ஒரு ஆசிரியையின் ‘அசைன்மென்ட்’

By பால்நிலவன்

ஆணின் லட்சியவாதப் போராட்டத்துக்கும் பெண்ணின் லட்சியவாதப் போராட்டத்துக்கும் மிக முக்கியமான, பெரிய வேறுபாடு ஒன்று உண்டு. பாலின அடையாளம்தான் அந்த வேறுபாடு! பெண்ணாகத் தன்மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சுமைகளையும் மீறிக்கொண்டுதான் பெண் எந்தப் போராட்டத்தையும் வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில், லட்சியவாதப் பயணத்தில் ஈடுபடும் பெண்ணின் கதைதான் ஜார்ஜா செசரேவின் இயக்கத்தில் 2010-ல் வெளியான இத்தாலிய மொழித் திரைப்படம் ‘தி ஃபர்ஸ்ட் அசைன்மென்ட்’.

ஐம்பதுகளின் காலகட்டத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. இன்னமும் கிராமங்களில் கல்வியின் நிலையும் ஆசிரியர்கள் என்னவிதமான வாழ்க்கைப் பின்னணியில் இருந்தெல்லாம் வந்து மாணவர்களை அணுகுகிறார்கள் என்பதையும், முக்கியமாக ஒரு ஆசிரியையை சமூகம் எப்படி அணுகுகிறது என்பதையும் இந்தப் படத்தில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் செசரே. இதெல்லாம் இந்தியாவுக்கும் நன்றாகப் பொருந்தும் என்பது இன்னும் விசேஷம்!

குழந்தைகளை நேசிக்கும் நீனா

படித்த கிராமத்துப் பெண்ணான நீனாதான் கதையின் நாயகி. கிராமத்துக் குழந்தைகளை மிகவும் நேசிப்பவள். குழந்தைகளுடன்தான் அவள் அதிக நேரங்களை செலவிடுவாள். அவள் எண்ணம்போல பள்ளி ஆசிரியை வேலைக்கான நியமன உத்தரவு அவளைத் தேடி வருகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தன் அம்மாவிடம் ஓடிச்சென்று பகிர்ந்துகொள்கிறாள்.

அம்மாவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும் வெகுதூரம் உள்ள ஒரு மாவட்டத்துக்குச் சென்று பணியாற்றுவதில் அவளுக்குச் சுத்தமாக உடன்பாடு இல்லை. ஆனால், நீனாவோ போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். அரசு சம்பளத்தில் கிடைத்த ஒரு வேலை என்பதைவிட நல்ல படிப்புக்குக் கிடைத்த நல்ல தகுதி என்பதே அவளது எண்ணம்.

அடுத்ததாக, தான் காதலித்துவரும் உள்ளூர்ப் பணக்கார வீட்டுப்பிள்ளை பிரான்சிஸ்கோவிடமும் சென்று இச்செய்தியை பகிர்ந்துகொள்கிறாள். அவனுக்கு இவள்மீது மிகுந்த அக்கறையும் உண்மையான அன்பும் உண்டு. தனது வீட்டின் சில காரணங்களால் இவளைத் திருமணம் செய்துகொள்வதைத் தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலையில் உள்ளவன். பிரிய வேண்டும் என்பதால், இவளுக்கு வேலை கிடைத்த செய்தி கேட்டு காதலன் மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், வேறுவழியில்லாமல் அவளுக்கு விடைகொடுக்கிறான். கிராமத்துக் குழந்தைகளிடமும் பிரியாவிடை பெறுகிறாள் நீனா.

வெகுதூரம் பயணிக்கும் அவள் பணியாற்ற வேண்டிய கிராமம் மலைகளின் பின்னணியோடு அற்புதமான இயற்கைச் சூழலைக் கொண்டிருப்பதைப் பார்த்ததுமே நீனாவுக்குப் பிடித்துப்போகிறது. அதேநேரத்தில் வெளி உலக வாசனையே அறியாத மக்களைக் கண்டு திகைக்கிறாள். அந்த ஊரின் முக்கியஸ்தரான ஒரு பெரியம்மா வீட்டில் தங்கி சின்னஞ்சிறு பள்ளிக்கூடத்து வகுப்பறையில் தனது பணியைத் தொடங்குகிறாள். குழந்தைகளிடமும் உள்ளூர் மனிதர்களிடமும் அவள் எதிர்கொள்ளும் அனைத்துச் சூழல்களையும் அற்புதமாகப் பதிவுசெய்திருக்கிறார் ஜார்ஜா செசரே.

முரண்படும் குழந்தைகளின் உலகம்

வகுப்பறைக்கு முறைப்படுத்தப்படாத குக்கிராமத்துக் குழந்தைகளின் உலகம் திரைப்படத்தில் பல காட்சிகளில் காட்டப்பட்டிருக்கிறது. ஆசிரியையிடம் விளையாட்டுக் குணத்தோடு முரண்படும் குழந்தைகளின் உலகம் மிக மிக அழகானது. முரண்படும் பள்ளி மாணவர்களைப் பற்றியும், இங்குள்ள மனிதர்கள் பற்றியும் அவள் ஊருக்குக் கடிதங்கள் எழுதுகிறாள். போகப்போக, அந்த ஆசிரியை நடத்தும் பாடங்களை மாணவர்கள் சரியாக உள்வாங்கிக்கொள்கின்றனர்.

வகுப்பறையில் ஒரு நல்ல சூழலை உருவாக்க வேண்டும் என்பதுதான் நீனாவின் கனவு. கிராமத்தின் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப தன் கற்பித்தலைத் தகவமைத்துக்கொள்கிறாள். கடும் முயற்சியெடுத்து மிகுந்த தோழமையோடு மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறாள். பள்ளிக் கல்வி ஆய்வாளர் வரும்போது மாணவர்கள் துல்லியமான விடைகளை வழங்கி ஆசிரியைக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துவிடுகிறார்கள்.

இதற்கிடையே நீனாவின் காதலனுக்குத் திருமணம் ஆகிவிடுகிறது. நீனா தற்கொலை வரைக்கும் போய்விடுகிறாள். கிராம மக்கள்தான் அவளைக் காப்பாற்றிக் கூட்டிவருகிறார்கள்.

அதைத் தொடர்ந்து, தன் காதலனைப் பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு உள்ளூரில் ஒரு இளைஞனோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதோடு அவனைத் திருமணமும் செய்துகொள்கிறாள்.

புதிய வாழ்க்கை, புதிய பாடம்!

திருமணத்திற்குப் பிறகும் தன் கணவனிடமிருந்து விலகியே இருக்கிறாள். அவனது பாமரத்தனங்களையும் படிப்பறிவின்மையையும் கண்டு அவனை ஒதுக்குகிறாள். காதலன் ஏமாற்றியதை நினைத்து மனம் புழுங்கும் இவள் ஒருமுறை ஊருக்கேச் சென்று அவனை சந்திக்க முயல்கிறாள். அவனோ உடல்நிலை கெட்டு மனைவியைப் பிரிந்து வாழ்கிறான். நீனா அவனைச் சந்திக்கும்போது அடிக்கடி கர்சீப்பால் மூக்கிலிருந்து வரும் ரத்தத்தைத் துடைத்துக்கொள்கிறான். அவனுடைய வீட்டாரும் அவனைப் புறக்கணித்துவிட்டார்கள். காதலனின் நிலையை எண்ணி வருத்தத்தோடு திரும்பவும் தான் பணியாற்றும் கிராமத்துக்கு நீனா வருகிறாள். பள்ளிக் குழந்தைகளைப் பார்க்க வகுப்பறைக்குச் செல்கிறாள். குழந்தைகளைப் பார்த்ததும் உற்சாகமடைகிறாள். குழந்தைகளுக்கான புதிய பாடம் தொடங்குகிறது.

இப்படத்தில் இசபெல்லா ரகோனிசா பொறுப்பும் வேகமும் மிக்க பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் என்பதைவிட லட்சிய வாழ்வைக் குறுக்கிடும் ஆசாபாசங்களின் நிம்மதியற்ற மனக்கசப்பை மென்று விழுங்கி அதை வென்றெடுக்க முயலும் பாத்திரத்தில் வரும் நீனாவாகவே மாறிவிட்டாரோ என்று நமக்குத் தோன்றுகிறது.

மலர் தூவும் மாணவன்

ஆசிரியர்-மாணவர்-வகுப்பறை போன்ற அம்சங்கள் இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக சின்னஞ்சிறு மாணவன் ஒருவன் இளம் ஆசிரியை கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருப்பான். அப்போது ஆசிரியை எந்தக் கேள்விக்கும் பதில்தர மாட்டாயா என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு அங்குள்ள சிறுமி “டீச்சர், அவன் யாரு கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான். அவனுக்காகத் தோணிச்சுன்னாதான் பதில்சொல்வான்'' என்பாள்.

குழந்தைகளை மலைவெளியின் அழகிய பூமரங்கள் இருக்கும் சரிவுக்கு விளையாட அழைத்துச்செல்கிறாள் நீனா. அப்போது அந்தச் சிறுவன் காணாமல் போய்விட எல்லோருக்கும் பகீர் என்கிறது. மலைச்சரிவு வேறு! எங்காவது போய் விழுந்துவிட்டானா என அச்சம் பற்றிக்கொள்ள, ஆசிரியைக்கும் திரைப்படத்தின் பார்வையாளர்க்கும் மனம் பதைபதைக்கிறது. தேடி ஓய்ந்துபோய் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க அப்போது இளம் ஆசிரியையின் மீது மரத்திலிருந்து பூக்களாகக் கொட்ட, நிமிர்ந்துபார்த்தால் சிரித்தபடி அந்தச் சிறுவன்.

அவனின் செயலைக் கண்டு கோபப்படாமல் அவனைப் பார்த்து மிகவும் உற்சாகமாக ஆசிரியை சிரிப்பதும், அவனை அடிக்காமல் கையசைத்து வரவேற்றுக் குழந்தைகளோடு குழந்தைகளாக ஆடிப்பாடி அவள் அழைத்துச் செல்வதும் கவிதை.

ஆசிரியர்-மாணவர் உறவை இவ்வளவு அழகாகச் சொன்ன படங்கள் குறைவு. 2010-ல் நடைபெற்ற 67-வது வெனிஸ் திரைப்பட விழாவில் ‘கான்ட்ரோகேம்போ இட்டாலியானோ' எனும் சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. கற்பித்தலை வேள்வியாகக் கருதும் ஆசிரியர்களின் வாழ்வின் பின்புலத்தைப் பாசாங்கில்லாமல் சொன்ன ‘தி ஃபர்ஸ்ட் அசைன்மென்ட்' போன்ற திரைப்படங்கள் தமிழிலும் எடுக்கப்படும் காலம் ஒன்று வர வேண்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்