குமே நீச்சலடிக்கத் தெரியும். சிறு வயதிலேயே ஊருக்குள் இருக்கும் குளங்களிலும், தண்ணீர் வற்றிய கிணறுகளிலும், கம்மாய்களிலும் கூட்டம் கூட்டமாகச் சுரைக் குடுவையோடு போய் ஒருவருக்கொருவர் துணை கொண்டு நீச்சல் பழகிவிடுவதால் இப்போது மழைக்கு நிரம்பியிருக்கும் கிணறுகள் எல்லாம் இவர்கள் வசப்பட்டிருக்கும். அதனால் தாங்கள் வளர்த்துவரும் கன்றுகளுக்குக் கிணற்றில் இறங்கித் தண்ணீரை வாளி கொண்டு மோந்தும், இறைத்துமாக ஊற்றுவார்கள். அதோடு வீடுகளில் கூடை முடைந்துகொண்டும் புளிச்ச நாரினால் கயிறு திரித்துக்கொண்டிருக்கும் பெருசுகளைச் சிணுங்கியும், சிரித்தும் பிஞ்சைக்கு இழுத்து வந்து தாங்கள் வளர்க்கும் கன்றுகளை ஆடு, மாடு மேய்ந்துவிடாமலிருக்க வேலியும் போட்டுவிடுவார்கள். அதனால்தான் பிள்ளைகளுக்கு, ‘நீ வளர்க்கும் மரம் அப்படி வளரும், இப்படி வளரும்’ என்று ஆசையூட்டி அவர்கள் கையால் மரத்தை நடவைத்துவிடுவார்கள்.

இப்போது மரம் நட்டாகிவிட்டது. அதைச் சுற்றிலும் மண் அணைத்து ஒரு வாளி தண்ணீர் இறைத்து ஊற்றிவிட்டு புறப்படுவார்கள். பிறகு கமலை, பட்றாபலா, மேச்சிறகு என்று அனைத்திலும் காப்பு கட்டிவிட்டு பிஞ்சையிலிருக்கும் மரத்திலும் காப்பு கட்டுவார்கள். காப்பு கட்டி முடித்த பின் அங்கேயிருந்த வேப்பமரத்தில் குச்சி ஒடித்துப் பல் விளக்கி, கிணற்றுக்குள் இறங்கிக் குளித்துவிட்டு இவர்கள் வீடு திரும்பும் முன் வீட்டில் கட்டியிருக்கும் ஆடுகளின் நினைவு வரும்.

ஆடுகளுக்கு அகத்திக் கொழை, ஆமணக்குக் கொழை என்றால் ரொம்பப் பிரியம். மிளகாய்த் தோட்டத்தில் இறங்கி வாய்க்காலுக்கு வாய்க்கால் செழித்திருக்கும் தழைகளைப் பிடுங்கி, கட்டாக கட்டிக்கொண்டு வீடுவந்து சேரும்போது ஆங்காங்கே கட்டியிருக்கும் ஆடுகள் இவர்களைப் பார்த்து குரல் கொடுக்கும். எல்லாவற்றுக்கும் குழைகளைக் கட்டி முடிக்கும்போது கொட்டத்துக்குள் கட்டியிருக்கும் பசு, காளைகளின் கழுத்து மணிச் சத்தம் இத்தனை நாட்களைவிட கலகலத்து ஒலிக்கும். ஒரு வேளை அவற்றுக்கும் இன்று பொங்கல் திருநாள் என்று தெரிந்துவிட்டதோ?

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

18 mins ago

உலகம்

9 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

33 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்