பெண்கள் 360: ஒன்றிய அமைச்சரவையில் 11 பெண்கள்

By செய்திப்பிரிவு

கோவிட் தடுப்பூசியில் பாலின இடைவெளி

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் தட்டுப்பாடு தீவிரமடைந்துவரும் நிலையில் தடுப்பூசி செலுத்தப்படுவதில் நிலவும் பாலின இடைவெளியும் கவலைக்குரிய பிரச்சினையாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் ஜூன் இறுதியில் வெளியிட்ட தரவுகளின்படி இந்தியாவில் 17.8 கோடி தடுப்பூசிகள் ஆண்களுக்கும் 14.99 கோடி தடுப்பூசிகள் பெண்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளன. இதைத் தவிர 20 மாநிலங்களின் தடுப்பூசித் தரவுகளை வைத்து ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ள பகுப்பாய்வின்படி ஜூலை 4 வரை சராசரியாக 1000 ஆண்களில் 390 பேருக்கு ஒரு தவணையேனும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெண்களைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 1000-க்கு 349ஆகக் குறைந்துள்ளது. மத்திய ஆட்சிப் பகுதியாக மாற்றப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீரில் இந்த இடைவெளி மிக அதிகமாக உள்ளது. அங்கே 579/1000 ஆண்களுக்கும் 435/1000 பெண்களுக்கும் ஒரு தவணையேனும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே 727/1000 பெண்களுக்கும் 715/1000 ஆண்களுக்கும் ஒரு தவணையேனும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தத் தகுதியான பிரிவினரின் எண்ணிக்கை அதிகரிப்புடன் பாலின இடைவெளியும் அதிகரித்துள்ளது. மே 1 கணக்குப்படி 138/1000 ஆண்கள், 131/1000 பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஜூன் 1இல் இந்த எண்ணிக்கை முறையே 191/1000, 172/1000 ஆக இருந்தது. இதன் மூலம் இரு பாலினத்தவருக்கு இடையேயான இடைவெளி இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

பாலூட்டும் அன்னையருக்குக் கடந்த மாதத்திலிருந்துதான் தடுப்புசி செலுத்தப்படுகிறது. ஜூலை 2 அன்றுதான் இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மொத்த தடுப்பூசிகளில் நிலவும் பாலின இடைவெளிக்கு இவை மட்டும் காரணமல்ல என்பதே நிபுணர்களின் கருத்து. பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் ஆண்களே பெண்களின் உடல்நலன் தொடர்பான முடிவுகளை எடுக்கின்றனர் என்று தேசியக் குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5இலிருந்து தெரியவந்துள்ளது. குறிப்பாகக் கிராமப்புறங்களில் பெண்களைவிட ஆண்களுக்கே அனைத்து விஷயங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதோடு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டுத்தன்மை வரும், மாதவிடாய் நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பது போன்ற வதந்திகளும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம்.

ஒன்றிய அமைச்சரவையில் 11 பெண்கள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2019 தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு முதன் முறையாக ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது. 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாகவும் ஒன்றிய இணை அமைச்சர்களாகவும் ஜூலை 7 அன்று பதவியேற்றனர். இவர்களில் ஏழு பெண்கள் நடப்பு ஆட்சியின் அமைச்சரவையில் புதிதாக இணை அமைச்சர்கள் ஆகியுள்ளனர். இதன்மூலம் ஒன்றிய அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அமைச்சரவையில் இருந்தவர்களில் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் ஆகிய இரண்டு துறைகளுக்கும் மத்திய அமைச்சராகத் தொடர்கிறார். ஸ்மிருதி இரானி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சராக மட்டும் தொடர்வார். ஜவுளித் துறையின் அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் சருதா ஆகியோரும் ஏற்கெனவே இருந்த துறைகளின் இணை அமைச்சர்களாகத் தொடர்கின்றனர். புதிதாக இணை அமைச்சராகியிருப்பவர்கள்: அனுப்ரியா படேல் (தொழில் - வர்த்தகம்), ஷோபா கர்ண்ட்லஜே (வேளாண்மை, விவசாயிகள் நலன்), தர்ஷனா ஜர்தோஷ் (ஜவுளி, ரயில்வே), மீனாட்சி லேகி (வெளியுறவு விவகாரங்கள், பண்பாடு), அன்னபூர்ணா தேவி (கல்வி), பிரதிமா பெளமிக் (சமூகநீதி, அதிகாரமளித்தல்), மருத்துவர் பாரதி பவார் (சுகாதாரம், குடும்பநலன்). இந்தப் பட்டியலில் கடைசி மூவர் 2019 தேர்தலில் முதன் முறையாக மக்களவை உறுப்பினர் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் வெவ்வேறு சமூக, பிராந்திய, பொருளாதாரப் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

2019 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட பெண்களின் வாக்கு முக்கியப் பங்காற்றியதால் பெண்களுக்கு மேலும் அதிகாரமளிக்கும் வகை யில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மிதாலி ராஜின் மற்றுமொரு உலக சாதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீது அதிக கவனம் குவிந்திருப்பதற்கு அந்த அணியின் தலைவர் மிதாலி ராஜ் முதன்மையான பங்களித்துள்ளார். 50 ஓவர்களுக்கான 2017 உலகக் கோப்பையில் இவருடைய தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அணித் தலைவராக மட்டுமல்லாமல் முதன்மை மட்டையாளராகவும் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்திவருகிறார் மிதாலி ராஜ். ஜூலை 3 அன்று வோர்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துடனான கடைசி ஒரு நாள் போட்டியில் 86 பந்துகளில் 75 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியில் 11 ரன்களைக் கடந்தபோது சர்வதேச மகளிர் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களையும் சேர்த்து மிக அதிக ரன்களைப் பெற்ற வீராங்கனை என்னும் சாதனையைப் படைத்தார். இதுவரை 379 போட்டிகளில் விளையாடி 46.90 என்னும் சராசரியுடன் 10,377 ரன்களைக் குவித்திருக்கிறார் மிதாலி. இதற்கு முன் இங்கிலாந்து அணியின் சார்லோட் எட்வர்ட்ஸ் 309 போட்டிகளில் 37.49 என்னும் சராசரியுடன் 10,273 ரன்களைக் குவித்திருந்தார். முன்னதாக கடந்த மார்ச் 12 அன்று தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் 10,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்னும் சாதனையைப் படைத்திருந்தார் மிதாலி.

இங்கிலாந்துடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்கிற கணக்கில் இழந்தாலும் மிதாலி மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்தார். இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் மட்டையாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் மிதாலி ராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

27 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

47 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்