இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தேவை

By செய்திப்பிரிவு

வீட்டு வேலை செய்தே முதுகொடிந்துபோகும் இல்லத்தரசிகள் என்று ஒரு பிரிவினர் இருப்பதே, இந்தத் தேர்தல் நேரத்தில்தான் தெரியவந்திருக்கிறதுபோல. கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வெளியிடும் அறிவிப்புகள் அப்படி!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் தெரிவித்தார். மாதம் மதிப்புரிமை தொகையாக மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதுவரை எந்த வகையிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளையும் வீட்டையும் குடும்ப உறுப்பினர்களையும் பராமரிக்கும் பணியையும் முதன்முதலாகத் தமிழ்ச் சமூகம் இந்தத் தேர்தல் நேரத்தில் கணக்கில் எடுத்துக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதே. பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளும் மனித உழைப்பைக் கோரும் பணமதிப்புடையவையே என்பதை இந்த அறிவிப்புகள் முன்னெடுத்துச் செல்லக்கூடும். ஆனால், பெண்களுக்கு மாதாந்திர பணப்பயன் வழங்குவதோடு முடிந்துவிடக்கூடியதா இது?

பெண்கள் செய்கிற வீட்டுவேலைகளுக்கு இந்தத் தொகை நிச்சயம் நிகராகாது. பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளுக்கு ஊதியம் வழங்குவதன் மூலம், வீட்டு வேலை என்பது பெண்களின் வேலை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். தாய்மை, அன்பு, பாசம், தியாகம் என்பது போன்ற கட்டுகளுக்குள் பெண்களை நிறுத்திவைத்து, அவர்களை வீட்டுக்குள்ளும் வீட்டு வேலைகளுக்குள்ளும் முடக்கிவைத்ததை இப்படிப் பணம் வழங்குவதன்மூலம் ‘அது உன் வேலைதான்’ என்று வேறு வகையில் திணிப்பதும் தவறுதான்.

பொருளாதார சுதந்திரம்தான் பெண்களைச் சமூகம் இட்டுள்ள விலங்குகளிலிருந்து விடுவிக்கும். அப்படியான விடுதலையை இந்தப் பணப்பயன்கள் தந்துவிடாது என்கிறபோதும், ஓரளவுக்கேனும் பெண்களின் பொருளாதாரத் தேவையை இந்தத் திட்டம் நிறைவேற்றக்கூடும். சின்னச்சின்னத் தேவைகளுக்குக்கூட ஆண்களை எதிர்பார்த்து நிற்கும் அவல நிலையிலிருந்து இந்தச் சிறு தொகை சற்று ஆசுவாசம் அளிக்கும். ஆனால், பணம் கைக்கு வந்த அடுத்த நொடியே, அதை மனைவியின் கைகளில் இருந்து பறித்துச்செல்லும் கணவர்கள் நிறைந்த குடும்பங்களில் இந்தச் சிறு தொகைகூடப் பெண்களுக்குப் பலனளிக்காது.

இல்லத்தரசிகள், குடும்பத்தலைவிகள் என்கிற அடிப்படையில்தான் சில அறிவிப்புகள் உள்ளன. அவை வேலைக்குச் செல்லும் பெண்களையும் உள்ளடக்கிச் சொல்லப்பட்டவையா என்பது தெரியவில்லை. மக்கள் நீதி மய்யம் மட்டும் வீட்டு வேலை மட்டுமே செய்யும் மகளிருக்கு என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்பட வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடத்தில் வேலை செய்வதோடு வீட்டில் உள்ள வேலைகளையும் சேர்த்தே செய்கின்றனர். இரட்டைச் சுமையைச் சுமக்கவைக்கப்படுகிற பெண்களுக்கு இந்தத் தொகை மறுக்கப்படுவது நியாயமல்ல.

பெண்களுக்குப் பணப்பயன் வழங்கி அவர்களை வீட்டுக்குள் முடக்குவதைவிடச் சமூக உழைப்பிலும் பொது வேலைகளிலும் அவர்கள் ஈடுபடும் நிலையை ஏற்படுத்தித் தருவதே பெண் விடுதலைக்கான முதல்படி. முதல்கட்டமாக வீட்டுவேலைகளைக் குடும்ப உறுப்பினர்களும் அரசும் சமூகமும் பகிர்ந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பராமரிப்பு என்பது பெண்களின் வேலையாகக் கருதப்பட்டது. ஆனால், அரசு நடத்தும் அங்கன்வாடிகள் அந்த வேலையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டதை மறுக்க முடியாது. இந்த அங்கன்வாடிகள் மேலும் செழுமைப்படுத்தப்பட்டால், குழந்தைகளை இங்கே பாதுகாப்பாக விட்டுவிட்டுப் பெண்கள் வேலைக்குச் செல்ல முடியும்.

பணிசெய்யும் இடத்திலேயே குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற சட்டத்தை அமலாக்குவதும் நிறுவனங்கள், அரசு - சமூகத்தின் கடமைதானே? அரசு நடத்தும் மலிவு விலை உணவகம் போன்ற சமூக உணவகங்கள்மூலம், சமையலறையில் இருந்து பெண்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசம் கிடைக்கலாம். மலிவு விலை உணவகங்களை மேலும் விரிவுபடுத்தி பெண்களைச் சமைக்கும் வேலைகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும். நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுவிப்பதே பெண் விடுதலைக்கான தொடக்கப் புள்ளியாக அமையும். அதற்கான தொடக்கமாக, குடும்பத்தலைவிகளுக்கான இந்தப் பணப்பயன் அறிவிப்பை அணுகலாம்.

- தேவி, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்